காஷ்மீர் விவகாரத்திலிருந்து பாகிஸ்தான் விலகியிருப்பதே எல்லோருக்கும் நல்லது 

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்வண்ணம் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை வெளியேற்றுதல், வணிக உறவுகளை முறித்துக்கொள்ளுதல், ஆகஸ்ட் 15-ஐ கருப்பு தினமாக அனுசரித்தல் ஆகிய முடிவுகளை பாகிஸ்தான் எடுத்திருப்பது தேவையற்றது என்பதோடு, காஷ்மீர் மக்களுக்குத் தன்னாலான சிக்கல்களைக் கொடுக்கும் போக்கை அது தொடரும் அணுகுமுறையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீருக்குச் சிறப்புரிமை அளிக்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது குறித்தும், ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்தும் இந்தியக் குடிமைச் சமூகம் இரு பிரிவாக விமர்சிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், ‘இது இந்தியாவின் உள்விவகாரம்’ என்று இந்திய வெளியுறவுத் துறை சரியாகச் சொன்னதுபோல் இந்த விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. மேலும், காஷ்மீர் மக்கள் ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடத் தேவையற்ற கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்புச் சூழலுக்குள் அகப்பட்டிருக்கவும் இன்றைய நெருக்கடியான நிலை அவர்களைச் சூழவும் கூட பாகிஸ்தான் அரசின் தேவையற்ற தலையீடும், அது காஷ்மீரை முன்வைத்து நடத்திக்கொண்டிருக்கும் அசிங்கமான அரசியலும்தான் முக்கியமான காரணம்.

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர்களை ‘பொம்மைகள்’ என்றே இதுவரை பாகிஸ்தான் விமர்சித்துவந்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் அரசையும் அது அங்கீகரித்ததே இல்லை. இந்தச் சூழலில் சட்டப் பிரிவு 370 காஷ்மீர் மக்களின் நலனோடு தொடர்புடையது என்பதை பாகிஸ்தான் முதன்முறையாக இதன் மூலம் ஒப்புக்கொண்டிருப்பதும், அது பறிபோய்விட்டதே என்று பதறுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

இனி வரும் நாட்களில் ஐநாவில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பவும், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் ஆதரவைத் திரட்டி நட்புறவு நாடுகளுக்குத் தூது அனுப்பவும் திட்டமிடலாம். கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் பொருளாதாரச் செல்வாக்கு மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்சினையாக ஆக்க பாகிஸ்தான் முயலும் என்றால், அதை எதிர்கொள்ள மிகச் சரியான இடத்தில் இந்தியா தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கிறது. ஆக, இப்படியான நகர்வுகள் ஒவ்வொன்றும் இந்தியா - பாகிஸ்தான் உறவை மேலும் பாதிக்குமே தவிர, எந்த வகையிலும் பாகிஸ்தானின் நோக்கங்களுக்குப் பலன் கிடைக்கப்போவதில்லை.

இனியேனும் காஷ்மீர் விவகாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன்னுடைய நாட்டு முன்னேற்றத்தில் பாகிஸ்தான் அரசு கவனம் செலுத்துவது உண்மையில் பாகிஸ்தான் மக்களுக்கு மட்டும் அல்லாமல், காஷ்மீர் மக்களுக்கும் செய்யும் நன்மையாக அமையும். ஒருவகையில் பயங்கரவாதத்திலிருந்து அது விடுபடவும் இது வழிவகுக்கும். வெளியுறவு என்பது இரு நாடுகளுக்கு இடையிலான தகவல் தொடர்புகள் திறந்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வாசல்; அதை ஒரு நாடு மூட முற்படுவதானது தன்னைத்தானே ஒடுக்கிக்கொள்வதுதான். பாகிஸ்தான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்