கற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை

By செய்திப்பிரிவு

இந்தியாவை பாஜக எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, அதன் தொலைநோக்குப் பார்வை என்னவாக இருக்கிறது என்பதை பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது. இரு முக்கியக் காரணங்களுக்காக பாஜகவின் அறிக்கை ஆழ்ந்த பரிசீலனைக்கு உரியதாக இருக்கிறது. முதலாவதாக, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த ஆட்சி எப்படி இருந்தது என்பதன் பின்னணியில் இப்போதைய வாக்குறுதிகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அடுத்ததாக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் பாஜகவின் அறிக்கையும் எப்படிப்பட்டவை என்று ஒப்பிட்டுப் பார்ப்பதும் அவசியமாகிறது.

மக்களுக்கு நல்வாழ்வு அளிப்பது, பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வது, பாதுகாப்பை வலுப்படுத்துவது போன்றவற்றில் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கும் பாஜகவின் அறிக்கைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. தேசியம் தொடர்பான அதன் மூன்று அம்ச செயல்திட்டம், ஏழைகளின் நல்வாழ்வு, சிறந்த அரசு நிர்வாகம் போன்றவற்றை இந்தத் தேர்தல் அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்தியாவை ஒற்றைக் கலாச்சார நாடாக்கிவிடத் துடிக்கும் பாஜகவின் முயற்சி கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது.

2009, 2014-ல் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையைப் போல இதில் கலாச்சாரச் செயல்திட்டம் தொடர்பாக எதையும் விரிவாகத் தெரிவிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மிகவும் கடுமையான அணுகுமுறையை முன்வைக்கிறது. ‘இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் இனி வேடிக்கை பார்க்க மாட்டோம், திருப்பித் தாக்குவோம்’ என்று கூறுவதன் மூலம் தனது தேசியவாத நிலையை மேலும் கடுமையாக்கியிருக்கிறது. கூட்டணி அமைத்திருந்தாலும் தனது கட்சிக்கு மட்டும் பெரும்பான்மையைப் பெற்றுவிட வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருக்கிறது.

அயோத்தியில் ராமருக்குக் கோயில், அனைத்து மாநிலங்களிலும் அன்னியர் ஊடுருவிவிடாமல் தடுக்கத் தேசியக் குடிமக்கள் பதிவேடு, பக்கத்து நாடுகளில் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்குப் புகலிடத்துடன் இந்தியக் குடியுரிமை ஆகியவற்றையும் அளிக்கத் தயார் என்கிறது. இந்துத்துவச் செயல்திட்டத்தில் மேலும் பல மடங்கு முன்னேறியிருக்கிறது பாஜக. மற்றெல்லாவற்றையும்விட மோடி மீதான முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் பாஜக என்ற கட்சியின் பெயர் 20 முறையும் மோடியின் பெயர் 32 முறையும் இடம்பெற்றுள்ளன. ஆனால், மோடியின் பணமதிப்புநீக்க நடவடிக்கை குறித்து ஒரு வரிகூட இல்லை. கடந்த தேர்தலில் அது பிரதானமாக முன்னெடுத்த - ‘அச்சே தின் - நல்ல நாள்’ என்னவாயிற்று என்றும் தெரியவில்லை.

முந்தைய தேர்தலில் வளர்ச்சி என்ற கோஷத்தை முன்வைத்த பாஜகவுக்கு அதன் சாத்தியப்பாடுகளைத் தாண்டி சில பெரிய கற்பனைகளேனும் இருந்தது. அதுவும் வற்றிக்கொண்டிருப்பதை இந்தத் தேர்தல் அறிக்கை காட்டுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்