கருத்துரிமையை மறிக்காதீர்கள்!

By செல்வ புவியரசன்

நீதித் துறையின் மீதான மூத்த வழக்கறிஞர் ஒருவரின் நேரிய விமர்சனத்தை நீதிமன்ற அவதூறு என்று குற்றஞ்சாட்டுவதும் தண்டனை அளிப்பதும் கருத்துரிமைக்கு எதிரானது ஆகாதா என்று கடந்த சில வாரங்களில் கடும் விவாதங்கள் நடந்து ஓய்ந்திருக்கின்றன. இதே நாட்களில் சர்வதேச அளவில் ஆங்கில நூல்களை வெளியிட்டுவரும் ஒரு பிரபல பதிப்பகம் இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளையடுத்து, தான் வெளியிடுவதாக அறிவித்த நூலைத் திரும்பப்பெற்றுள்ளது. கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று வழக்கமாகக் குரல்கொடுப்பவர்கள் இவ்விஷயத்தில் மௌனம் காத்தனர். இடது, வலது என்று சார்புநிலைகளுக்கேற்பக் கருத்துரிமையின் தேவையும் மாறிவிடக்கூடுமா என்ன?

டெல்லியில் பிப்ரவரியில் நடந்த கலவரங்களைப் பற்றி ‘டெல்லி ரியாட்ஸ் 2020: தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பிலான புத்தகத்தை செப்டம்பரில் வெளியிடுவதாக ‘ப்ளூம்ஸ்பெரி’ பதிப்பகம் அறிவித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் 22 அன்று மேற்கண்ட தலைப்பிலான புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்தது. அந்த அறிவிப்பில் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், புத்தக வெளியீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட அறிமுக விழாவைக் குறித்து தமக்குத் தெரியாது என்றும், அதில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் தங்களால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது ‘ப்ளூம்ஸ்பெரி’. கருத்துரிமையைத் தாம் எப்போதுமே மதிப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்தப் பதிப்பகம், அதே நேரத்தில் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வையும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுவும் கருத்துரிமை?

அப்படி என்ன நடந்தது புத்தக அறிமுக விழாவில்; யார் அங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள்? பாஜக தலைவர் கபில் மிஸ்ரா அழைக்கப்பட்டிருந்தார்; அதுதான் பிரச்சினைகளின் மையம். டெல்லியில் பிப்ரவரியில் நடந்த கலவரங்களின் சூத்திரதாரிகளில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர். அதிரவைக்கும் பல பேச்சுகளைப் பகிரங்கமாகப் பேசியவர். ‘மூன்று நாட்களுக்குள் ஆர்ப்பாட்டங்களை அடக்குங்கள். இல்லையென்றால், அதன் பிறகு உங்கள் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோம்’ என்று வடகிழக்கு டெல்லியில் காவல் துறையினரையே எச்சரித்துப் பேசியவர். டெல்லி கலவரத்தோடு தொடர்புபடுத்திப் பேசப்படும் ஒருவரையே அது தொடர்பான நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்றால், அந்த நூலில் என்ன உண்மை இருக்கும் என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு பரவலானது.

இந்த எதிர்ப்புகளின் தொடர்ச்சியாக பதிப்பகம் தன் நூல் வெளியீட்டு முடிவையே திரும்பப் பெற்றபோது, ‘வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் காரணமாக, ஏற்கெனவே வெளியிடுவதாக அறிவித்த ஒரு புத்தகத்தைத் திரும்பப்பெறுவது கருத்துரிமைக்கு எதிரானது ஆகாதா?’ என்று புதிய விவாதங்கள் எழுந்தன.

டெல்லியில் பிப்ரவரியில் மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் பின்னணியில் இருந்தவர்கள் வலதுசாரிகளே என்று செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ‘டெல்லி ரியாட்ஸ் 2020: தி அன்டோல்ட் ஸ்டோரி’ புத்தகத்தில் அந்தக் கலவரத்துக்கு முஸ்லிம்கள் மற்றும் இடதுசாரிகள் எவ்வாறெல்லாம் காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்பது வலுவான ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஷாகீன் பாக், ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடந்த போராட்டங்களுக்கும் இந்தக் கலவரங்களுக்கும் எவ்வாறெல்லாம் தொடர்பு உண்டு என்று இந்தப் புத்தகம் ஆதாரங்களை முன்வைப்பதாகச் சொல்லப்படுகிறது. சில புகைப்படங்கள், ட்வீட்கள் என்று இந்த ஆதாரங்களின் பட்டியல் நீள்வதாகத் தெரிகிறது. மார்ச் மாதத்தில் பெண் அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் இணைந்து வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் இந்த வெளிவராத தகவல்கள் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் சோனாலி சிதோல்கார், ராம் லால் ஆனந்த் கல்லூரியின் ஆங்கிலத் துறைப் பேரா சிரியர் ப்ரேர்ணா மல்ஹோத்ரா, வழக்கறிஞரான மோனிகா அரோரா மூவரும் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். சோனாலியும் மோனிகாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே ஒரு உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள். ஜம்முவின் கத்வா மாவட்டத்தில் ஒரு இஸ்லாமியச் சிறுமி வல்லுறவுக் கொலைக்கு ஆளானது தொடர்பில் விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட குழு அது. ஆனால், இந்து வலதுசாரிகளின் கருத்தை எதிரொலிக்கும் விதமாகவே அவர்கள் இடம்பெற்றிருந்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை அமைந்திருந்தது. ஒரு இந்துவின் மீது தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்று கூறியது அந்தக் குழு.

