இராக்கில் அமெரிக்கா செய்தது என்ன?

By செல்சியா ஈ மேனிங்

அமெரிக்காவின் இராக் நடவடிக்கைகள்குறித்த ரகசியங்களை வெளியிட்டவர் மனம்திறக்கிறார்!

இராக்கில் அமெரிக்கா நடத்திய போர்குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவதென்று 2010-ல் நான் தீர்மானித்தேன். நாட்டின் மீது உள்ள பற்றினாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகுறித்த உணர்வாலும்தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன். அதற்காக 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறேன்.

மார்ச் 2010-ல் இராக்கில் நடைபெற்ற தேர்தல்களைக் குறித்த செய்திகளை நீங்கள் தொடர்ந்து படித்திருந் தீர்களானால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக் கும். இராக் தேர்தல் என்பது பெரும் வெற்றி என்று தெரிவிக்கும் செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் ஆக்கிரமித்திருந்தன. கூடவே, வாக்களித்துவிட்டு மைவிரலைப் பெருமையாகக் காட்டியவாறு நிற்கும் இராக் பெண்கள், அவர்களின் அனுபவக் கதைகள் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் நிரம்பிவழிந்தன. இதன் மூலம் எல்லோருக்கும் உணர்த்தப்படுவது என்ன வென்றால், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் நிலையான, ஜனநாயக இராக்கை நிறுவுவதில் வெற்றிபெற்றிருக்கின்றன என்பதுதான். ஆனால், இராக்கில் இருந்த நாங்கள் இந்த விஷயத்தில் மேலும் சிக்கலான பரிமாணங்களை அறிந்திருந்தோம்.

இராக் அரசும் அமெரிக்க ஊடகங்களும்

ராணுவரீதியான மற்றும் தூதரகரீதியான அறிக்கைகள் எனது மேசைக்கு வந்த வண்ணம் இருந்தன. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக இராக்கின் உள்துறை அமைச்சகமும் மாகாணக் காவல் துறையும் மேற்கொண்ட கொடூர நடவடிக்கை ஒன்றைப் பற்றியவைதான் அந்த அறிக்கைகள். சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சித்ரவதை செய்யப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.

அந்த ஆண்டின் தொடக்கத்தில் மாகாணக் காவல் துறையால் கைதுசெய்யப்பட்ட 15 பேரை விசாரிக்கும்படி எனக்கு ஆணைகள் வந்தன. அவர்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் செய்ததெல்லாம் இராக் பிரதமர் மாலிகியின் நிர்வாகத்தைப் பற்றிய ஆய்வுபூர்வமான விமர்சனம் ஒன்றை வெளியிட்டதுதான். நான் கண்டுபிடித்த உண்மையைப் பற்றிய அறிக்கையை, கிழக்கு பாக் தாதிலிருந்த உயர் அதிகாரிக்கு அனுப்பிவைத்தேன். தேவையில்லாத தகவல் இது என்றும், இதற்குப் பதிலாக, இராக் அரசுக்கு எதிராகச் செயல்படும் அச்சகங்களைக் கண்டுபிடிப்பதில் மாகாணக் காவல் துறைக்கு நான் உதவ வேண்டும் என்றும் எனக்கு அறிவுறுத்தினார்.

இராக் தேர்தலின்போது நடந்த முறைகேடுகளிலும் ஊழல்களிலும் நமது அமெரிக்க ராணுவத்துக்கு இருந்த பங்கை அறிந்து நான் அதிர்ந்துபோனேன். ஆனால், நம்மை மிகவும் சங்கடப்படுத்தும் இதுபோன்ற தகவல் களெல்லாம் அமெரிக்க ஊடகங்களின் கண்களுக்குச் சிக்காமலேயே போய்விட்டன.

அமெரிக்க மக்களுக்கு என்ன தெரியும்?

அமெரிக்காவில் வெளியாகும் செய்திகளையும் எனக்கு இராக்கில் கிடைக்கும் ராணுவ, தூதரக அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பது எனது தினசரி வேலைகளுள் ஒன்று. இப்படி ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன என்பது எனக்கு மேலும் மேலும் தெளிவானது. மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் பொய்யும் அரைகுறைத் தகவல்களும்தான்.

ஒட்டிச்செயல்பட்டவர்கள்

பொதுவிவகாரங்கள் துறை அளித்த அறிக்கைகள்தான் இந்த வேறுபாட்டுக்குக் காரணம். போர்ப் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்துடன் ஒட்டிச்செயல்பட்ட பத்திரிகை யாளர்களின் (எம்பெடட் ஜர்னலிஸ்ட்ஸ்) எண்ணிக்கை ஒவ்வொரு அறிக்கைக்கும் மேலே தரப்பட்டிருந்தது. எனது ஒட்டுமொத்தப் பணிக் காலத்திலும் அந்த எண்ணிக்கை 12-ஐத் தாண்டவே இல்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒட்டுமொத்த இராக்கிலும் 3.1 கோடி மக்களும் 1,17,000 அமெரிக்கத் துருப்புகளும் இருந்தார்கள். ஆனால், ராணுவ நடவடிக்கைகளைப் பதிவுசெய்வதற்கான அமெரிக்கப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையோ ஒரு டஜன் மட்டுமே.

