புதிய அத்தியாயத்தை எழுதட்டும் ஒபாமா வருகை!

By செய்திப்பிரிவு

இந்தியா குடியரசாகி 64 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒருவர் வருகிறார் என்பது நிச்சயம் மகிழ்ச்சியான விஷயம்தான். பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி இது.

உலக வல்லரசு நாடுகளில் தலையாயது மட்டுமல்ல; நெடிய ஜனநாயகப் பாரம்பரியம் உள்ள நாடும் அமெரிக்காதான். பல்வேறு மொழி பேசும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் குடியேறி, புதிய நாட்டை உண்டாக்கி, அதன் மீது அளப்பரிய பற்றுவைத்து உருவாக்கிய உலக சமுதாயக் கலவைதான் அமெரிக்கா. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும் சர்வதேச உறவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது அமெரிக்கா. அணி சாரா இயக்கத்தின் முன்னோடி நாடாக இந்தியா இருந்தாலும், அன்றைய சோவியத் தலைவர்களையும் அதன் பிறகு ரஷ்ய நாட்டின் தலைவர்களையும் அமெரிக்கா தவிர்த்த பிற நாட்டுத் தலைவர்களையும் மட்டுமே நம் நாட்டு தேசிய தினங்களுக்கு முக்கிய விருந்தினர்களாக அழைத்திருக்கிறோம். பனிப்போர் காலகட்டத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா பக்கம் நாம் சாய்ந்து, இப்போது அதன் நெருக்கமான கூட்டாளிகளில் ஒருவராகிவிட்டோம்.

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் ஈடுபட்ட முஜாஹிதீன்களையும் பிறகு தலிபான்களையும் அமெரிக்காதான் ஆதரித்தது. கார்கில் போரின்போதுகூட இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க அமெரிக்கா முன்வரவில்லை. இப்போது சக்கரம் சுற்றி எதிர்த் திசைக்கு வந்துவிட்டது.

இந்தியாவில் பிறந்த 30 லட்சம் பேர் இப்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்திய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் அங்கு படிக்கின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் அமெரிக்காவுடனான வர்த்தக உறவு 1,000% அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் ராணுவத் தேவையில் 50%-க்கு மேல் அமெரிக்காவிடமிருந்து செய்யப்படும் இறக்குமதிகள் மூலம்தான் பூர்த்திசெய்யப்படுகிறது. இவ்வளவு நெருக்கமான இரண்டு நாடுகள் வெளியுறவுத் துறையைப் பொறுத்தவரை குழப்பமான ஒரு உறவைக் கொண்டிருப்பது நல்லதல்ல. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சியில் மேலும் நெருக்கமான இரு நாடுகள் இடையேயான உறவு ராணுவப் பயிற்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்றவற்றிலும் பிணைப்பை உண்டாக்கியது. ஆனாலும், இதுவரை அமெரிக்க அதிபர் ஒருவரை நம்முடைய குடியரசு விழாவுக்கு அழைத்ததே இல்லை என்பது வியப்பைத் தருகிறது. இப்போது இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒபாமா சம்மதம் தெரிவித்திருப்பது நன்னம்பிக்கை அடிப்படையிலானது மட்டுமல்ல, புவியரசியல் சூழலில் சாமர்த்தியமானதும்கூட.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு, மோடிக்கு ‘விசா’ தர மாட்டோம் என்று அறிவித்தது அமெரிக்கா. அந்த நாட்டுக்குச் சமீபத்தில் சென்ற மோடி, அமெரிக்கர்கள் இந்திய விமான நிலையங்களுக்கு வந்து அங்கேயே ‘விசா’ பெற்றுக்கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதித்திருப்பது புத்திசாலித்தனமான காய்நகர்த்தல். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் நெருக்கமாக்கும். ராஜதந்திரப் பேரங்களில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒருசேர நெருக்கடி கொடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும். சர்வதேசக் களத்தை நோக்கிய மோடியின் பயணத்தில் அவருடைய அந்தஸ்தை மேலும் பல படி முன்னேற்றும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

20 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்