ஏமனில் போர் ஓய வேண்டும்!

By செய்திப்பிரிவு

ஏமன் நாட்டின் தென் பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 45 பேர் இறந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இறந்தவர்களில் 30 பேர், 15 வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப் போர், ஏமனுக்கு மட்டுமின்றி மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பெருந்தீங்கினை விளைவிக்கக்கூடியது. அப்பாவி மக்கள் இறப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது.

ஏமன் தலைநகர் சானாவைக் கைப்பற்றிய ஹௌதி புரட்சிக்காரர்கள் பெரும்பாலான நிலப்பரப்பைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். ஏமன் அதிபர் அப்துரப்பூ மன்சூர் ஹாடி, சவுதிக்குத் தப்பியோடிவிட்டார். அவர் அங்கே தலைநகர் ரியாதில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஆனால், ராணுவமோ சவுதி தலைமையிலான படைகளின் ஆதரவுடன் போர் நடத்துகிறது. ஹௌதிகளுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. இந்தப் போரினால் 2.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏமன் பாழாகிக்கொண்டிருக்கிறது. 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு, குடிநீரின்றி பட்டினியால் சாகும் நிலையில் இருக்கின்றனர். சர்வதேச அமைப்புகளிடமிருந்து வரும் உணவு, குடிநீர், மருந்து-மாத்திரைகள் போன்றவை மக்களைச் சென்றுசேராமல் ராணுவம் தடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, காலரா நோய்க்கு 2,000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். நோய் பரவும் வேகம் கவலையளிக்கிறது.

ஒரு வாரத்துக்கு முன்னால் ஹொடைடா என்ற துறைமுக நகரம் மீதும் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 30 பேர் இறந்தனர். ‘அப்பாவிகளை நாங்கள் தாக்கவில்லை, ஹௌதிகள்தான் குழந்தைகளையும் பொதுமக்களையும் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்’ என்று சவுதி அரசு கூறுகிறது. சவுதி அரசுக்கு அமெரிக்காவும் ஆதரவு காட்டுகிறது. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்ற அக்கறையில்லாமல் பிற மேற்கத்திய நாடுகள் இருக்கின்றன.

ஏமனில் அரசு நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. அந்நாட்டின் அடித்தளக் கட்டமைப்பை சவுதி தலைமையிலான பன்னாட்டுப் படைகள் குறிவைத்துத் தாக்கி நாசப்படுத்துகின்றன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், துறைமுகங்கள், அரசு நிர்வாகக் கட்டிடங்கள், பாலங்கள் தாக்கப்படுகின்றன. ஏமன் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் தாங்கொணாத இன்னல்கள் குறித்து சவுதி கவலைப்படவில்லை. ஏமன் அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் இருக்கிறது. அந்த அரசுக்கு ஆதரவாகத்தான் நாங்கள் போரிடுகிறோம் என்றும் கூறுகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் கடும் தாக்குதலை ஈரானின் ராணுவ, நிதி உதவியுடன் ஹௌதி புரட்சிக்காரர்கள் சமாளித்துவருகின்றனர்.

ஏமனில் அமைதி ஏற்பட அனைத்துத் தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதற்கு முதல் படியாகத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஏமன் மக்களுக்குத் தேவைப்படும் உணவு, குடிநீர், மருந்து-மாத்திரைகள் உடனடியாகக் கொண்டுசெல்லப்பட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்