சென் காட்டும் களம்

By செய்திப்பிரிவு

இந்திய மக்கள் போராட வேண்டிய அடுத்த களத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் பொருளாதார மேதை அமர்த்திய சென்: மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமைச் சட்டம்.

இந்தியாவில் மருத்துவமனைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. 1986-க்கும் 2004-க்கும் இடையே மூன்று மடங்காக ஆகியிருக்கிறது. 1993-94-க்கும் 2006-2007-க்கும் இடைப்பட்ட காலத்தில் மருந்துகளின் விலை மும்மடங்கு உயர்ந்திருக்கிறது.

மருத்துவத்துக்காகச் செய்யப்படும் செலவில் 78 சதவீதத்தை மக்களே எதிர்கொள்கிறார்கள். இதுவே இலங்கையில் 53%, தாய்லாந்தில் 31%, பூடானில் 29%, மாலத்தீவில் 14% தான். மருத்துவப் பராமரிப்புக்காக மக்கள் செய்யும் ஒட்டுமொத்தச் செலவில் இந்திய அரசின் பங்களிப்பு என்பது சர்வதேச அளவில் மிகக் குறைந்த மூன்று பங்களிப்புகளுள் ஒன்று; ஹைதியும் சியாரா லியோனும் பிற இரண்டு நாடுகள். நம்மைப் போல பெரும் மக்கள்தொகை உடைய சீனாவுடன் ஒப்பிட்டால், சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது.

மருத்துவத்திலிருந்து தன் பொறுப்புகளை அரசு கைகழுவும் சூழலில், தனியார் மருத்துவமனைகளோ தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஆட்டம்போட ஆரம்பிக்கின்றன. நோயாளிகளின் உரிமைகள் பெருமருத்துவமனைகளின் குப்பைகளோடு வீசப்படுகின்றன.

இதன் விளைவு, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 3.9 கோடி மக்கள் மோசமான உடல்நிலை காரணமாக வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 2004-ல் வறுமை காரணமாக இந்தியக் கிராமங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 30%, இதுவே 1995-ல்15%. அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்காக கிராமப்புறங்களில் 47% பேர், நகர்ப்புறங்களில் 31% பேர் கடன் வாங்குகிறார்கள் அல்லது உடைமைகளை விற்கிறார்கள்.

இத்தகைய சூழலில், “வளர்ச்சி வீதம் என்பதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது நம் நாடு. உயர் வளர்ச்சி வீதம் நீண்ட காலம் நீடிப்பதற்கு ஆரோக்கியமான, படிப்பறிவு மிக்க ஒரு சமூகத்தைவிட வேறெதுவும் காரணமாகிவிட முடியாது. மருத்துவத்துக்கும் கல்விக்கும் எந்த அளவுக்குச் செலவுசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சியின் அடித்தளம் உறுதியாக அமைகிறது. பணக்கார நாடுகளில் அநேகமாக அமெரிக்காவைத் தவிர, எல்லா நாடுகளிலும் மருத்துவப் பராமரிப்பைப் பெறும் உரிமை என்பதை மக்களின் மிக அடிப்படையான உரிமையாக அவர்கள் கருதிவந்திருக்கிறார்கள். இதை ஒரு சட்டத்தின் மூலம் கொண்டுவர வேண்டும் என்ற நிலையே நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது” என்கிற சென்னின் வார்த்தைகள் சாதாரணமானவை அல்ல.

சட்டங்களுக்கு நம்முடைய அரசு எவ்வளவு மதிப்பை அளிக்கிறது; சட்டங்கள் தீர்வாகிவிடுமா என்ற கேள்வி நியாயமானது. ஆனால், தார்மீகப் பொறுப்பை உணராமல் அடிப்படைக் கடமைகளையே தட்டிக்கழிக்கும் ஓர் அரசிடம் சட்டங்கள் வழியாகத்தானே சாமானிய மக்கள் பேச முடியும்? சட்டங்கள் ஆரம்பப் புள்ளியாகட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

30 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்