கூடையே அழுகியிருக்கிறது

By செய்திப்பிரிவு

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான முகேஷ் சிங்கின் சமீபத்திய பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு அவர்களே காரணம் என்ற அர்த்தத்தில் முகேஷ் சிங் பேசியிருப்பது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முகேஷ் சிங்கின் குரல் தனிக் குரல் அல்ல. மேற்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர் எம்.எல். சர்மா சொன்னதைக் கேளுங்கள்:

“என் தங்கையோ பெண்ணோ திருமணத்துக்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் என் குடும்பத்தினர் அத்தனை பேரின் முன்னிலையிலும் நான் அவள் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருப்பேன்.”

பாலியல் வல்லுறவு என்பது அடிப்படையில் ஒரு மாபெரும் குற்றம், மனித உரிமை மீறல், நாகரிகத்துக்குச் சற்றும் தொடர்பற்ற இழிசெயல் என்னும் உணர்வு சிறிதளவேனும் இருந்திருந்தால் இத்தகைய பேச்சுக்கள் வராது. பெண்களின் நடை, உடை, பாவனைகளும் அவர்களுக்கு எதிரான குற்றங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடை யவை என்னும் வாதம் எந்த வகையில் எழுப்பப்பட்டாலும் அதன் ஊற்றுக்கண் ஒன்றுதான்: ஒரு பெண் கட்டுப்படுத்தப்பட்டவளாக, ஆண்மையச் சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்பவளாக இருப்பதுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்னும் பார்வைதான் அது. இந்தக் கட்டுப்பாட்டை எந்த வகையிலேனும் ஏற்க மறுக்கும் பெண் தனக்கு எதிரான குற்றத்தைத் தானே தேடிக்கொள்கிறாள் என்பதே இதன் விபரீதப் பொருள். இந்த அடிப்படையில் பார்த்தால் நடந்தது குற்றமே இல்லை! தவிர்க்க முடியாத விபத்து! அதைத் தூண்டியவள் பெண்!

ஒருசில ஆண்கள் மட்டுமே இப்படி என்று நினைத்தால் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லீ உத்வின் எடுத்திருக்கும் ‘இண்டியா’ஸ் டாட்டர்’ (இந்தியாவின் மகள்) என்னும் ஆவணப்படம் அதிர்ச்சிகரமான பல செய்திகளைப் பதிவுசெய்கிறது. பெண்கள் மீதான மரியாதை இல்லாமை என்னும் நோயே இந்தப் போக்குக்குக் காரணம் என்கிறார் உத்வின். “சில பழங்கள் மட்டுமல்ல, கூடையே அழுகியிருக்கிறது” என்பதே பலரையும் சந்தித்து விரிவாக உரையாடிய இவரது கருத்து. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்துக்குமே பொருந்தும்.

கூடையை எப்படிச் சுத்தம் செய்யப் போகிறோம்? பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாடு என்று சொல்லிக்கொண்டே அவர்களை அடக்குமுறைக்கும் வல்லுறவுக்கும் உள்ளாக்கும் மனநோயை எப்படித் தீர்க்கப் போகிறோம்? ஒரு பெண் எப்படிப்பட்டவளாக இருந்தாலும், எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் அவள்மீது வன்முறையைப் பிரயோகிக்கும் உரிமை யாருக்கும் எதற்காகவும் கிடையாது என் னும் எளிய உண்மையை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? பெண்களை மனித இனத்தின் ஒரு பகுதியாக, சமமான மரியாதைக்கும் சுதந்திரத்துக்கும் வாய்ப்புகளுக்கும் உரியவர்களாகப் பார்க்கும் பக்குவம் எப்போது வரப்போகிறது? சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் நம் நாட்டில் ஆண்கள் திருந்தும்வரை பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

எங்கிருந்து தொடங்குவது? வீடுகளில் தொடங்க வேண்டும். கைக்குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்க வேண்டும். பள்ளிகளில் கற்பிக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சம உரிமை கொண்ட மனித உயிர்கள் என்னும் எளிய உண்மையை எப்படியாவது ஆண்களுக்குக் கற்றுத் தந்துதான் ஆக வேண்டும். இல்லையேல் இந்தக் கூடையில் போடப்படும் எந்தப் பழமும் தேறப் போவதில்லை. இது நடக்கும்வரை நாகரிகம், பண்பாடு ஆகிய சொற்களை நாம் உரிமையோடு உச்சரிக்காமலாவது இருக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்