மழைக்கால நோய்கள்:மக்களும் அரசும் செய்ய வேண்டியவை

By கு.கணேசன்

தமிழகத்தில் சென்ற வாரம் பருவ மழை தொடங்கிவிட்டது. அதனால், பருவச் சூழல் மாறிவிட்டது. வழக்கமாகப் பருவநிலை மாறும்போது, கரோனாவைப் போல் அதிகமாக மக்களைப் பாதிக்கும் நோய்கள் பலவும் பரவுவது இயல்பு. ஆனால், கடந்த 4 மாத காலமாகக் காய்ச்சல் என்றாலே அது கரோனா தொற்றாகத்தான் இருக்கும் என்ற பயம் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. எனவே, கரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்குத்தான் அரசும் மருத்துவர்களும் முன்னுரிமை தருகின்றனர். மற்ற காய்ச்சல் நோயாளிகளைப் புறக்கணித்துவிடுகின்றனர். இது இன்னொரு பேரிடருக்குத்தான் வழிவகுக்கும்.

உதாரணமாக, இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1,36,422 பேர், பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் 28,798 பேர் என்கிறது தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம். இதே நிலைமை இந்த ஆண்டும் திரும்புமானால், இந்திய சுகாதாரத் துறைக்கு அதை எதிர்கொள்வது பெரும் சவாலாகவே இருக்கும். மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தவிர, ஃபுளூ காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி எனப் பலதரப்பட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துவருவதை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட கால ஊரடங்கால் ஏற்பட்டுள்ள விரக்தியும், பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கமும் சுமந்துள்ள சமூகத்துக்கு மற்றொரு இடர்ப்பாடாக இந்த நோய்கள் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் அரசுகளுக்கு உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசுகளின் கவனம்

தற்போது அரசுகளின் முழுக் கவனமும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே இருக்கிறது. கரோனாவைப் போலவே டெங்கு காய்ச்சலுக்கும் மருந்து இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே டெங்குவைக் கட்டுப்படுத்த முடியும். வழக்கமாகத் தெருக்களில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தற்போது கரோனா நோய்த்தடுப்புப் பணிக்குச் சென்றுள்ளனர். தெருப் பராமரிப்பு மற்றும் கொசு ஒழிப்புக்கான நிதிகள் எல்லாம் கரோனா ஒழிப்புக்குச் சென்றிருக்கும். அதனால், நாட்டில் பல பகுதிகளில் சுற்றுப்புறச் சூழல் கெட்டிருப்பதைக் காண்கிறோம். ஆரோக்கியம் கெடுக்கும் இந்தச் சூழலை மழைக் காலம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அப்போது எந்தவொரு தொற்றுப் பரவலும் அதிகரிக்கும். அடுத்ததாக, நாட்டில் கரோனா ஒழிப்புக்குப் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்பதுதான் உண்மையான களச் செய்தி. இப்போது அந்தப் பணியில் முன்களத்தில் நிற்கும் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும்கூட போதிய ஓய்வு கிடைப்பதில்லை. இப்படியொரு நிலையில், டெங்கு உள்ளிட்ட மற்ற நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அழுத்தமும் அரசு மருத்துவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

கரோனா தொற்றாளர்களைப் போல டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்த முடியாது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைதான் கொடுக்கப்பட வேண்டும். ஊரடங்கால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகள் கூடுதல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. ஏற்கெனவே கரோனா நோயாளிகளால் அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. இதனால், மற்ற காய்ச்சல் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதையும் சொல்ல வேண்டும். ஊரடங்கால் வாகன வசதி இல்லாமல் இருப்பதும், மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா பரவிவிடுமோ என்ற அச்சமும் காய்ச்சல் நோயாளிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது. இவர்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வரும்போது உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றுவிடுவதால் அவர்களுக்குச் சிகிச்சை கொடுப்பதும் சவாலாக உள்ளது. அப்போது சிகிச்சை பலனளிக்காமல் பலரும் பலியாகிவிட வாய்ப்பு உண்டு.

அதனால்தான், கரோனாவோடு இந்தப் பிரச்சினைகளை அவசரமாக அணுக வேண்டியது அவசியமாகிறது. அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகச் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, மருத்துவக் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும். கரோனாவுக்காகப் பரிசோதிக்கும்போதே மற்ற காய்ச்சல்களுக்கும் சேர்த்துப் பரிசோதித்துவிட்டால் நோயாளிகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாகிவிடும். மேலும், கரோனாவையும் மற்ற நோய்களையும் எப்படிப் பிரித்தறிவது, அவற்றை எப்படித் தடுப்பது போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மக்களுக்குக் கொண்டு செல்வது மிகுந்த பலனளிக்கும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

ஊரடங்கால் இப்போது பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். இதனால், டெங்கு பரவுவது எளிதாகிறது. மழைக் காலத்தில் ஏற்படும் மற்ற காய்ச்சல்கள் உடனடியாக அடுத்தவர்களுக்குப் பரவ இப்போதுள்ள வீட்டுச் சூழலும் உதவுகிறது.

மக்கள் மனது வைத்தால், கரோனாவை மட்டுமல்ல மற்ற மழைக் கால நோய்களையும் தவிர்க்கலாம். முதலில் கைச் சுத்தம், வீட்டுச் சுத்தம், கழிப்பறைச் சுத்தம் காக்கப்பட வேண்டும். குடிநீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வெந்நீரில் கொப்பளிக்க வேண்டும். நீராவி பிடிப்பது நல்லது. இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள்; முகக்கவசம் அணியுங்கள். தெருக்களிலும் பொது இடங்களிலும் துப்பாதீர்கள். சுற்றுப்புறத்தில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கள் தங்கும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை வெளியேற்றிவிடுங்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கொசுவலையைப் பயன்படுத்துங்கள். உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்; கொசுக்களை விரட்டும் புகைக்கருவிகளையும் களிம்புகளையும் பயன்படுத்துங்கள். மழைக் காலத்தில் அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம். நாம் வாழ்வதற்கு மழை அவசியம்; அதை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளப் பழகிக்கொள்வதும் அவசியமே!

- கு.கணேசன், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.comஅ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

வணிகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்