காது உட்பதியக் கருவி: நல்ல திட்டம் வீணாகலாமா?

By கு.கணேசன்

இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் சுமார் 8 பேருக்குப் பிறவியிலேயே காது கேட்பதில்லை என்கிறது ‘இந்தியன் பீடியாட்ரிக்ஸ்’ எனும் மருத்துவ இதழ். நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்திருந்தால், கர்ப்பிணிக்கு ருபெல்லா, மேகநோய் போன்ற நோய்கள் ஏற்படுமானால் அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வீரியமான மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால், பிறக்கும் குழந்தைக்குப் பிறவியிலேயே காது கேட்காமல் போகலாம். அடுத்து, குறை எடையுடன் குழந்தை பிறந்திருந்தாலோ, குழந்தை பிறந்த சில மாதங்களில் அதற்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டோலோ, பிறவிக் குறைபாடுகள் காணப்பட்டாலோ குழந்தையின் உட்காது பாதிக்கப்பட்டு, கேட்கும் திறனும், அதைத் தொடர்ந்து பேச்சுத் திறனும் இல்லாமல் போகும். இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளது, காது உட்பதியக் கருவி.

எப்படிச் செயல்படுகிறது?

வயதானவர்களில் சிலர் பொருத்திக்கொள்ளும் ‘காது கேட்கும் கருவி’ நமக்குத் தெரியும். ஒருவர் பிறந்து வளர்ந்த பிறகு காதுகேளாமை ஏற்பட்டால், அப்போது அவருக்குக் காது கேட்க உதவும் கருவி இது. காது உட்பதியக் கருவி என்பது வேறு.

இந்தக் கருவியில் வெளிக்கருவி, உட்கருவி என இரண்டு பகுதிகள் உள்ளன. வெளிக்கருவியைக் காதுக்குப் பின்புறம் வெளியில் தெரிவதுபோல் பொருத்துகின்றனர். இதில் மைக்ரோபோன், ஒலிபெருக்கி, ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு, பேட்டரி ஆகியவை உள்ளன. மைக்ரோபோன் ஒலியைக் கிரகிக்கிறது. ஒலிபெருக்கி ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி, ‘டிஜிட்டல் சிக்னல்’களாக மாற்றுகிறது. இந்த சிக்னல்களை கம்பிபோல் இருக்கும் ஓர் அலைபரப்புக் கருவி (Transmitter) காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது.

உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டுமுலேட்டர் (Stimulater), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதைக் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, தையல் போட்டு மூடிவிடுகின்றனர். கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டரை உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்திவிடுகின்றனர். அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது. பிறகு, ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் சிக்னல்களை மின்சிக்னல்களாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது.

பிறந்த ஆறு மாதங்களுக்குள் குழந்தைக்குக் காது கேளாமை உள்ளதைக் கண்டுபிடித்துவிட வேண்டும். ஐந்து வயதுக்குள் இக்கருவியைப் பொருத்திவிட வேண்டும். அப்போதுதான் குழந்தைக்குக் கேட்கும் திறனையும் பேச்சுத் திறனையும் உண்டாக்க முடியும்.

தமிழகம் முதலிடம்

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிறவியிலேயே காது கேட்காத ஏழைக் குழந்தை களுக்கு ‘காக்ளியர் இம்பிளான்ட்’ (Cochlear implant) எனும் உட்பதியக் கருவியைப் பொருத்தி, காது கேட்க வைக்கும் நவீன சிகிச்சைமுறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் இதற்கு ரூ. 7 லட்சம் செலவாகிறது. சென்னை, திருச்சி மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் இதை இலவசமாகவே மேற்கொள் கின்றனர்.

இந்த இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் இந்தியா முழுவதும் 2012-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று தொடங்கி கடந்த ஜூலை கடைசிவரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி தமிழகத்தில் மட்டும் 2,856 குழந்தைகளுக்கு உட்பதியக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற திட்டத்தில் கேரளாவில் இதுவரை 640 பேருக்கும், மத்தியச் சுகாதாரத் துறை மூலம் இந்தியா மொத்தத்திலும் கடந்த ஆகஸ்ட் வரை 911 பேருக்கும் இந்தக் கருவியை இலவசமாகப் பொருத்தியுள்ளனர்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவருக்கு இதயத் தமனியில் ‘ஸ்டென்ட்’ பொருத்தியவுடன் மாரடைப்பு சரியாவதுபோல் அல்ல இது. குழந்தைக்கு உட்பதியக் கருவியைக் காதில் பொருத்தியதும் இயல்பான காதுபோல் ஆகிவிடுவதில்லை. இதைப் பொருத்திக்கொண்ட குழந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான ‘பேச்சு ஒலிகளை உணறும் பயிற்சிகள்’ (Audio Verbal Therapy) தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிதான் குழந்தைக்குக் கேட்கும் ஒலிகளை உணரவைத்து, அதைத் தொடர்ந்து பேசவும் வழி செய்கிறது. ஆனால், சிக்கல் இங்குதான் ஆரம்பிக்கிறது.

