வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

By டி.பாலசுப்பிரமணியன்

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களின் பாலைவனப் பகுதிகளிலிருந்து புறப்பட்டு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் வரை வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களுக்கு மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருகின்றன. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை நூற்றாண்டுகளாக இந்தியா எப்படி எதிர்கொண்டுவருகிறது என்பதையும், மகாபாரதக் காலத்திலிருந்து வெட்டுக்கிளிப் படையெடுப்பு இருப்பதையும் (“வெட்டுக்கிளிக் கூட்டம்போல் உங்கள் மீது நாங்கள் பாய்வோம்” என்று பாண்டவர்களின் படையைப் பார்த்து கர்ணன் சவால் விடுப்பது நினைவிருக்கிறதா?) ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன.

1900-களின் முற்பகுதியிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் ஜோத்பூர், கராச்சி ஆகிய இடங்களில் ‘வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பு’களை (எல்.டபிள்யூ.ஓ.) உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு வேளாண் துறை அமைச்சகம் அந்த அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தியது.

இது தொடர்பான நிர்வாக விவகாரங்களுக்கு டெல்லிக்கு அருகிலுள்ள ஃபரீதாபாதில் ஒரு அலுவலகத்தையும், தொழில்நுட்ப அம்சங்களுக்காக உள்ளூரில் கிளைகளுடன் ராஜஸ்தானின் ஜோத்பூரிலும் அந்த அமைப்புகளை வேளாண் அமைச்சகம் மேம்படுத்தியது. இந்த நிறுவனங்கள் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த வானிலிருந்து பூச்சிமருந்து தெளிக்கின்றன. இந்தப் பணிகளெல்லாம் பாராட்டத் தக்க வகையில் உள்ளன.

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தல்

வேளாண் அமைச்சகம் என்ற இணையதளத்தைப் பயன்படுத்துகிறது. இது வெட்டுக்கிளிக் கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது. வேளாண் அமைச்சகத்தில் உள்ள ‘பயிர்ப் பாதுகாப்பு, தனிமைப்படுத்தல், சேமித்து வைத்தலுக்கான இயக்குநரகம்’ என்ற இணையதளத்தைக் கொண்டிருக்கிறது. இது பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது. வெட்டுக்கிளிகள் உருவாக்கும் நெருக்கடியை எதிர்த்துப் போராட ஐநாவின் ‘உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு’ (எஃப்.ஏ.ஓ.) அறிவுரைகளையும் நிதியுதவியையும் தருகிறது.

எஃப்.ஏ.ஓ. வெளியிட்டிருக்கும் ‘வெட்டுக்கிளி சூழலியல் சிறுபுத்தகம்’ இந்தப் பிரச்சினையின் தற்போதைய நிலையையும் வெட்டுக்கிளிப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் பற்றிய தகவல்களைக் கொண்டி ருக்கின்றன. வெட்டுக்கிளிப் படையெடுப்பு மற்றும் அதன் மேலாண்மை பற்றி ஹைதராபாதில் உள்ள ‘ஐ.சி.ஆர்.ஐ.எஸ்.ஏ.டி’ சமீபத்திய தரவுகளை வெளியிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, ‘வெட்டுக்கிளிப் படையெடுப்பைக் கண்டுபிடித்து, அவை போகும் வழியில் அவற்றைக் கொல்லுதல்’ என்பதுதான் உலகின் பல்வேறு நாடுகள் பின்பற்றும் வழிமுறையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராடி வெல்லுவதற்கு நமக்கு மேலும் சிறந்த, புதுமையான வழிமுறைகள் நிச்சயம் தேவை.

வெட்டுக்கிளிகள் எப்படித் திரள்கின்றன?

