கேடலோனியா விவகாரம்: விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் ஸ்பெயின் அரசு!

By செய்திப்பிரிவு

ஸ்

பெயின் நாட்டின் கேடலோனியா பிரதேசத்து மக்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அக்டோபர் 1-ல் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் உறுதியாகத் தெரிவித்திருந்த நிலையில், ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறியிருக்கிறார் கேடலோனியா பிரதேச அதிபர் கார்லஸ் பியூஜ்டிமான்ட். ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேடலோனியா விடுதலை பெறுவதற்கே பாடுபடுவேன் என்று பியூஜ்டிமான்ட் பிரதேச நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை அறிவித்தார். அதே சமயம், ஸ்பெயின் அரசுடன் பேசத் தயார் என்றும் விடுதலை அறிவிப்பைச் சில காலங்களுக்கு ஒத்திவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருப்பதை, தோழமைக் கட்சிக்காரர்கள் ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்றும் பியூஜ்டிமான்ட் கோரியிருக்கிறார்.

மறுபுறம், கேடலோனியாவின் விடுதலை தொடர்பாகப் பேசப் போவதில்லை என்று பிடிவாதம் காட்டும் ரஜோய், பிரிவினை கோரியதற்காக அந்தப் பிரதேசத்து அரசியல் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் பேசிவருகிறார். ஸ்பெயின் அரசியல் சட்டத்தின் 155-வது பிரிவு அளிக்கும் அதிகாரப்படி பிரதேச அரசைக் கலைத்துவிட்டு, பிரதேச நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொள்ளத் தயார் என்றும் கூறியிருக்கிறார்.

கேடலோனியா ஏன் சுதந்திரம் கேட்கிறது, அந்தப் பிரதேசத்து மக்களுடைய கோரிக்கைகளில் என்ன நியாயம் இருக்கிறது, அவர்களுடைய மனக் குறைகளைப் போக்க என்ன செய்யலாம் என்றெல்லாம் ஸ்பெயின் அதிபர் கருத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. வாக்கெடுப்புக்கு முன்னதாகவே கேடலோனியர்களை அழைத்துப் பேசுவதை விட்டுவிட்டு, வாக்களிப்பு நாளன்று தேசியபோலீஸ் படையை ஏவி நிராயுதபாணிகளான மக்களை அடித்ததும் அச்சுறுத்தியதும் கண்டிக்கப்பட வேண்டிய செயல்.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பியூஜ்டிமான்ட் அறிவித்திருக்கும் நிலையில், ஸ்பெயின் அரசு அவருடன் பேச மறுப்பது சரியல்ல எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை கேடலோனியா நீங்கலான பிற பகுதி மக்கள் விரும்பவில்லை என்பதுடன், அரசியல் சட்டத்திலேயே இப்படிப் பிரிந்து செல்ல வழியில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையின் மூலம்தான் இதற்கெல்லாம் தீர்வை எட்ட முடியும். ஏற்கெனவே அளித்திருந்த சுயாட்சி உரிமைகளையும் பறித்துக்கொள்வேன் என்று ஸ்பெயின் அரசு பேசிவருவதும் விமர்சனத்துக்குரியது. இது கேடலோனியர்களைப் பிரிவினைக்கு ஆதரவாகத்தான் தள்ளிவிடும்.

இந்த உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடுமா என்று இப்போது கூற முடியாது. மீண்டும் ஸ்பெயினுக்கு எதிரான மக்கள் வன்முறையோ, கேடலோனியர்களுக்கு எதிரான ஸ்பெயின் அரசின் வன்முறையோ மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தனது நீண்டகால அரசியல் அனுபவத்தை ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ரஜோய் பயன்படுத்த வேண்டும். ஸ்பெயினின் முக்கிய எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட்டுகளும் தன்னை ஆதரிப்பதை அவர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பியூஜ்டிமான்டின் கரத்தை நட்புடன் பற்றிக்கொள்வதுதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 secs ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்