ராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்?

By செ.இளவேனில்

நரசிம்ம ராவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியமான அம்சம் ராவுக்கான சோனியாவின் பாராட்டும், ராவ் நூற்றாண்டை இந்த ஆண்டு நெடுகிலும் காங்கிரஸ் கொண்டாடும் என்ற அறிவிப்பும். அரசியல் களத்தில் பலருக்கு இது ஆச்சரியம். இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், ராவ் முன்னெடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தன என்று சோனியா புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஒரு தலைவரையும் அவரது சாதனைகளையும் பற்றி காங்கிரஸ் கட்சியோ சோனியா காந்தியோ ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸில் கணிசமான தலைவர்கள் ராவின் காலகட்டத்தையே மறக்க விரும்புபவர்களாக இதுவரை இருந்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன?

நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே அப்படியொரு சவாலை வெற்றிகரமாகச் சந்தித்து வெற்றி கண்ட தனது தலைவரை நினைவுபடுத்துவது காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில், சோனியா மற்றும் காங்கிரஸின் இன்றைய நகர்வுகள் புரிந்துகொள்ளக் கூடியவை. ஆனால், கடந்த காலத்தில் ராவை முற்றிலுமாகக் கட்சி புறக்கணிக்க என்ன காரணம் என்பது திறக்கப்படாத ஒரு மர்மம்தான். சோனியா காந்தியும் நரசிம்ம ராவும் தனிப்பட்ட வகையிலும் அரசியல்ரீதியிலும் கருத்தியல் அடிப்படையிலும் எதிரெதிராகவே இருந்தார்கள் என்ற பார்வையும் இந்தத் திடீர் பாராட்டு தொடர்பில் நாம் கவனம் குவிப்பதற்கும் அடிப்படை ஆகிறது.

மறக்கப்பட்ட ராவ்

நேருவின் குடும்பத்துக்கு வெளியே பிரதமராகப் பொறுப்பேற்று தனது ஆட்சிக் காலம் முழுவதையும் பூர்த்திசெய்த முதல் பிரதமர் நரசிம்ம ராவ். அதே நேரத்தில், புது டெல்லியில் நினைவிடம் அமைக்கப்படாத ஒரே ஒரு பிரதமரும் அவர்தான். 2004-ல் அவர் காலமானபோது, அவரது உடல் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 1996-ல் கட்சியின் தோல்விக்கு நரசிம்ம ராவைப் பொறுப்பாக்கிய காங்கிரஸ், அதே வேகத்தில் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விரைவிலேயே மறந்தும்விட்டது.

டெல்லி அரசியலில் திருப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் துரோகங்களுக்கும் எப்போதுமே குறைவு இருந்ததில்லை. நரசிம்ம ராவை சோனியா கண்டுகொள்ளாமல் தவிர்த்ததற்கும் இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எது உண்மை, எது கற்பனை என்று உறுதிப்படுத்துவது கடினம். ஆனால், இருவருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பதவி வகித்த நரசிம்ம ராவுக்கு 1991-க்குப் பிறகு டெல்லியில் தொடர்ந்து இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லாத சூழலில் ஹைதராபாதுக்குத் தன்னுடைய மூட்டைகளைக் கட்டும் ஏற்பாட்டில் இருந்தார். தமிழ்நாட்டில் குற்றாலத்தில் உள்ள ஒரு மடத்தின் பொறுப்பை ஏற்பதற்கான யோசனையும் அவருடைய பரிசீலனையில் இருந்தது. ஆனால், ராஜீவின் படுகொலை ராவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வந்த அழைப்பை சோனியா காந்தி மறுத்துவிட்டார். பிரதமராகும் விருப்பமும் அவருக்கு இருக்கவில்லை. இன்னொரு பக்கம் என்.டி.திவாரி, அர்ஜுன் சிங், சரத் பவார் ஆகியோரில் யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் நிலவியது. ஆனால், நேரு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த எம்.எல்.பொத்தேதாரும் ஆர்.கே.தவானும் இந்த மூவரையுமே விரும்பவில்லை. தொந்தரவுகள் கொடுக்காத ராவையே அவர்கள் பரிந்துரைத்தார்கள்.

சோனியா காந்தியின் முதல் தேர்வாக ராவ் இருக்கவில்லை. பின்பு, சங்கர் தயாள் சர்மாவைத்தான் அவர் பரிந்துரைத்தார். ஆனால், சர்மாவுக்குத் தீவிர அரசியல் மீதான ஆர்வம் கரைந்திருந்த நிலையில், அடுத்த தேர்வாக ராவ் அமைந்தார். அடுத்த பிரதமர் ராவ்தான் என்று முடிவானதும் சோனியா காந்தியைச் சந்தித்த ராவ், தரையில் விழுந்து வணங்கியதாகக் கூறப்படுகிறது. நேருவின் குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்று அவர் குறிப்புணர்த்திய செய்கை என்றார்கள். ஆனால், அரசியலில் மாறாத காட்சிகள் என்று ஏதும் உண்டா என்ன? கூடிய விரைவிலேயே காட்சி மாற்றங்கள் நடந்தேறின.