ராணுவ நடவடிக்கைகளில் ஊடகங்கள் செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்துவது என்பது, ஒரு பத்திரிகையாளர் ஒட்டிச்செயல்படும் அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதில் தொடங்குகிறது. பத்திரிகையாளர் களின் விண்ணப்பங்கள் பொதுவிவகாரங்கள் துறை அதிகாரிகளால் கவனமாகப் பரிசீலிக்கப்படும். ராணுவத்துடன் நல்ல உறவில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்குத்தான் ஒட்டிச்செயல்படும் பத்திரிகை யாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எந்தப் பத்திரிகையாளர் ராணுவத்துக்கு ‘உகந்த' விதத்தில் செய்தியளிக்க வாய்ப்பிருக்கிறதோ அவருக்கே முன்னுரிமை.

தேர்ந்தெடுக்கப்படும் பத்திரிகையாளர்கள் அதற்குப் பிறகு அடிப்படை ஊடக விதிமுறைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தம் மூலமாக, சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் ஒட்டிச்செயல்படும் அந்தஸ்தை எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர முடியும். இதில் எந்த முறையீடும் செல்லாது.

சலுகை மட்டுமே, உரிமை அல்ல

சர்ச்சைக்குரிய செய்தி வெளியீடுகள் காரணமாகப் பலமுறை, பத்திரிகையாளரின் ஒட்டிச்செயல்படும் அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “ஒட்டிச்செயல்படும் அந்தஸ்து என்பது ஒரு உரிமையல்ல, அது ஒரு சிறப்புச் சலுகை மட்டுமே.” ஒரு பத்திரிகையாளரின் ஒட்டிச்செயல்படும் அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்றால், அவர் கட்டம்கட்டப்பட்டுவிட்டார் என்றே அர்த்தம். இப்படி ரத்துசெய்யப்பட்டதற்கு எதிராக ஒரு நிருபர் தொடுத்த வழக்கில், ராணுவம் செய்தது சரியே என்றும் ஒட்டிச்செயல்படும் பத்திரிகையாளர் உரிமைகள் தொடர்பாக எந்தச் சட்டமும் இல்லை என்றும் கூறி நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

வியட்நாம் போரின்போது மக்களின் கருத்துகளில் ஊடகங்கள் செலுத்திய செல்வாக்கை மனதில் கொண்டே இப்படி ஒட்டிச்செயல்படும் பத்திரிகையாளர் குழுவை அமெரிக்கா செயல்படுத்தத் தொடங்கியது. ஆஃப்கானிஸ்தானில் இன்றுவரை இது தொடர்கிறது. அமெரிக்கா எங்கெல்லாம் படைகளை அனுப்புகிறதோ அங்கெல்லாம் இப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் குழு அனுப்பப்படுகிறது.

இப்போது இருக்கும் நடைமுறை இதுபோன்ற ஒட்டிச்செயல்படும் பத்திரிகையாளர்களுக்குள் ஒருவிதப் போட்டியை ஏற்படுத்திவிடுகிறது. உள்துறை மற்றும் வெளியுறவு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பெறுவதில் உள்ள போட்டிதான் அது. இதன் விளைவாக, இப்படிப் பெற்று வெளியிடப்படும் செய்திகள் கொள்கை வகுப்பாளர்களைத் துதிபாடும் விதத்தில் அமைந்துவிடுகின்றன. இதனால், அமெரிக்க மக்களுக்கு உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு, அமெரிக்க அதிகாரிகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

ஒட்டிச்செயல்படும் அந்தஸ்தில் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதற்காகப் பத்திரிகையாளர்கள் குரலெழுப்ப வேண்டும். பத்திரிகையாளரின் கடந்த கால இதழியல் அனுபவம் (அதாவது ராணுவத்துடனான நல்லுறவு) அடிப்படைத் தகுதியாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கும் முறைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். ராணுவ ஊழியர்கள், பென்டகன் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோர் அடங்கிய குழு ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, போர் நடவடிக் கைகள் போன்றவை குறித்து மக்களிடையே இருக்கும் தகவல் தாகத்தைத் தீர்க்கும்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் ராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

தகவல்களைப் பெறுவதற்குப் பத்திரிகையாளர் களுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்பட வேண்டும். ராணுவ நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காத ரகசியத் தகவல்களை ராணுவம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, தாக்குதல்கள், அதனால் நிகழும் இறப்புகள் குறித்து ராணுவம், சுருக்கமான தகவல்களை உடனடி யாகத் தெரிவிக்க வேண்டும். இதனால், உண்மைத் தகவல்களைப் பெற்று பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட முடியும்.

தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் குறித்த நம்பிக்கை அமெரிக்க மக்களிடையே வெகுவாகக் குறைந்திருப் பதைக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராணுவ நடவடிக்கைகள் போன்றவை குறித்த தகவல்கள் ஊடகங்களுக்குப் போதுமான அளவு கிடைக்கச் செய்வதால், வாக்காளர்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

வணிகம்

22 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்