வெட்டுக்கிளிகள் ஏன், எப்படி ஒரு பெருங்கூட்டமாகத் திரள்கின்றன? வெட்டுக்கிளிகள் மிகவும் தனிமையானவை, தனது இனத்தில் மற்ற பூச்சிகளுடன் சேராதவை. எனினும், அறுவடை நேரம் நெருங்கினால் இந்தத் தனிமை விரும்பிகள் தங்கள் இனத்தின் மற்ற பூச்சிகளுடன் சேர்ந்து பெருந்திரளாகி, உணவுக்காகப் பயிர்களைத் தாக்கி அழிக்கின்றன. ஏன் இந்தப் புதிர்? இந்தச் சமூகரீதியிலான மாற்றத்தின் உயிரியல் இயங்குமுறை என்ன? அந்த இயங்குமுறையை நாம் அறிந்தால் அவற்றின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான புதுமையான வழிமுறைகள் நமக்குப் புலப்படலாம்.

வெட்டுக்கிளிகள் ஆய்வில் உலகளாவிய வல்லுநராக இருப்பவர் பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஸ்டீஃபன் ரோஜர்ஸ். வெட்டுக்கிளிகள் உணவைத் தேடும்போது ஒன்றுக்கொன்று தொட நேருகின்றன என்றும், அப்படித் தொடுகையின் மூலம் நிகழும் தூண்டலால் அவற்றின் இயல்பு மாறுகிறது என்றும் ஆய்வுக் கட்டுரை எழுதினார். இந்தத் தூண்டுதல், பூச்சியின் உடலிலுள்ள சில நரம்புகளில் தாக்கம் ஏற்படுத்தி, அதன் இயல்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால், எல்லாப் பூச்சிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிவருகின்றன. மேலும் மேலும் வெட்டுக்கிளிகள் திரளும்போது பெருங்கூட்டம் உருவாகிறது.

முன்பு சாதாரணமாகத் தெரிந்த வெட்டுக்கிளி தற்போது அளவில் பெரிதாகிறது, அதன் நிறம், வடிவம் மாறுகிறது. வெட்டுக்கிளியின் மத்திய நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் சில மூலக்கூறுகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதையும், அவற்றுள் மனப்போக்கையும் சமூக இயல்பையும் கட்டுப்படுத்தும் செரட்டோனின் முக்கியமான ஒன்று என்பதையும் அவரது குழு அடுத்த ஆய்வுக் கட்டுரையில் காட்டினார்கள். அதற்காக, அவர்கள் ஒரு ஆய்வகச் சோதனையை மேற்கொண்டார்கள். செரட்டோனின் உற்பத்தியைத் தடுத்து நிறுத்தும் வேதிப்பொருட்களை (5எஹ்.டி அல்லது ஏ.எம்.டி.பி. போன்ற மூலக்கூறுகளை) சேர்க்கும்போது கூட்டமாகத் திரளுதல் குறைந்தது. ஆக, தற்போது வெட்டுக்கிளிகள் கூட்டமாகத் திரள்வதைத் தடுக்கக்கூடிய வழி இருக்கிறது. வெட்டுக்கிளிகள் திரள ஆரம்பிக்கும்போது, செரட்டோனின் தடுப்பு வேதிப்பொருளைத் தெளிப்பதற்கு ஜோத்பூரிலும் பிற இடங்களிலும் இருக்கும் எல்.டபிள்யூ.ஓ. மையங்களுடன் சேர்ந்து நாம் பணிபுரியலாம்.

இறுதியாக, படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் மீது தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள் (முக்கியமாக, மாலத்தியான்) ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து ஆராய வேண்டும். அது பெரிதும் தீங்கற்றது என்று பல ஆய்வு முடிவுகளும் கூறியிருக்கின்றன. என்றாலும், சுற்றுச்சூழலுக்கும் விலங்குகள்/மனிதர்களின் உடல்நலத்துக்கும் உகந்த உயிரிபூச்சிக்கொல்லிகளை நாம் உருவாக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் இயற்கை வளங்களையும் விலங்குகளிடமிருந்து உற்பத்திசெய்யப்படும் பொருட்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்