சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 2: பழம்பெருமை பேசாத அம்மா!

By செய்திப்பிரிவு

அது 1951-ம் வருடம். அன்று கிருஷ்ண ஜெயந்தி. என் தந்தை இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. நான் பள்ளிப் படிப்பு முடித்து அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். புதுச்சேரி எல்லையில் சுங்கத்துறை அதிகாரியாக இருந்த என் அண்ணாவின் வரவுக்காக, பூஜையைத் தொடங்காமல் காத்திருந்தோம். என் அண்ணி முதல் நாளே வந்துவிட்டார்.

இடி விழுந்த மாதிரி அப்போது ஒரு செய்தி வந்தது. மின்சாரத்தால் தாக்குண்டு அண்ணன் இறந்துவிட்டதாக... அப்போது அவருக்கு 26 வயது.

பிறகு இறுதிச் சடங்குகள் எல்லாம் எப்படியோ நடந்தன. 1898-ம் ஆண்டு பிறந்த என் தாய்க்கு ஏழு வயதில் திருமணம் நடந்தது. 15 வயதில் குடித்தனம் தொடங்கினார். 17 வயதில் பத்து நாள் அரைக்குழந்தையை இழந்தது முதல் வெவ்வேறு வயதுகளில் மேலும் மூன்று குழந்தைகளை இழந்த அவருக்கு, இது 5-வது இழப்பு.

சில நாட்களுக்குப் பிறகு, உணர்ச்சிகள் மரத்துப்போய், மனது தேறிய பிறகு அண்ணியை அழைத்துப்போக அவர் பெற்றோரும் உறவினர்களும் வந்திருந்தனர். என் தாயார், அண்ணியை அருகில் அமர்த்தி, தடவிக் கொடுத்து, ‘‘நீ என் பிள்ளையுடன் வாழ்ந்த இரண்டரை வருடங்களைக் கனவாக மறந்துவிடு. படிப்பைத் தொடரு. கருணை அடிப்படையில் அரசாங்க வேலை கிடைக்கும். வேலைக்குப் போ. இன்னொரு திருமணம் செய்துகொள்’’ என்று கூறினார்.

இதைக் கேட்ட அண்ணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘கசமுச’ என்று சத்தமிட ஆரம்பித்தனர். அம்மா நடுநடுங்கி, ‘‘இப்போ நான் என்னடி தவறாகச் சொன்னேன்? என் வயிற்றிலே பிறந்த பெண்ணுக்கு இந்த கதி நேர்ந்திருந்தால் என்ன சொல்வேனோ அதைத்தானே சொன்னேன்?’’ என்றார். என் அம்மா ‘அந்தக்கால மனுஷர்’ போல இருந்திருந்தால் முகம் சுளித்து ‘‘என் பிள்ளையை முழுங்கிவிட்ட துக்கிரி’’ என்று அண்ணியைக் குறைகூறி இருக்க முடியும். அவரது பரந்த மனமும் விவேகமும் காலத்தைக் கடந்தவை.

இது நடந்து கால் நூற்றாண்டுக்கு பிறகு அவருக்கு 6-வது இழப்பு- 60 வயதில் மகளை இழந்தார். பெற்ற பத்தில் நான்கே மிச்சமிருந்தது. இழப்புகளானாலும், கஷ்டங்களானாலும், ஒருமுறைகூட அம்மா ‘‘எனக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.

சுய முயற்சியாலும் என் தந்தை அளித்த ஊக்கத்தாலும் அம்மா பல நூல்களைப் படித்துத் தேர்ந்திருந்தார். பல மாத, வார இதழ்களைத் தவறாமல் படிப்பார். அடுப்படியில் வேலை செய்யும்போது அவர் வாயிலிருந்து திருப்புகழ் சரளமாக, ராகத்துடன் பொழியும். இதைக் கேட்டு வளர்ந்ததால்தான் எனக்குள்ளும் அவை கொஞ்சம் ஊறிவிட்டன.

வயது கூடிய காலத்தில் அவரைவிட இள வயதினர் யாராவது மரணமடைந்தால் ‘‘இந்தக் கிழவி குத்துக்கல் போல் இருக்கும்போது இவனுக்கு ஏன் சாவு?’’ என்று கூறியதே இல்லை. ஒருமுறை அவர் கூறியது இப்போதும் என் காதில் ஒலிக்கிறது. ‘‘அவர்கள் எல்லாம் சிப்பலில் சாதம் கொண்டுவந்தார்கள். சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நான் கப்பலில் சாதம் கொண்டுவந்திருக்கிறேன். கடைசிப் பருக்கைவரை சாப்பிட்டு விட்டுத்தான் போக முடியும்...’’ என்றார். இதை விரக்தியாகச் சொல்லவில்லை. சிறு புன்னகையுடன்தான் சொன்னார்.

தான் வயோதிகம் வரை வாழ்வதைக்கூட ஒரு வரமாகத்தான் கருதினார். ‘‘குடத்தில் தண்ணீர் சுமந்தவள், இன்று அடுக்களையில் குழாயைத் திறக்கிறேன். மண் அடுப்பும் விறகும் பயன்படுத்தியவள், பிறகு மண்ணெண்ணெய், காஸ், மின்சார அடுப்பு எல்லாமே பார்த்துவிட்டேன். அம்மி, ஆட்டுக்கல், கல்லுரலில் இருந்து மாறி மிக்ஸி, கிரைண்டர் என்று அனுபவிக்கிறேன். கல் சட்டி, பித்தளை, வெண்கலம் என்று பாத்திரங்களை ஆண்டுவிட்டு அலுமினியம், எவர்சில்வர் என்று ஆண்டுகொண்டிருக்கிறேன்.

வெயிலுக்குச் செருப்பு, குளிருக்குக் காலுறை, ஸ்வெட்டர் எல்லாம் பழகிக்கொண்டேன். ஒற்றை மாட்டு வண்டி தொடங்கி, உன் அப்பாவுடன் சைக்கிளில் பின்னால் அமர்ந்து, தோள் பிடிக்க கற்றுக்கொண்டேன். உன் அண்ணாவுடன் ஸ்கூட்டரில், ஒன்பது கஜ புடவையின் சவுகரியத்தால் பில்லியனில் இருபுறமும் காலைத் தொங்க விட்டுக் கொண்டு ‘ஜம்’ என்று போனேன். கார் சவாரி, ப்ளேன் சவாரி எல்லாம் செய்தாகிவிட்டது. எனக்கு என்ன குறை?’’ என்பார்.

மாற்றங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மனப்பான்மை, ‘எங்க காலத்திலே..’ என்று பழம்பெருமை பேசாத குணம், கடைசிப் பேத்தியிடம் சில ஆங்கில வார்த்தைகளையும் பிரயோகங்களையும் கற்ற ஆர்வம். இவைதான் அம்மாவின் அடையாளங்கள்.

காலத்தின் புதிய மாற்றங்களுக்கு ஏற்பத் தன் எண்ணங்களையும் மாற்றிக்கொண்டு, அவற்றை வரவேற்று ரசிக்கும் தன்மை. இந்த மனப்பான்மையும் பண்பாடும் பள்ளிப் படிப்பிலிருந்து வந்தவை அல்லவே!

தாயே, இந்த குணங்களின் மரபணுக்களை எனக்குக் கொஞ்சமாவது தந்திருக்கிறாயே, நன்றி!

- சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

வணிகம்

29 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்