தேச பக்திக்கும் தீவிர தேசியவாதத்துக்கும் என்ன வேறுபாடு?

By ராமசந்திர குஹா

நிரந்தரமான, ஆக்கப்பூர்வமான தேசபக்தி என்பது நீங்கள் வாழும் பகுதி, நகரம், மாவட்டம், மாநிலம் ஆகியவற்றில் மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பது, அனைவரையும் அரவணைத்துச் செல்வது, ஜனநாயகத் தன்மையை வளரச் செய்வதுதான்!

நாட்டுப்பற்றுக்கும் அதிதீவிர தேசபக்திக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன்; பால்ராஜ் புரி என்ற எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல் செயல்பாட்டாளர் நினைவுச் சொற்பொழிவுக்காகச் சமீபத்தில் ஜம்மு சென்றிருந்தபோது அவரைப் பற்றித் தெரிந்துகொண்டதால் இந்தச் சிந்தனை மேலோங்கி நிற்கிறது.

அதிதீவிர தேசபக்தர்கள் பெருகிவருகிறார்கள், அவர்கள் இரவும் பகலும் பாகிஸ்தானையோ சீனாவையோ அல்லது இரண்டையுமோ தொடர்ந்து வசைபாடி வருகிறார்கள். நாட்டின் மீது தனக்கிருந்த பற்றை பால்ராஜ் புரி முற்றிலும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறவும் பிறகு காஷ்மீர் மகாராஜாவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலை பெறவும், காஷ்மீரிகளின் மனித உரிமைகளுக்காகவும், ஜம்மு, லடாக் பிரதேசங்களின் சுயாட்சிக்காகவும் தொடர்ந்து போராடியவர் புரி.

நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர்

சுதந்திரப் போராட்ட வீரராக அவருடைய வாழ்க்கை 14 வயதிலேயே தொடங்கியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தால் உந்தப்பட்டு உருது வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். பல ஆண்டுகள் பத்திரிகையாளராகத் தொடர்ந்தார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் எழுதினார். இந்திய முஸ்லிம்கள் பற்றி, ஜம்மு பிராந்தியத்துக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் உள்ள சிக்கல்கள் பற்றி, காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவலும் தாக்குதலும் தொடங்கிய விதம் பற்றி ஆய்வு செய்து எழுதினார்.

எழுத்துக்காகவும், நேர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் பாராட்டப்பட்டார். 1980-களிலும் 1990-களிலும் ஜம்முவில் வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றன. ராமஜன்மபூமி இயக்கத் தீவிர ஆதரவாளர்களால் ஒரு புறமும், பள்ளத்தாக்கைச் சேர்ந்த தீவிரவாதிகளால் மறுபுறமும் இவை தூண்டப்பட்டன. இதனால் பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டனர். அறுபது வயதை எட்டிவிட்ட புரி தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் ஏறி ஊரின் எல்லா வீதிகளுக்கும் சென்று மக்களுடைய கோபத்தைத் தணிப்பார், கோபம் வன்முறையாக மாறிவிடக்கூடாது என்று தடுப்பார்.

கருத்து வேறுபாடுகளும் சந்தேகங்களும்தான் வழக்கம் என்றாகிவிட்ட மாநிலத்தில் அவரை எல்லா சமூகத்தினரும் எல்லா பிராந்திய மக்களும் பாராட்டினர். 2014 ஆகஸ்டில் அவர் இறந்தபோது, ‘பிராந்திய அடையாளத்தை ஜம்மு இழந்துவிட்டது, ஜனநாயகம்–மனித உரிமைகள் போராளியை காஷ்மீர் இழந்துவிட்டது, அமைதிக்காகப் பாடுபட்ட ஆர்வலரை மாநிலம் இழந்துவிட்டது, முற்போக்கான–சுதந்திரமான குரலுக்குச் சொந்தக்காரரை நாடு இழந்துவிட்டது’ என்று இரங்கல் குறிப்பில் உருக்கமாகக் கூறியிருந்தார். இன்னொருவர் பால்ராஜ் புரியை, லால் பகதூர் சாஸ்திரியுடன் ஒப்பிட்டிருந்தார். இருவருமே குறு வடிவக்காரர்கள், மெல்லிய தேகங்கொண்டவர்கள் ஆனால் ஆக்கப்பூர்வமான செயல்களுக்காக அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்று எழுதியிருந்தார்.

ஜம்முவில் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ‘விலைக்கு வாங்க முடியாதவர்’ என்று அவரைப்பற்றி ஒரு முதியவர் அரற்றிக்கொண்டே வந்தார். புரியின் குடும்பத்தவரோ, நண்பர்களோ அவரை அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. எழுத்தில் வடிக்கப்பட்ட பல இரங்கற்பாக்களைவிட உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட அந்த வார்த்தைகள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

எது தேசபக்தி?

ஜம்மு – காஷ்மீருக்குள் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பிற மாநிலங்களில் அவரைப்பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இது பரிதாபம். முன்னெப்போதையும்விட பால்ராஜ் புரி போன்ற தேசபக்தர்கள்தான் இந்தியாவுக்குத் தேவை. இன்னொரு நாட்டை வசைபாடி தேசபக்தியைக் காட்ட வேண்டியதில்லை. நம்முடைய நாட்டையே மேலும் சகிப்புத்தன்மையுள்ளதாக, வளர்ச்சி பெற்றதாக, துயரங்கள் குறைந்ததாக, பூசல்கள் அற்றதாக மாற்ற முயற்சிப்பதே உண்மையான தேசபக்தி. பட்டியல் இனத்தவர், பெண்கள் ஆகியோர் கண்ணியத்துடன் வாழ உதவுவதே சிறந்த தேசபக்தி. மொழி, சாதி, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிப்பதும்தான் சிறந்த தேசபக்தி.

