சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்!

By கு.கணேசன்

ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்து

உங்கள் சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்வதற்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளைப் பரிசோதிப்பது வழக்கம். அடுத்த முறை நீங்கள் மருத்துவரிடம் போகும்போது, புதிதாக ‘யூரிக் அமிலம்’ பரிசோதனையைப் பரிந்துரை செய்யலாம். அப்போது ‘இது என்ன புதுப் பரிசோதனை?’ என்று யோசிக்க வேண்டாம்.

‘ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்குச் சிறுநீரகங்கள் விரைவில் செயலிழக்கின்றன’ என்று உலக அளவில் நடந்த ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் உலகச் சிறுநீரக நல நிறுவனம் (World Kidney Foundation) 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யூரிக் அமிலப் பரிசோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவைதான் சிறுநீரகத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று சொல்லிவந்த மருத்துவ உலகம், இந்தப் பட்டியலில் புதிய வில்லன் யூரிக் அமிலத்தையும் இப்போது சேர்த்துள்ளது.

யூரிக் அமிலம் என்றால் என்ன?

யூரிக் அமிலம் என்பது ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணுச்சரடு உற்பத்திக்குப் பியூரின் என்ற மூலக்கூறுகள் தேவை. இவை நாம் சாப்பிடும் அசைவ உணவில் அதிகம் இருக்கின்றன. சைவ உணவுகளில் தேவைக்கு இருக்கின்றன. குடலில் இவை உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலத்தை உற்பத்திசெய்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இதை முறைப்படி சிறுநீரில் வெளியேற்றிவிடுகின்றன. மிச்சமிருக்கும் அமிலம் ரத்தத்தில் இருக்கிறது. பெரும்பாலான விலங்குகள் அசைவம்தான் சாப்பிடுகின்றன. அப்படியானால், அவற்றுக்கும் யூரிக் அமிலப் பிரச்சினை வரவேண்டும் அல்லவா? விலங்குகளுக்கு ‘யூரிகேஸ்’ எனும் என்சைம் இருக்கிறது. இது யூரிக் அமிலத்தை முழுவதுமாகச் செரித்துவிடுகிறது. இதனால் விலங்குகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. யூரிகேஸ் என்சைம் நமக்கு இல்லை என்பதால்தான் பிரச்சினை. அளவுக்கு மீறி பியூரின் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், யூரிக் அமிலம் உடலில் அதிகரித்துவிடும்.

சாதாரணமாக, ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மிகி வரையிலும் ஆண்களுக்கு 7 மிகி வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் ஆபத்து. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிமங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’(Gout) எனும் மூட்டுவலி வருகிறது. இது சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. இதுவரை யூரிக் அமிலத்தால், இந்த இரண்டு பிரச்சினைகள் மட்டுமே ஏற்படுவதாக மருத்துவத் துறை சொல்லிவந்தது. இப்போது புதிதாக சிறுநீரகப் பாதிப்பு! என்ன காரணம்?

யூரிக் அமிலம் சிறுநீரகங்களைப் பாதிக்கும் என்பது முன்னரே தெரிந்த விஷயம்தான். ஆனாலும் எங்கோ, எப்போதோ ஒருவருக்கு என்ற அளவில்தான் இதன் பாதிப்பு இருந்தது. இப்போது மாறிவரும் உணவுப் பழக்கத்தால் யூரிக் அமிலப் பிரச்சினை உலகம் முழுவதிலும் சூடுபிடித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலும், இலங்கையிலும் கடற்கரையோரப் பகுதியில் வசித்தவர்களில் அநேகம் பேருக்கு யூரிக் அமிலப் பிரச்சினையால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியடைய வைத்தன. அந்தப் பகுதி மக்கள் அதிகம் விரும்பும் ஒரு வகை மீன் உணவில் பியூரின் அதிகமாக இருந்ததால், இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாக அப்போதைய ஆராய்ச்சி முடிவு சொன்னது. அதைத் தொடர்ந்து, உலகில் மற்ற நாடுகளிலும் சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது என்பதால், உலக சுகாதார நிறுவனம் இது குறித்த எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

சிறுநீரகம் கெடுவது எப்படி?

சிறுநீரகத்தின் முக்கியமான வேலை சிறுநீரை உண்டாக்குவது. இந்த வேலையைச் செய்யும் அமைப்புக்கு ‘நெஃப்ரான்கள்’ என்று பெயர். இவைதான் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டிச் சிறுநீராக வெளியேற்றுகின்றன. இவை எண்டோதீலியல் எனும் செல்களால் ஆனவை. ரத்தத்தில் அதிகரித்துவிட்ட யூரிக் அமிலம் சிறுநீரகத்துக்கு வரும்போது, எண்டோதீலியல் செல்களை அழித்துவிடுகின்றன. இதன் விளைவால் முதலில் நெஃப்ரான்கள் உள் அளவில் சுருங்குகின்றன. பிறகு, அதில் அழற்சி ஏற்பட்டு, புண்ணாகின்றன. இதனால் சிறுநீரகம் திடீரென்று வேலை நிறுத்தம் செய்கிறது. சிறுநீர் பிரிய மறுக்கிறது. சிறுநீரில் வெளியேற்றப்பட வேண்டிய யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இதன் காரணமாக முகம், கை, கால், வயிறு ஆகியவை வீங்குகின்றன. மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்து நெருங்குகிறது. இதை ஆரம்பத்தில் கவனித்தால் மருத்துவச் சிகிச்சை பலனளிக்கும். இல்லையென்றால், டயாலிசிஸ் செய்ய வேண்டும். சிறுநீரகத்தின் நிலைமை மிகவும் மோசமென்றால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதுதான் ஒரே வழி. மாற்றுச் சிறுநீரகம் நினைத்த நேரத்தில் கிடைத்து விடாது.

யாருக்கு வருகிறது?

பெரும்பாலும் ஆண்களுக்கே இந்தப் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. பரம்பரைரீதியாகவும் இது ஏற்படலாம். மது அருந்துபவர்களுக்கு, உடல்பருமன் உள்ளவர்களுக்கு இது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அசைவ உணவை அதிகம் சாப்பிடுவோருக்கும், இரு சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்கும், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இப்போது சிறுநீரகப் பாதிப்புக்கும் உணவுமுறைதான் பிரதான காரணமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, 100 கிராம் கோழி ஈரல் சாப்பிட்டால் 313 மில்லி கிராம் அளவிலும், 100 மி.லி. சாராயம் குடித்தால் 1,810 மில்லி கிராம் வரையிலும் யூரிக் அமிலம் ரத்தத்தில் உற்பத்தியாகிறது. இந்த அளவு யூரிக் அமிலத்தைச் சிறுநீரில் வெளியேற்ற சிறுநீரகங்கள் எவ்வளவு சிரமப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. தெரிந்தே ஆபத்தை விலைக்கு வாங்குகிறோம்!

- கு.கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்