முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா?

By எஸ்.வி.வேணுகோபாலன்

மு

தியோர் தினமான அக்டோபர் 1 அன்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பலர் முதியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. அன்று ஒரு நாள் மட்டுமாவது இளம் தலைமுறையினர் பலருக்கு, முதியவர்கள் பற்றிய நினைவும் அக்கறையும் வெளிப்பட்டது நல்ல விஷயம்தான். மற்ற நாட்களில்? இளம்வயதில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். ரயில்வே சந்திப்பு மாதிரி அமைந்துவிட்ட அவளது வீட்டில் அதிகம் மூத்த தலைமுறையினரின் வருகையை, அவர்தம் பாடுகளை, பெருமிதங்களை, புகார்களை நேரடியாக உணரும் வாய்ப்பு அந்தப் பருவத்திலேயே எனக்கு வாய்த்தது. அப்போதெல்லாம் பத்தாணிப் பாட்டி அடிக்கடி சொல்லும் பழமொழி, "பழுத்தோலையைப் பார்த்துச் சிரிச்சதாம் குருத்தோலை" என்பது. பின்னர் கேட்டறிந்து புரிந்து கொண்டேன், தனக்கும் ஒரு முதுமை வரும் என்பதறியாத இளமையின் ஏளனப் போக்கை அது பகடி செய்கிறது என்று.

மருகும் மனங்கள்

உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, 121 கோடி மக்கள் தொகையில் 8.6% அதாவது 10.39 கோடி முதியோர்! அதன் பொருள் குடிமக்கள் மிகவும் பரவசத்தோடும், மகிழ்ச்சியோடும் தங்களது ஆயுளை நீட்டித்துக் கொண்டு வாழ்கின்றனர் என்பதல்ல. முதியவர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இளம் தலைமுறையினர் பொருட்படுத்துவதுகூட கிடையாது. “நிம்மதியாக வாழத்தான் முடியவில்லை, நிம்மதியாகக் கண்ணை மூடவாவது முடியுதா?” என்ற மனதுக்குள் மருகும் பல முதியவர்களின் குரல் நம் காதுகளை எட்டுவதேயில்லை.

சமூகத் தன்மை, பொருளாதார வலு, குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட எத்தனையோ காரணிகள்தான் முதியோரின் வாழ்நிலைமைகளைத் தீர்மானிக்கிறது. உடலில் வலு இருக்கும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டும், பொருள் ஈட்டிக்கொண்டும் வாழும் முதியோர் உடல் ரீதியாகவும் சற்று தங்களை முன்னேற்ற கதியில் வைத்துக் கொள்ள முடிகிறது. அதற்கு இயலாதோர் உடல் நலனும் நலிவுற்று, உளவியலும் காயப்பட்டு வேதனையோடு கழிக்க வேண்டியிருக்கிறது.

‘வெள்ளி விழா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென்ன குறைச்சல்?’ என்று தொடங்கும் கவிஞர் வாலியின் அருமையான பாடல், ‘கடந்த காலமோ திரும்புவதில்லை, நிகழ்காலமோ விரும்புவதில்லை, எதிர்காலமோ அரும்புவதில்லை...இதுதானே அறுபதின் நிலை!’ என்று முதுமை எதிர்கொள்ளும் சவாலான காலகட்டத்தைச் செம்மையாகச் சொல்கிறது. சாலையோரம் நடந்துசெல்ல நேர்கையில், பயணங்களில், கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கும் தருணங்களில், மருத்துவமனைகளில் என அலைய நேருகையில் தம்மை மதிப்போர் யாருமற்ற தருணங்களை எதிர்கொள்ளும்போது முதியோர் அடையும் தாழ்மை உணர்ச்சியை விவரிக்க முடியாது. பேருந்துகளில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இருக்கையை மீட்டெடுக்கக் கூடப் பல நேரங்களில் கடுமையான வசைகளை வாங்கித் திரும்ப நேரும். முதியவர்கள், சொல்ல முடியாத வலிகளுடன் கால்கடுக்க நின்றிருக்க, இளைஞர்கள் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் பேருந்து இருக்கைகளில் அமர்ந்திருப்பது அன்றாடக் காட்சி.

