சீனாவின் நூறு பூக்கள்

By மு.இராமனாதன்

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது.

முன் கதை

பல சாம்ராஜ்ஜியங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு பிறந்தது. புதிய குடியரசை உருவாக்கிய அமைப்புகள் டாக்டர் சன் யாட் சென்-ஐத் தலைவராக நியமித்தன. சன் ஒரு அறிவுஜீவி. திறமான அரசியலர் அல்லர். சீனா போன்ற பெரிய தேசத்தை அவரால் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. நாடெங்கிலும் யுத்த பிரபுக்கள் போராட்டங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். மறுபுறம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பும் இருந்தது. இதனால், சினமுற்ற சீன இளைஞர்கள் மே 4, 1919 அன்று தியானென்மென் சதுக்கத்தில் கூடினார்கள். ‘மே 4 இயக்கம்’ என்று வரலாறு குறித்து வைத்திருக்கும் இந்தப் போராட்டம்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தொடக்கம் குறித்தது. இந்த இயக்கத்தை முன்னின்று நடத்திய லீ தாவ்ஜவ், சென் து சியூ எனும் இருவர்தான் 1921-ல் கம்யூனிஸ்ட் கட்சியையும் நிறுவினார்கள். இதில் முன்னவர் மாவோவின் குரு.

முதல் உள்நாட்டு யுத்தம் (1927-1937)

சன் 1925-ல் மறைந்தார். அடுத்து, சீனக் குடியரசின் ஆட்சியையும் ஆளுங்கட்சியாக இருந்த கோமிங்டாங் கட்சியையும் கைப்பற்றினார் சியாங் கை ஷேக். சோவியத் ஒன்றியம் கோமிங்டாங்குக்கு ஆதரவாக இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சியையும் கோமிங்டாங்குக்கு இசைவாக இருக்கும்படி வலியுறுத்தியது. ஆனால், சியாங் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகப் பாவித்தார். அவர்களை ஒழித்துக்கட்டத் தொடங்கினார். அதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான ராணுவத்தைக் கட்டியது. அதற்கு
ஆகஸ்ட் 1, 1927-ல் மக்கள் விடுதலை ராணுவம் என்று பெயரிட்டது. அதுதான் இன்று உலகத்தின் மிகப் பெரிய ராணுவமாக வளர்ந்திருக்கிறது.

கோமிங்டாங்குடனான யுத்தத்தின்போது ஒரு கட்டத்தில் மாவோ பின்னேறும் தந்திரத்தைப் பயன்படுத்தினார். கோமிங்டாங் பலவீனமாக இருக்கும் இடங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்துக்கு ‘நெடும் பயணம்’ (1934-35) என்று பெயர். பயணத்தின்போது பசியிலும் பனியிலும் பலியானவர்கள் பலர். என்றாலும், அந்தப் பயணத்தில் எண்ணற்ற கிராமங்கள் வழியாக ராணுவம் முன்னேறியது. இதன் மூலம் கட்சி மக்களுக்கு நெருக்கமாகியது. மாவோ மக்கள் தலைவரானார்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பு (1937-1945)

வல்லரசாகும் கனவில் இருந்த ஜப்பான், சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்துவந்தது. உச்சமாக 1937-ல் நான்ஜிங் நகரில் ஜப்பான் நிகழ்த்திய வன்கொடுமைகள் வரலாற்றைக் கரிய பக்கங்களால் நிறைத்தன. இந்தக் காலகட்டத்தில் கோமிங்டாங்கும் கம்யூனிஸ்ட்டுகளும் ஒன்றிணைந்து தங்களது பொது எதிரியான ஜப்பானை எதிர்த்தனர். சீனர்கள் இழந்தது அதிகம். எனினும் விடாப்பிடியாகப் போராடினார்கள். இரண்டாம் உலகப் போரின் (1939-45) முடிவு ஜப்பானுக்குச் சாதகமாக இல்லை. அது நேச நாடுகளிடம் சரணடைந்தது, சீனாவிலிருந்தும் வெளியேறியது.

இரண்டாம் உள்நாட்டு யுத்தம் (1945-1949)

பொது எதிரி வெளியேறியதும் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தது. இந்த முறை கோமிங்டாங்குக்கு அமெரிக்கா உதவியது. எனில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. ஆயுத பலமும் கூடியிருந்தது. ஆகவே, வெற்றி வசமானது. கோமிங்டாங்கின் தலைவர் சியாங், தைவானுக்குத் தப்பியோடினார். அக்டோபர் 1, 1949 அன்று தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மக்கள் சீனக் குடியரசை நிறுவினார் மாவோ.

மாவோவின் காலம் (1949-1976)

பெரும் கனவுகளோடு தொடங்கியது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி. ‘நூறு பூக்கள் மலரட்டும்’ என்பது மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று. எல்லாக் கருத்துகளும் முட்டிமோதித் தெளியட்டும் என்பது பொருள். ஆனால், அவரது ஆட்சியில் விமர்சனங்கள் சகித்துக்கொள்ளப்படவில்லை. கூட்டுப் பண்ணைகளையும் தொழில் உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு மாவோ தொடங்கிய பெரும் பாய்ச்சல் திட்டமும் (1958-1962), பழமையைத் தகர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கலாச்சாரப் புரட்சியும் (1966-1976) பலன் தரவில்லை. மாறாக, பஞ்சம் வந்தது. மக்கள் மடிந்தனர், அச்சுறுத்தலுக்கு உள்ளாயினர். பின்னாளில் கட்சி இந்த இரண்டு முன்னெடுப்புகளும் பிழையானவை என்று ஒப்புக்கொண்டது. அதே வேளையில், மாவோவின் காலத்தில்தான் சீனா ஒரு தேசமாகத் திரண்டது, மக்களின் கல்வியறிவும் ஆரோக்கியமும் வளர்ந்தது.

