ஆபத்தான பணிச் சூழல் எப்போது அகலும்?

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ‘பிற சுகாதாரப் பணியாளர்’களை ஊக்கப்படுத்தும் வகையில் நாமெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு முன் கைதட்டினோம். எனினும், இந்த ‘பிற பணியாளர்கள்’, அதாவது மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களைப் பற்றி அதிகம் யாரும் பேசுவதில்லை. நோய்த் தொற்றுக்குள்ளாகும் அபாயம் இவர்களுக்குத்தான் அதிக அளவில் இருக்கிறது. அவர்களுடைய பணிகளின் அடிப்படைத்தன்மை குறித்த தெளிவு நம்மிடையே ஒருபோதும் இருந்ததில்லை எனும் வேளையில் அவர்களுடைய வேலையோடு சேர்த்துப் பார்க்கப்படும் தீண்டாமை அந்த வேலையை ஆபத்தானதாகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் ஆக்குகிறது. அந்தப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான பணிச்சூழல்களும் சாதிப் பாகுபாடுகளும் அவர்களை மட்டுமல்ல; அவர்களின் குடும்பங்கள், அண்டை அயலார், கூடவே அவர்கள் தினசரி பழகும் நோயாளிகள், மருத்துவர்கள் போன்றவர்களையும் ஆபத்தில் தள்ளுகின்றன.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் தூய்மை, தொற்றுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து பிஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 22 சுகாதார மையங்களில் 2016-17-ம் ஆண்டுகளில் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களிடமும் பிற மருத்துவமனை பணியாளர்களிடமும் நேர்காணல் செய்தோம்.

உரிமையைக்கூடக் கேட்பதில்லை

பெருந்தொற்றுக்கு முன்பும்கூடத் தங்களையும் நோயாளிகளையும் பாதுகாப்பதற்குத் தூய்மைப் பணியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உடைகள், கவசங்கள், பயிற்சிகள் வழங்கப்படவில்லை. நாங்கள் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவர்கள்; குறிப்பாக, ‘தூய்மைப் பணி செய்யும் சாதியைச் சேர்ந்தவர்கள்’. சாதி அடுக்கில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாலும், அவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்பதாலும் தங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்பதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். இத்தனைக்கும் அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், உடைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டபூர்வமானது.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் தரைகளைத் துடைக்கும்போதும், பெருக்கும்போதும், கழிப்பிடங்களைச் சுத்தப்படுத்தும்போதும், பிரசவக் கட்டில்களைத் துடைக்கும்போதும் அவர்களிடம் கையுறைகள்கூட இருப்பதில்லை. தனது ஒப்பந்தக்காரர் தனக்குக் கையுறைகள் கொடுக்கவில்லை என்பதாலும், செவிலியர்களிடம் கேட்பது சிரமம் என்பதாலும் போதுமான அளவு கையுறைகளைத் தான் பயன்படுத்துவதில்லை என்று ஒரு பணியாளர் கூறினார். ஒருமுறை தனக்கு ரப்பர் காலுறை, முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டபோதும் அவை திருடுபோனதாக ஒரு பணியாளர் எங்களிடம் கூறினார். மறுபடியும் பாதுகாப்பு உபகரணங்கள் தங்களுக்குத் தேவைதான் என்றாலும் கேட்டால் வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

உயிரைப் பணயம் வைத்தல்

நாங்கள் சந்தித்த தூய்மைப் பணியாளர்கள் பலரும் மருத்துவமனையில் தங்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடுமோ, தங்கள் மூலமாகத் தங்களின் குடும்பத்தினருக்கும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்கள். எனினும், வயிற்றுப்பாட்டுக்காகப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்கள் வேலை பார்க்கிறார்கள். தற்போதைய கரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையென்றால் இந்தப் பணியாளர்களுக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பது மட்டுமல்லாமல் நோயாளிகள், பிற மருத்துவப் பணியாளர்களுக்கும் இவர்கள் மூலம் தொற்று பரவும் ஆபத்து இருக்கிறது. தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான உபகரணங்களைக் கேட்பதற்கு இனியாவது அவர்கள் பயப்படாமல் இருப்பார்கள் என்று நம்பலாம்.

தொற்றுக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கவனமாகப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை கரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது. இந்த விஷயங்களில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் பெரிதும் அளிக்கப்படுவதில்லை. நாங்கள் சந்தித்த தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலானோர் இதுபோன்ற பயிற்சிகளைப் பெற்றதில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, சிறப்புப் பயிற்சி அளிக்கும் அளவுக்குத் தூய்மைப் பணிகள் முக்கியமானவையாகக் கருதப்படுவதில்லை. இரண்டாவது, ஒரு தூய்மைப் பணியாளர் கூறியபடி, தூய்மைப் பணிகளில் வழக்கமாக ஈடுபடும் சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த வேலையில் சேரும்போது, அவருக்கு ஏற்கெனவே இதெல்லாம் தெரியும் என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்: “நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். சிறு வயதிலிருந்து இதுபோன்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம்… இதைவிட வேறென்ன பயிற்சி வேண்டும்?” என்று அவரே கேட்கிறார். மூன்றாவதாக, நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு குறித்த பயிற்சிகளைப் பெறும் பிற மருத்துவப் பணியாளர்கள், அது குறித்த தகவல்களைத் தூய்மைப் பணியாளர்களிடம் பகிர்ந்துகொள்வதில்லை. அதையெல்லாம் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பது அவர்களின் எண்ணம்.

பணிச்சூழல் மேம்பட வேண்டும்

ஆக, துரிதகதியில் மாறிக்கொண்டிருக்கும் பெருந்தொற்றுச் சூழலில் எந்தப் புதிய நெறிமுறைகளும் சென்றுசேரும் கடைசி நபர்களாகத் தூய்மைப் பணியாளர்கள்தான் இருக்கக் கூடும். ஆனால், மருத்துவக் கழிவுகள், தொற்று ஏற்படுத்தக்கூடிய உடல் திரவங்கள் போன்றவற்றை நேரடியாகக் கையாளும் சூழல், மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும்போது நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும் சூழல் போன்றவை அவர்களின் பணிக்கே உரிய இயல்பாகும். ஆகவே, தகவல்ரீதியிலும் பாதுகாப்புரீதியிலும் அவர்களைத் தயார்ப்படுத்துவது மிக மிக முக்கியமாகும்.

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் போதவில்லை என்பது குறித்து நிறைய கவனப்படுத்தப்பட்டிருக்கிறது; அது நல்ல விஷயம்தான். ஆனால், நோயாளி உயிர் பிழைப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கும் மருத்துவமனைகள் இயங்குவதற்கும் அந்த மருத்துவமனையின் தூய்மைப் பணியாளர்களும் மிகவும் அவசியமானவர்கள். நமது சாதிப் பாகுபாடுகள் கரோனா ஏற்படுத்தும் ஆபத்துகளை அதிகரிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கு மிகவும் அவசியமான பணியைச் செய்யும் இந்த அத்தியாவசியமான பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் பணிச்சூழல்களை மேம்படுத்தவும் தற்போதைய தருணத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

- கட்டுரையாளர்கள் ‘ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் கம்பாஷனேட் எகனாமிக்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். © தி இந்து, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

17 mins ago

தமிழகம்

48 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்