அதிதீவிர தேசபக்தர்களைப் போல பக்கத்து நாட்டைவிட இந்தியாவை வலுவான நாடாக மாற்ற வேண்டும் என்ற ஆசை பால்ராஜ் புரிக்கு இல்லை. இப்போதிருப்பதைவிட பாதுகாப்பான, வாழ்வதற்கு ஏற்றதான நாடாக இந்தியா இருந்தால் போதும் என்று நினைத்தார். அவருடைய தேசபக்தி ஒற்றை நோக்கத்துக்கானது அல்ல, பல்முனைகள் கொண்டது.

பால்ராஜ் புரி தன்னுடைய நகரை, மாவட்டத்தை, மாநிலத்தை பிறகு நாட்டை நேசித்தார். ஒரே நேரத்தில் ஜம்மு மீது பற்று, மாநிலம் மீது பற்று, இந்தியா மீது பற்று என்று அவரால் இருக்க முடிந்தது.

பக்கத்து மாநிலமான பஞ்சாபில் அமைதியையும் சுயமரியாதையையும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார். அவரால் சரளமாகப் பேச முடிந்த ஆறு மொழிகளில் பஞ்சாபியும் ஒன்று. சீக்கியர்களுக்கும் உங்களுக்கும் தாய் மொழியான பஞ்சாபியில் பேசுங்கள், சங்கப் பரிவாரங்கள் சொல்வதைக் கேட்டு இந்தியை ஊக்குவிக்காதீர்கள் என்று இந்துக்களிடம் கூறுவார். அதே சமயம் ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவையும் அவரது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளையும் கடுமையாகக் கண்டித்தார். ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ என்ற ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு பஞ்சாபுக்கு முதலில் சென்ற வெளி மாநிலத்தவர்களில் அவரும் ஒருவர். வன்முறை வேண்டாம், சமரசமாகப் போங்கள் என்று பார்ப்போரையெல்லாம் அவர் கரம் குவித்து மன்றாடி கேட்டுக்கொண்டார்.

தேசபக்தியும் ஜனநாயகமும்

தேசபக்தி என்பதை அடையாளச் சின்னமாகத்தான் சிலர் பார்ப்பார்கள், தேசியக் கொடியை ஒரு நாளைக்கு பத்து முறை விழுந்து கும்பிடுவது போல. நிரந்தரமான, ஆக்கப்பூர்வமான தேசபக்தி என்பது நீங்கள் வாழும் பகுதி, நகரம், மாவட்டம், மாநிலம் ஆகியவற்றில் மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பது, அனைவரையும் அரவணைத்துச் செல்வது, ஜனநாயகத் தன்மையை வளரச் செய்வதுதான்.

பால்ராஜ் புரியின் நாட்டுப் பற்று பொருள் பொதிந்தது, வெறும் அடையாளமல்ல. ‘மேரா பாரத் மகான்’ என்றும் ‘பாகிஸ்தான் ஒழிக’ என்றும் அவ்வப்போது கோஷமிட்டு தன்னுடைய நாட்டுப்பற்றை அவர் பறை சாற்றியதே இல்லை. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்திய லட்சியங்களுக்கு ஏற்ப அன்றாட வாழ்க்கையில் அனைத்துத் தரப்பினருக்கும் மரியாதை, கௌரவம், கண்ணியம், சமத்துவம், நீதி கிடைப்பதற்காகப் போராடினார்.

பால்ராஜ் புரி உதாரணமானவர், பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் தன்னிகரில்லாதவர் அல்ல. அவரைப்போலவே ஏராளமான தேச பக்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களில் சிலரைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் பற்றி யாருக்கும் தெரியவே தெரியாது. ஒரேயடியாக ஒருவரைப்பற்றி விளம்பரம் செய்வது உண்மையான தேசபக்திக்கும் தேசத்தை உருவாக்கும் செயலுக்கும் எதிராகவே கூட திரும்பிவிடும். விளம்பரத்துக்காக அதிக நேரம் ஏங்க ஆரம்பித்தால் சமூக சீர்திருத்தம், ஆக்கப்பூர்வமான பணி போன்றவற்றுக்கான நேரம் குறைந்துவிடும்.

பால்ராஜ் புரி தன்னுடைய கருத்துகளைத் தெரிவிக்கும்போது எழுத்தில், பேச்சில்கூட வன்முறையைக் கையாண்டதில்லை. சமூகத்தில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முயன்றார், விருதையோ பாராட்டையோ எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை.

சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் நாடு பிளவுபட்ட சமூகமாகவே இருக்கிறது. அதிகார போதை கொண்ட அரசியல் தலைவர்களும் டிஆர்பி ரேட்டிங்கைக் கூட்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட ஊடகத்தினரும் இதை ஊக்குவிக்கின்றனர். இதில் மிகவும் கடினமான பணி சமரசமாகப் போவதுதான், அது அவசியமும் கூட. சாதிகள், பிராந்தியங்கள், மொழிகள், மதங்களுக்கு இடையில் சந்தேகமும் பரஸ்பர விரோதமும் மறைந்து மரியாதையும் அங்கீகாரமும் அந்த இடத்தைப் பிடித்தால்தான் இந்தியா ஒற்றுமையாகவும் ஜனநாயக நாடாகவும் இருக்க முடியும். இந்த சமரசத்துக்காகத்தான் பால்ராஜ் புரி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இன்னொரு பெரிய தேசபக்தரும் சமரச விரும்பியுமான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழியில் நடந்தார்.

தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்