தாராளமயத்தின் காலம் (1978-2013)

1976-ல் மாவோ காலமானார். அடுத்து, தலைமை ஏற்ற டெங் சியோ பிங்,1978-ல் அந்நிய முதலீடுகளுக்கு வாசல் திறந்தார். சீனாவின் அபரிமிதமான மனித வளத்தைப் பயன்படுத்தி நாட்டைத் தொழில்மயமாக்கினார். செல்வம் சேர்ந்தது. அந்த அதிவேக வளர்ச்சியின் காலத்தில் டெங் தனது சகாக்களை சர்வதேச அரங்கில் அடக்கி வாசிக்கச் சொன்னார். ‘உன் சக்தியை வெளிக்காட்டிக்கொள்ளாதே’ என்றார். தனது பாதைக்கு டெங் வைத்த பெயர் சீனா பாணியிலான சோஷலிஸம். டெங் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்ல, 1989-ல் தியானென்மென் அடக்குமுறைக்காகவும் நினைவுகூரப்படுகிறார். 1919-ஐப் போலவே 1989-லும் தியானென்மென்னில் போராடியவர்கள் இளைஞர்கள். அவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். இந்த முறை தன் மக்களின் போராட்டத்தை ஒடுக்கியது ‘மக்கள் விடுதலை ராணுவம்’. மாணவர்கள் மட்டுமல்ல; சாலையோரம் வேடிக்கை பார்த்தவர்களும் துருப்புகளால் கொல்லப்பட்டார்கள். சீனாவின் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்களில் ஒன்றானது தியானென்மென் படுகொலைகள்.

ஷி ஜின்பிங் காலம் (2013-)

ஷி ஜின்பிங் 2012-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரானார். பிறகு, அதே ஆண்டு முப்படைகளின் தலைவரானார். அடுத்து, 2013-ல் நாட்டின் அதிபரானார். இந்த வரிசை எதேச்சையானதல்ல. கட்சி (1921), ராணுவம் (1927), ஆட்சி (1949) என்பதுதான் வரலாற்றின் வரிசை; முக்கியத்துவத்தின் வரிசையும் அதுதான். ராணுவமும் ஆட்சியும் கட்சிக்குக் கட்டுப்பட்டவை. இந்த நூற்றாண்டு விழாவில் இதை ஷி மீண்டும் நிறுவுவார்.

தனக்கு முந்தைய தலைவர்களிலிருந்து ஷி வேறுபட்டவர். ஷி-க்கு முன்பு அதிபராக இருந்த ஜியாங் ஜெமின்
(1993-2003), ஹு ஜின்டாவ் (2003-2013) இருவரின் பதவிக்காலமும் பத்தாண்டுகள். இந்த விதியை ஷி மாற்றப்போகிறார். அவரது பதவிக்காலம் 2023-ஐத் தாண்டியும் நீடிக்கும். அடுத்து, சீனா அடக்கி வாசிக்க வேண்டும் என்று டெங் கருதினார். ஆனால், காத்திருப்பின் காலம் முடிந்துவிட்டது என்பது ஷி-யின் கருத்து. தென்சீனக் கடலிலும், இந்திய எல்லையிலும், அமெரிக்க வணிகத்திலும் சீனா தனது ஆக்ரோஷமான முகத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா இதற்கு ஏற்றவாறு காய் நகர்த்த வேண்டும்.

டெங்குக்கு மாவோவின் மீது விமர்சனங்கள் இருந்தன. எனில், மாவோவிடம் குற்றத்தைவிடக் குணமே அதிகம் என்றார் டெங். கட்சியின் அடையாளமாக மாவோவைத்தான் நிறுத்தினார் டெங். ஷி-யும் அதையேதான் செய்கிறார். ஆனால், ஒரு படி மேலே போகிறார். மாவோவின் நெடும் பயணமும், ஜப்பானிய எதிர்ப்பும் வரலாற்றில் இடம்பெறும். ஆனால், பெரும் பாய்ச்சல் திட்டமும் கலாச்சாரப் புரட்சியும் வரலாற்றில் அவசியமற்றவை என்பது ஷி ஜின்பிங்கின் கருத்து. அதாவது மாவோவின் குணம் மட்டும் வரலாற்றில் இடம்பெறும். கூடவே, சீனாவின் அடையாளமாக மாவோ மட்டுமில்லை, அடுத்த இடத்தில் ஷி-யும் இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். வருங்காலத்தில் தியானென்மென் சதுக்கத்தின் முகப்பில் மாவோவின் படத்துக்கு அருகில் ஷி-யின் படமும் இடம்பெறக்கூடும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

ஜூலை 1: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்