பேச்சுப் பயிற்சியின் முக்கியத்துவம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தச் சிகிச்சைத் திட்டம் சென்னையை மையப்படுத்தித்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தென்தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கான தொழில்நுட்ப வசதிகள் அவ்வளவாக இல்லை. பொதுவாக, காதுகேளாமை கோளாறுடன் குழந்தைகள் பிறப்பது நகரங்களைவிட கிராமப்புற ஏழைகளிடம்தான் அதிகம். அவர்களுக்கு இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லை. அப்படியே கொஞ்சம் விவரம் தெரிந்து இந்த அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொண்டுவிட்டாலும், அதற்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு மூன்றாண்டு காலத்துக்குப் பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டியது முக்கியம் என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ளாமல் உள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின் குறைந்தது வாரத்தில் 5 நாட்களுக்கு கேட்பியல் மருத்துவர் (Audiologist) மற்றும் பேச்சுப் பயிற்சியாளர் (Speech Therapist) மூலம் குழந்தைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். வீட்டிலும் இந்தப் பயிற்சியைத் தொடர வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெற்றோரும் குழந்தையுடன் தங்க வேண்டும். இதற்கான வசதிகளைப் பெற்றோரே செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையிலேயே இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் தனியார் பயிற்சி மையங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பயிற்சிக்கான செலவை இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 1,30,000-ஐக் காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. ஆனால், பேச்சுப் பயிற்சிகளை ஓராண்டுக்குள் சரியாகப் பெற்றுக்கொள்ளும் குழந்தை களுக்கு மட்டுமே இந்தப் பணம் கிடைக்கும்.

பலன் வேண்டாமா?

குடும்பச் சூழல் காரணமாக, பல பெற்றோர்களால் வெளியூர்களிலிருந்து தினமும் நகரத்துக்குப் பயணம் செய்வது சிரமம். அதேநேரம் சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக காலம் தங்கியிருந்து, இந்தப் பேச்சுப் பயிற்சியைத் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கவும் அவர்களால் முடிவதில்லை. மேலும், இயன்முறை மருத்துவர்கள் இருக்கும் அளவுக்குப் பேச்சுப் பயிற்சியாளர்கள் தமிழகத்தில் சிறு நகரங்களில் இல்லை. இதனால் இந்தக் குழந்தைகளுக்குப் பேச்சுப்பயிற்சி கிடைப்பது நின்றுபோகிறது. இதன் காரணமாக இவர்களுக்குக் காப்பீட்டுப் பணம் கிடைப்பதும் நின்றுபோகிறது. அதற்குப் பிறகு தங்கள் சொந்தச் செலவில் பேச்சுப்பயிற்சியைத் தருவதற்கு பெற்றோரிடம் பண வசதி இருப்பதில்லை. இவ்வாறான சூழலில் குழந்தைக்குத் தொடர்ந்து பேச்சுப்பயிற்சி கிடைக்காமல் போவதால், அந்தக் குழந்தைக்குப் பேச்சு வராமல் போகிறது; சிகிச்சை செய்தும் பலனில்லை; பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடுகிறது.

கிராமம், நகரம் எனப் பிரித்து, அரசு இயந்திரம் கைக்குழந்தைகளுக்கு எனச் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, பிறவியிலேயே காது கேட்காத குழந்தைகளைக் கண்டறிய வேண்டும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இந்தச் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேவையான எண்ணிக்கையில் கேட்பியல் மருத்துவர் மற்றும் பேச்சுப் பயிற்சியாளர்களைச் சிறு நகரங்கள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கென்றே சிறப்பு மழலையர் பள்ளிகளைத் தொடங்கி, தொடர்ந்து அவர்களுக்குப் பேச்சுப்பயிற்சி கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். அப்போதுதான் மிகப் பயனுள்ள ஒரு மருத்துவத் திட்டம் கடலில் கலக்கப்படும் பெருங்காயம்போல் வீணாவதைத் தடுக்க முடியும்!

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

40 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்