போராட்டக்காரர்களும் குற்றவாளிகளும் ஒன்றா?

By செய்திப்பிரிவு

குண்டர் சட்டம் என்று அழைக்கப்படும் தடுப்புக் காவல் சட்டம், தவறாகப் பயன்படுத்து வதற்காகவே இயற்றப்பட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறது காவல் துறை.

சில குற்றவாளிகள் பயங்கரமான குற்றச் செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவதால், பொது அமைதியைப் பராமரிக்க அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க இயற்றப்பட்ட சட்டம் இது. அசாதாரண சூழலில் நிலைமைக்கு ஏற்ப, விருப்ப அதிகாரத்தின் கீழ் ஒருவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க இச்சட்டம் இயற்றப்பட்டது. விசாரணை எதுவுமின்றி அதிக பட்சம் ஓராண்டுகூட சிறையில் அடைத்து வைக்க இச்சட்டம் இடம் தருகிறது. இச்சட்டத்தைச் சாதாரண சம்பவங் களுக்குக்கூடப் பயன்படுத்துவது ஆபத்தான போக்காகும்.

தெலங்கானாவில் போலி மிளகாய் விதைகளை விற்ற ஒருவர் இச்சட்டப்படி கைதுசெய்யப்பட்டுள்ளார். “வழக்கமான சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற நடைமுறைகள் காரணமாகக் கால தாமதம் ஆகும், அத்துடன் அவருக்கு அச்சம் ஏற்படாது, அவர் பிணையில் வெளிவந்து மீண்டும் பல பேரைத் தொடர்ந்து இப்படியே ஏமாற்றுவார் என்பதால் - பொதுநன்மையைக் கருதி - குண்டர் சட்டப்படி அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தோம்” என்றது காவல் துறை. “சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இது ஒரு உதாரணம்” என்று இதைக் கண்டித்திருக்கிறது நீதிமன்றம். தமிழகக் காவல் துறையோ தெலங்கானா காவல் துறைக்கே சவால் விடும் நிலையில் நடந்துகொள்கிறது. ‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் திருமுருகன் காந்தி, அவருடைய சகாக்கள் டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்ட நால்வர், அடுத்து பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தைப் பிரயோகப்படுத்தியிருக்கிறது தமிழகக் காவல் துறை. தமிழர்கள் பிரச்சினைகளை குறிப்பாக இலங்கைத் தமிழர் நலன் உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தித் தொடர்ந்து பொதுத்தளத்தில் பேசிவருபவர்கள் இவர்கள்.

பிரதான எதிர்க்கட்சிகள் கைகளிலிருந்து கை மாறிவரும் தமிழகப் போராட்டக் களத்தை மக்கள் இயக்கங்களும் சிறு குழுக்களுமே துடிப்போடு முன்னின்று இந்நாளில் இயக்கிவருகின்றன. அவர்களை அச்சுறுத்தி வாய் மூடச்செய்யும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே காவல் துறையின் இந்நடவடிக்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. முன்னதாக, ‘மே 17’ இயக்கத்தினர் இலங்கைப் போரில் இறந்தவர்களுக்காக மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதே ஒரு நல்ல விஷயம் அல்ல. மக்கள் தங்கள் கோரிக்கைகளை, உணர்வுகளை அரசுக்கு வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்றுதான் போராட்டம். குற்றவாளிகளைப் போலப் போராட்டக்காரர்களைப் பார்ப்பது காலனிய கண்ணோட்டம். இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியான அணுகுமுறை சகிக்க முடியாதது. தமிழகக் காவல் துறை உடனடியாக இந்நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் ஏதேனும் தவறிழைத்திருந்தால் அதைத் தனித்து வழக்கமான வழக்குப் பிரிவுகளின் கீழ் கையாள வேண்டும். போராட்டக்காரர்களைக் குற்றவாளிகள் ஆக்கும் குற்றத்தை அரசு முன்னின்று செய்யக் கூடாது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

45 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்