மின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்?

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், மத்திய அரசு அவசர அவசரமாக மின்சாரச் சட்டத் திருத்தம்-2020–ஐ இயற்றியுள்ளது. ஏற்கெனவே, மின்சாரச் சட்டம்-2003–ன் விளைவாக, மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50% மின் உற்பத்தி தனியார் வசம் சென்றுவிட்டது. மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்கள் மின் உற்பத்தியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் 34 தனியார் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்படவில்லை.

ஏன் இந்த அவசரம்?

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் வாரியங்களுடன் செய்துகொண்ட நீண்ட கால மின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது குறித்தும், மின்சாரக் கொள்முதல் விலை குறித்த பிரச்சினைகள் குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான மொத்த மூலதனத்தில் 75% வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டவை. இது இந்தியாவில் வங்கிகள் கொடுத்துள்ள மொத்தக் கடனில் 17%. தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையில் 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வாராக்கடனாக மாறியுள்ளன. வங்கிகள் தங்களுக்கு வர வேண்டிய கடன்களுக்காகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தத்திலிருந்து மின் உற்பத்தி நிறுவனங்களைக் காப்பாற்ற, தனியார் மின் நிறுவனங்களை லாபத்துடன் இயங்க வைப்பதற்காகவும், மின் வாரியங்கள் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் செய்ய வைப்பதற்காகவும் தற்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மின் விநியோக உரிமைகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவும் இச்சட்டத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

என்னென்ன பாதிப்புகள்?

தற்போதைய மின் கட்டண நிர்ணய முறையில் வணிக மின் நுகர்வோர்களும் தொழிற்சாலை மின் நுகர்வோர்களும் சற்றுக் கூடுதல் கட்டணமும், இதர நுகர்வோர்கள் சற்றுக் குறைவான மின் கட்டணமும் பெறுகிறார்கள். இம்முறையை மாற்றும் வகையில், இடை மானியத் தொகையை முழுமையாக நீக்கி, ஒரே மாதிரியான மின் கட்டணம் இனி நிர்ணயிக்கப்படும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வீடுகளில் தற்போது செலுத்திவரும் மின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு மின் கட்டணமாகச் செலுத்தும் நிலை ஏற்படும்.

குடிசைகள், வீடுகளுக்குத் தற்போது தமிழக அரசால் இலவச மின்சாரத்துக்கென மானியத் தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய சட்டத் திருத்தத்தால், மாநில அரசானது மானியத்தை மின்சார வாரியத்துக்குச் செலுத்தாமல், மின் நுகர்வோர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், தற்போது இலவச மின்சாரம் பெற்றுவரும் வீடுகள், பொது வழிபாட்டுத் தலங்கள், கைத்தறி மின் நுகர்வோர்கள் அனைவரும் கட்டாயம் மின் கட்டணம் செலுத்த வேண்டும். வீடுகளைப் பொறுத்தவரை மாதந்தோறும் ஒரே அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கோடைகாலங்களில் அதிக அளவு மின்சாரமும், குளிர் காலங்களில் குறைந்த அளவு மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர்கள் உபயோகிக்கும் மின்சார அளவுகளைக் கணக்கிட்டு, அதற்குரிய மானியத்தை ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் மாநில அரசு நேரடியாகச் செலுத்துவது எப்படி நடைமுறைக்குச் சாத்தியமாகும்?

வாடகை வீட்டில் வசிக்கும் வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின் கட்டணத்தை வீட்டின் உரிமையாளர் முன்னமே செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் வீட்டு உரிமையாளர் தன்னுடைய வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின் அளவுகளைக் கணக்கிட்டு, அதற்கான கட்டணத்தை அரசிடமோ, அரசு சொல்லும் தனியாரிடமோ செலுத்த வேண்டும். தற்போது, தமிழக அரசானது மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரத்துக்குக் குறைவாகப் பயன்படுத்தும் மின் நுகர்வோர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. தற்போதைய சட்டத் திருத்தத்தின்படி இம்மானியம் யாருக்கு வழங்கப்படும்? வீட்டு உரிமையாளர்களுக்கா? இல்லை வாடகைதாரர்களுக்கா? வாடகைதாரர்களுக்குக் கிடைக்கக்கூடிய மானியத்துக்காக வீட்டு உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்துவார்களா?

தமிழகத்தில் சுமார் 23 லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. இலவச மின்சாரத்துக்குப் பதிலாக விவசாயிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்க விரும்பினால், அதை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தட்டும் என்று தற்போதைய சட்டத் திருத்தம் சொல்கிறது. இது சாத்தியமே இல்லாதது.

தனியார்மயமாக்கும் முயற்சி

மின்சாரச் சட்டம்-2003–ன் படி, மின் வாரியங்களை உரிமதாரர்களாக வைத்திருக்கிறது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மின்சாரத்தைத் தமிழ்நாடு மின் வாரியம்தான் விநியோகிக்கிறது. ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின் படி, ஒரே உரிமதாரர் என்ற நடைமுறையை ஒழித்து, மாவட்ட வாரியாக உப-உரிமதாரர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் தனியார் நிறுவனமாகத்தான் இருக்க முடியும். ஏற்கெனவே, மாநில அரசுகளால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மின் விநியோகத்தைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையிலேயே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மின் வாரியங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற வாதத்தை முன்வைத்து, இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது பெரிய பொய். ஏனெனில், மின் வாரியங்கள் மற்றும் மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய மொத்த பாக்கித் தொகை ரூ.88,311 கோடி (ஜனவரி, 2020 வரை). அதில் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவை ரூ.19,714 கோடி மட்டுமே.

நிதி ஆயோக், தேசிய கல்விக் கொள்கை–2019, உதய் மின் திட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மின்சாரச் சட்டத் திருத்தமும் அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலிலுள்ள கல்வி, விவசாயம், மின்சாரம், வனம், நீதி நிர்வாகம் என ஒவ்வொரு துறையாக மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்துக்கொள்வது சரியானதுதானா?

- மு.லோகநாதன், வழக்கறிஞர், சமச்சீர் வளர்ச்சிக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்.

தொடர்புக்கு: advlogu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

52 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்