ஆக, இந்த எல்லாத் தகவல்களும் ஒன்று கோத்து உருவாக்கப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரம்தான் ‘ப்ளூம்ஸ்பெரி’ தன்னுடைய பதிப்பு முடிவை மறுபரிசீலிக்கக் காரணமானது என்று கூறப்படுகிறது. விளைவாக, ‘இணையவழி எதிர்ப்பின் காரணமாக, தான் பிரசுரிக்க ஒப்புக்கொண்டதிலிருந்து பின்வாங்குவது ஒரு பதிப்பகத்துக்குப் பெருமை சேர்க்குமா; இது அப்பட்டமான கருத்துரிமை மீறல் இல்லையா?’ என்ற கேள்விகளை வலதுசாரி அமைப்புகள் எழுப்பலாயின. ‘அறிவுத்தளத்தில் இடதுசாரிகள் வலிமைமிக்கவர்களாக இருக் கிறார்கள், வலதுசாரிகளுக்கு ஆதரவான எந்தக் குரலும் எழுந்துவிடாமல் அவர்கள் கவனத்தோடு காய் நகர்த்துகிறார்கள்’ என்ற குரல்களும் கூடவே சேர்ந்து ஒலிக்கின்றன. ஒப்புக்கொண்டபடி புத்தகத்தை ஏன் வெளியிடவில்லை என்றும், பதிப்பகத்தைக் கலந்தாலோசிக்காமல் புத்தக அறிமுகக் கூட்டத்தை நடத்துவது எப்படித் தவறாகும் என்றும் விளக்கம் கேட்டு நூலாசிரியர்கள் ‘ப்ளூம்ஸ்பெரி’ பதிப்பகத்துக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில், ‘டெல்லி ரியாட்ஸ் 2020’ புத்தகத்தை ‘கருடா பிரகாஷன்’ என்ற பதிப்பகத்தின் வழியாக ஆங்கிலம், இந்தி மொழிகளில் கொண்டுவருவதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

வாசகர்கள் தீர்மானிக்கட்டும்

இது இப்படியிருக்க வெண்டி டோனிகர் எழுதிய ‘தி ஹிண்டுஸ்: அன் ஆல்டர்நேடிவ் ஹிஸ்டரி’ புத்தகத்தை இந்து வலதுசாரிகளின் எதிர்ப்பின் காரணமாக ‘பென்குயின்’ பதிப்பகம் திரும்பப்பெற்றுக்கொண்டதைச் சுட்டிக்காட்டும் சிலர், ‘உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?’ என்றும் கேட்கிறார்கள். அந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தடைகேட்டு வாதாடியவர் ‘டெல்லி ரியாட்ஸ் 2020’ நூலாசிரியர்களில் ஒருவரான மோனிகா அரோரா. இப்போது அவரே, தனது புத்தகத்தைப் பதிப்பகம் திரும்பப்பெற்றுக்கொண்டது தவறான முடிவு என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த இரு விஷயங்களையும் சேர்த்துச் சுட்டிக்காட்டும் அவர்கள் ‘கருத்துரிமைக்கான குரல் முக்கியமானது என்றால், அது எல்லோருக்கும் பொருந்தும் இல்லையா?’ என்கிறார்கள்.

எது எப்படியோ, அரசியல் பிரச்சாரத்தில் உண்மை எது, பொய் எது என்பதையெல்லாம் கடைசியில் மக்களே தீர்மானிப்பார்கள். புத்தகங்களைப் பொறுத்தவரை அது வாசகர்களின் கையில். மக்களிடம் வெற்றிபெற்ற பல பிரச்சாரங்களும்கூட பொய்களின் அடிப்படையிலானது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் நிறையவே உண்டு. உண்மையோ பொய்யோ அவை முதலில் பொதுவெளியில் விவாதிக்கப்படட்டும். ரகசியமாகப் பரப்பப்படும் வதந்திகளையும் நம்பிக்கை களையும்விட பொய்களால் சமூகத்துக்குப் பெரிதாகத் தீங்கிழைத்துவிட முடியாது. பிரச்சாரங்கள் பொய்களையும் உள்ளடக்கியவையே. அவற்றை முறியடிப்பதற்குச் செய்ய வேண்டியது எதிர் பிரச்சாரமே தவிர; கருத்துரிமையைப் பறிப்பது அல்ல.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்