தோல்வியை ஒப்புக்கொள்வதே மீட்சிக்கான வழி!

By செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட உயர் மதிப்புத் தாள்களில் 99.3% மீண்டும் வங்கிகளுக்கே திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கை, அந்நடவடிக்கை அவசர அவசரமாக எடுக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. 2016 நவம்பர் 8 நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதற்குக் கணக்குக் காட்ட முடியாமல் தங்களிடமே வைத்துக் கொண்டுவிடுவார்கள், கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்தலாம் என்றெல்லாம் காரணங்களை அடுக்கியது அரசு. ஆனால், பணப் பயன்களைவிட, பண இழப்பும் மன உளைச்சல்களும்தான் அதிகம் என்று தெரியவருகிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னால் மக்களிடம் இருந்த ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி. அதில் ரூ.15.28 லட்சம் கோடி திரும்பிவந்துவிட்டது என்கிறது ரிசர்வ் வங்கியின் அறிக்கை. அப்படியென்றால், இந்நடவடிக்கை சாதித்தது என்ன? ஏராளமானவர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். தொழில் துறை, சேவைத் துறை, வேளாண் துறை உள்ளிட்டவை பாதிப்படைந்தன. ஏராளமான சிறு குறு தொழில்கள் மூடப்பட்டன. ஜிடிபி 1% அளவுக்குக் குறைந்தது. ரூ.1,000 முக மதிப்புள்ள நோட்டுக்குப் பதிலாக ரூ.2,000 முக மதிப்புள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டதால் சில்லறை மாற்றவும், பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தவும் மக்கள் இன்றுவரை சிரமப்படுகின்றனர். இவ்வளவுக்குப் பிறகும் இந்த நடவடிக்கை தோல்வி என்று மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை.

புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.2,000 கள்ளநோட்டுகளும் புழக்கத்துக்கு வந்துள்ளன என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ‘இந்நடவடிக்கையால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களும் வரி செலுத்துபவர்களும் அதிகரித்துள்ளனர்’ என்கிறது அரசு. பணமில்லா பரிவர்த்தனை சிறிது அதிகரித்திருக்கிறது. ரொக்கமாகச் சேமிப்பதும் அதிகரித்துவருகிறது. வேறு நடவடிக்கைகள் மூலமும் இதைச் செய்திருக்க முடியுமே? பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கை வெளிவரவிடாமல் மத்திய அரசு தடுப்பதும் மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

எல்லாக் கொள்கை முடிவுகளும் வெற்றிகரமாக முடிவதில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதன் மூலமாகவே அடுத்த முறை இத்தகைய தவறுகள் நிகழாமல் உறுதிசெய்ய முடியும். சின்ன பிழை அல்ல இது. கோடிக்கணக்கான மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. கடந்த காலத்தில், நிலக்கரி உள்ளிட்ட கனிமவளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கிய விதத்தில் இருந்த தவறுகளை அடையாளம் கண்டதால்தான், பொது ஏலம் மூலம் அனுமதித்து வருவாயைப் பலமடங்கு உயர்த்த முடிந்திருக்கிறது. ஆக, ஆட்சி நிர்வாகம் தனிப்பட்ட நபர்களின் கௌரவப் பிரச்சினை அல்ல. ஓட்டு அரசியலுக்காகப் பொருளாதாரத்துக்குத் திடீர் திடீரென அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை எடுப்பது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கே ஆபத்தை விளைவித்துவிடும் என்பதை இப்போதாவது உணர வேண்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்