நம்பிக்கையில்லா தீர்மானம் உணர்த்தும் சமிக்ஞைகள்

By செய்திப்பிரிவு

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. இது வெற்றி பெறாது என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கும் தெரியும், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸுக்கும் தெரியும். மோடி அரசின் நான்கு ஆண்டு காலத் தவறுகளையும், பாதிப்புகளையும் மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்ல ஒரு வாய்ப்பாகக் கருதியே இந்த உத்தியை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன. அந்த வகையில் ஓரளவுக்கு அவை வென்றிருக்கின்றன என்று சொல்லலாம்.

தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் கூட்டணி அமையவும், அதற்குத் தலைமை தாங்கவும் - ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் தயார் என்பதை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருக்கிறார். அவையில் பாஜக அரசின் தோல்விகள் என்று பட்டியலிட்டு, அவர் முன்னெடுத்த விவகாரங்களும் பேசிய விதமும் அவரை அடுத்தகட்ட நிலைக்குக் கொண்டுசென்றுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். வெறுப்புக்கு எதிராக உரையாற்றிய கையோடு, பிரதமர் மோடியின் இருக்கைக்குச் சென்று அவரைக் கட்டியணைத்தது நாடு முழுவதும் பேசப்பட்டதோடு வரலாற்றில் பொறிக்கப்பட்டதாகவும் மாறிவிட்டது. அதேசமயம்,  எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்குவதைப் பழைய பேரரசு மனநிலையிலேயே அவர் செய்ய முடியாது என்பதையும் வாக்கெடுப்பு அவருக்கு உணர்த்தியிருக்கிறது. பாஜகவைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சிகளையும்கூட காங்கிரஸால் ஒரு குடைக்குக் கீழே கொண்டுவர முடியவில்லை.

எதிர்க் கட்சிகளில் முக்கியமானவையும் ஆளும் கட்சிகளுமான பிஜு ஜனதா தள், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகியவை பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்மானத்தை ஆதரிக்காமல் விலகி நின்றதை உதாரணமாகச் சொல்லலாம். ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸை இன்னமும் தனக்குப் போட்டியாளராகவே கருதுகிறது. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி, ‘எதிர்க்கட்சி முன்னணி’ என்று கூறாமல், ‘கூட்டாட்சி முன்னணி’ என்கிறார். அது மாநிலக் கட்சிகளைக் கொண்டது என்கிறார். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் முக்கியப் பங்கை எதிர்பார்க்கின்றன. பிஹாரில் எதிர்க்கட்சிக் கூட்டணியை லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தமிழ்நாட்டில் திமுகவும் தீர்மானிக்கும். ஆக, ஒரு பெரிய பேரத்துக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும். நிறைய தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துதான் அது வலிய தலைமை என்ற நிலைக்கு நகர வேண்டும்.

பாஜகவைப் பொறுத்த அளவில், வாக்கெடுப்பு பெரிய வெற்றி என்றாலும் அது கொண்டாட ஏதுமில்லை. கூட்டணிக்குள்ளேயே விரிசல்கள் விழுவதற்கு சிவசேனை வாக்கெடுப்பைப் புறக்கணித்ததை உதாரணமாகச் சொல்லலாம். 2014 வார்த்தைகளுடன் 2019 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவால் முடியாது என்பதையும் இன்றைய சூழல்கள் உணர்த்த ஆரம்பித்துவிட்டன. ஒருவகையில் தேர்தல் செயல்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டன!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

18 mins ago

வாழ்வியல்

9 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்