வெயிலைச் சமாளிப்பது எப்படி?

By கு.கணேசன்

கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க எளிய வழிகள் உண்டு

அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் இம்மாதிரி இறந்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகிறது. கோடை வெப்பத்தால் சென்ற ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம். இப்போதே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், உயிரிழப்புகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

வெப்பத் தளர்ச்சி

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புக்கள் வெளியேறிவிடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion) என்று பெயர்.

நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயக்கம் அடைவதை அறிவீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. ‘சன் ஸ்ட்ரோக்’ என்று அழைப்பது இதைத்தான். வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்துவிடுகிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்துவிடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சிலருக்கு மரணமும் ஏற்படுகிறது.

வெப்ப மயக்கம் ஏற்பட்டவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றி, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்ய வேண்டும். அவரைச் சுற்றி கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். மயக்கம் தெளிந்ததும் குளுக்கோஸ் தண்ணீர், பழச்சாறு அல்லது நீர்மோர் கொடுப்பது அவசியம். இது மட்டும் போதாது. அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

புற ஊதாக் கதிர்களின் ஆபத்து

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை வெயிலில் வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களால் ஏற்படுகிற உடல் பாதிப்புகள் அதிகம். இக்கதிர்களில் ‘ஏ’, ‘பி’ என்று இரு வகை உண்டு. ‘ஏ’வகைக் கதிர்கள் இளங்காலையிலும் மாலைப்பொழுதிலும் வெளிப்படும். இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கும் வெயிலில் ‘பி’வகைக் கதிர்கள் வெளிப்படும். இவை ‘சன் ஸ்ட்ரோக்’ முதல் சருமப் புற்றுநோய் வரை உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள ‘பி’வகை புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களில் உள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக் குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் ‘CXCL5’ எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சல், வலி, வெப்பப் புண்கள் (Sun Burn) ஏற்படும்.

பலருக்கு சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். வெயில் பட்டாலே உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். இதற்கு ‘சூரியஒளி நச்சு அரிப்பு’ (Solar Urticaria) என்று பெயர். இவை தவிர, கோடையில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் வியர்க்குரு, வேனல் கட்டி, தேமல் தொற்று, அக்கி, அம்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு எனப் பட்டியல் நீளும்.

வெப்பத்தைத் தணிக்க…

கோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஐஸ் தண்ணீரைவிட, மண் பானைத் தண்ணீர் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.

காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப் பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.

வெயிலைச் சமாளிக்க…

கோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் ‘சன் ஸ்கிரீன் லோஷ’னைப் பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். காற்றோட்டமான கதர், பருத்தி ஆடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நம் ஆரோக்கியம் நம் கையில்!

கட்டுரையாளர் பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்