தியாகம் செய்யப்படும் கனவுகள்

பணிக் காலத்தில் தங்களால் செய்ய முடியாத பல விஷயங்களை, பணியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்ட பிறகு செய்துகொள்ளலாம் என்று பலரும் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. தங்கள் திட்டங்களையெல்லாம் பரணில் மூட்டை கட்டிப் போட்டுவிட்டுத் தத்தம் மகன், மகள் குடும்பத்தைப் பொறுப்பெடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. உண்மையில் அதை உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கான கூடுதல் பக்குவத்தை அவர்களுக்குக் காலம் அவர்களுக்கு அருளுகிறது. தங்களது பிள்ளைகளை கவனித்துக் கொண்டதை விடக் கூடுதல் நேரமெடுத்து பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடிகிறது வயதானோர்க்கு.

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, வீட்டுக்கு அருகமை நட்பு வட்டம் குழந்தைகளுக்கு வாய்த்தது போலவே, முதியோர்க்கும் வாய்த்திருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் வேறு. இடப்பெயர்ச்சி கூட முதியோரது சொந்தத் தீர்மானத்தில் அமைவதில்லை. குடும்ப விஷயங்களில் முதியோர் கருத்து சொன்னாலும் பிரச்சினை, சொல்லாமல் நகர்ந்தாலும் பிரச்சினை. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றாலும், சில விஷயங்களில் நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். பலர் அதை வெற்றிகரமாகச் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

தாங்கள் வாழ்ந்த காலத்தின் தன்மையை அடிப்படையாக வைத்தே இன்றைய உலகைப் பார்த்து நொந்து கொள்வது பயன்படாது. முன்னேற்றமான மாற்றங்களை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது.

பரஸ்பரப் புரிதல் அவசியம்

பல்வேறு சமூக பொருளாதார நடப்புகளின் காரணமாக, ஏற்கெனவே பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் பெரும்பான்மை இல்லங்களில், தங்களுக்கான மரியாதைக்குரிய இடத்தைத் தன்னை தன்னடக்கப் புரிதல்களோடு தக்கவைத்துக்கொள்ள வேண்டியது முதியோர் பொறுப்பாகிறது. இளம் தலைமுறையினர் பலர் எதிர்பார்ப்பது இதைத்தான். அதே சமயம், ஒரு குடும்பத்தில் மூத்த அங்கத்தினர் இருப்பது ஒரு இல்லத்துக்கு எத்தனை அனுபவ ஞான வெளிச்சத்தை வழங்குகிறது என்பதை இளைய, நடுத்தர வயதினரும் உணர வேண்டி இருக்கிறது. மூத்த குடிமக்கள் பாதுகாப்பை வெறும் சட்டத்தால் உறுதி செய்துவிட முடியாது.

கண்ணியத்தோடு நடத்தப்பட்டால் போதும் என்பதுதான் தற்காலத்தில் முதியோரது குறைந்தபட்ச கோரிக்கை! கொடிய சொற்களால் தாக்கப்படுவது அவர்களுக்குத் தாளமாட்டாத வேதனை தரக்கூடியது. முதியோர் தினத்துக்கான இவ்வாண்டின் முழக்கம், "தவறாக நடத்தப்படுதல் குறித்த விழிப்புணர்வு " (Abuse awareness ) என்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகக் கல்வி புகட்டப்படாமல், அலுப்பும் சலிப்புமற்ற முறையில் முதியோர் நடத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. குருத்தோலைகள் கவனிப்பார்களாக!

- எஸ்.வி. வேணுகோபாலன்,

எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

19 mins ago

சுற்றுச்சூழல்

51 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்