விரிசல்களின் தொடக்கம்

நேரு குடும்பத்துக்கும் ராவுக்கும் இடையிலான உறவில் ஆழமான விரிசல், சோனியா குடும்பத்தை அரசு கண்காணிக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்தே தொடங்கியது. சோனியாவுடன் யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்கள், சோனியா என்ன மாதிரியான அரசியல் நகர்வுகளில் இருக்கிறார் என்பதை ராவ் அரசு தொடர்ந்து தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தது. சோனியா எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையிலேயே கட்சி இருந்தது என்றாலும், முற்றிலுமாக அவர் அரசியலை வெறுத்துவந்த காலம் இது. ராவின் அரசியல் எதிரிகள் இந்தக் கண்காணிப்பை ஆழமான காயம் ஆக்கினர்.

பொருளாதாரத்தை அணுகிய விதத்தில் மட்டும் அல்லாது சமூகத்தை அணுகுவதிலும் ராவ் பாரம்பரிய நேரு குடும்ப அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு அடுத்த மாறுபாடு ஆனது. 1992-ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு ராவ் நினைத்திருந்தால், தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து காங்கிரஸுக்குள்ளேயே பலரிடமும் இருந்தது. மசூதி இடிப்பைத் தன்னாலான அளவில் தவிர்க்க ராவ் முயன்றார் என்றாலும், அவர் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பறிகொடுத்த விஷயங்களில் ஒன்றே அந்தச் சம்பவம் என்று அவர்கள் கருதினர். இது இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே ஆழமான பிளவை உருவாக்குவதோடு, பாஜகவின் அரசியல் எழுச்சிக்கும் வழிவகுக்கும் என்ற அன்றைய காங்கிரஸாரின் அச்சத்தைப் புறந்தள்ள முடியாது. ராவ் அந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதமே அமைதியின்மை ஏற்படக் காரணம் என்று அர்ஜுன் சிங்கும் என்.டி.திவாரியும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்கள். அதற்கிடையில் அவர்கள் இருவரும் நேரு குடும்பத்துடனான தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் சோனியாவைச் சந்தித்து தன் மீது குற்றஞ்சாட்டியதை ராவ் விரும்பவில்லை. நேரு குடும்பத்தின் இல்லம் தனக்கு எதிரான சதியாலோசனைக்கூடம் என்றே ராவ் எண்ணலானார்.

அரசியல் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, ராவ் மீதான சோனியாவின் வருத்தத்துக்கு முக்கியமான காரணம், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மிகவும் மந்தமான கதியில் நடந்தது என்பதுதான். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனான சந்திப்பில் சோனியா இது குறித்துத் தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்; ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம் இந்தியா கேட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியபோது, சோனியா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ராஜீவ் படுகொலை விசாரணையை ராவ் தலைமையிலான அரசு வேகம் காட்டவில்லை என்று 1995-ல் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார் சோனியா.

கால மாற்றம் காட்சி மாற்றம்

அரசியலில் சோனியா அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாகவே ராவ் மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லாமல் போய்விட்டது. 1996-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து ராவுக்குப் பதிலாக சீதாராம் கேசரி காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார். 1998-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகூட ராவுக்கு வழங்கப்படவில்லை. பாபர் மசூதியைப் பாதுகாக்கத் தவறியதால் ராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை என்று சீதாராம் கேசரி பகிரங்க விளக்கம் அளித்தார். 1998-ல் சோனியா காந்தி காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ராவின் படத்துக்குக்கூட காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இடமில்லாமல் போனது. நரசிம்ம ராவின் மீதான கோபம் அவரது இறப்புக்குப் பின்னும் நீடிக்கிறது.

நரசிம்ம ராவ் இறந்தபோது அவரது உடலை புது டெல்லியில் எரியூட்டவே அவரது குடும்பத்தினர் விரும்பினார்கள். ‘அதை சோனியா விரும்பவில்லை, அவர் ஒரு அகில இந்திய தலைவராகப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை’ என்று ஒரு புத்தகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் நரசிம்ம ராவின் மகன் பி.வி.பிரபாகர் ராவ். கால மாற்றமும் காட்சி மாற்றங்களும் அரசியலுக்கு எப்போதுமே புதிதல்ல என்பதுதான் நரசிம்ம ராவை சோனியா இப்போது பாராட்டியிருப்பதும்.சோனியா காந்தி காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ராவின் படத்துக்குக்கூட காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இடமில்லாமல் போனது. நரசிம்ம ராவின் மீதான கோபம் அவரது இறப்புக்குப் பின்னும் நீடிக்கிறது. இப்படியிருக்க, இப்போது சோனியா பாராட்டியிருப்பது அரசியல் களத்தில் ஒரு ஆச்சரியம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

44 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்