ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி அகலட்டும்!

By செய்திப்பிரிவு

ஆணும் பெண்ணும் சமம் என்பது கோட்பாட்டளவில்தான் போல. நடைமுறையில் பல விஷயங்களில் இதற்கு மாறாகத்தான் இருக்கிறது. இதற்கு ஒரு உதாரணம்தான் ஆண் - பெண் சம்பள இடைவெளி. ஆண்களின் சம்பளத்தோடு அதற்கு இணையான வேலையில் உள்ள பெண்களின் சம்பளத்தை ஒப்பிட்டால், ஆண்களின் சம்பளத்தில் 63%-தான் பெண்கள் சம்பளமாகப் பெறுகிறார்கள் என்று உலகப் பொருளாதாரக் களம் என்ற அமைப்பு தெரிவிக்கிறது.

இந்த இடைவெளியைச் சரிசெய்வதற்கு இப்போது தொடங்கினால்கூட 202 ஆண்டுகள் ஆகும் என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள சம்பள இடைவெளி 19% ஆகும். இந்திய ஆண்கள் ஒரு மணி நேரத்தில் ரூ.242 சம்பாதிக்கிறார்கள் என்றால், பெண்கள் ரூ.196-தான் சம்பாதிக்கிறார்கள். இந்த இடைவெளியைச் சரிசெய்வதில் சர்வதேச நிறுவனங்களின் அளவுக்கு இந்திய நிறுவனங்கள் முனைப்புக் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.

வேலைக்குச் சேரும்போதே பெண்களின் சம்பளம் ஆண்களைவிடக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுவிடுவதால் ,ஆண்களை எட்டிப்பிடிக்கக் கூடுதல் தொலைவு பெண்கள் ஓட வேண்டியிருக்கிறது. இதற்கிடையே திருமணம், குழந்தை பிறப்பு என்று வரும்போது, பெண்களின் பணி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பணி வாழ்க்கையில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எரியும் காடுகள்; உருகும் பனிப்பாறைகள்

இயற்கையில் எல்லாமே எல்லாவற்றுடனும் பிணைப்பில் இருப்பதால் ஏதாவது ஒரு மூலையில் கைவைத்தாலும் இன்னொரு மூலையில் பாதிப்பு நிகழத்தான் செய்கிறது. தென்னமெரிக்கக் கண்டத்தில் பிரேசில், பெரு, கொலம்பியா போன்ற நாடுகளில் வியாபித்திருக்கும் காடுகள்தான் அமேஸான் மழைக்காடுகள். இந்தக் காடுகள் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணம் கொண்டவை. புவியின் இயற்கைச் சூழலுக்கு மிகவும் அத்தியாவசியமான இந்தக் காடுகளின் ஏற்படும் காட்டுத் தீயால் பாதிப்பு தென்னமெரிக்கக் கண்டத்துக்கு மட்டுமல்ல; உலகம் முழுமைக்குதான்.

சமீபத்திய ஆய்வொன்றின்படி, அமேஸான் காட்டுத் தீயால் அங்கிருந்து 1,000 மைல் தொலைவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரின் பனிப்பாறைகள் உருகுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமேஸான் காட்டுத் தீயிலிருந்து செல்லும் புகைத்துகள்கள் ஆண்டிஸ் மலைத் தொடரின் பனிப்பாறைகள் மீது படிவதால் இந்த உருகும் நிகழ்வு அதிகரிக்கிறது. ஆண்டுக்கு 14% வரை அதிகமாக பனி உருகுகிறது என்கிறார்கள். ஆண்டுதோறும் அமேஸான் காட்டுத் தீ அதிகரித்துக்கொண்டே போவதால் எதிர்காலத்தில் நிலைமை இன்னும் தீவிரமடையலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

சபாஷ் அறந்தாங்கி

சத்தமில்லாமல் ஒரு சாதனையைச் செய்திருக்கிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரம். ஆம்! கடந்த ஆண்டு அறந்தாங்கியில் நடந்த பிரசவங்களின்போது எந்தத் தாயின் உயிருக்கும் ஆபத்து நேரவில்லை. 2018-ல் மொத்தம் 10,000 பிரசவங்கள் அங்கே வெற்றிகரமாக நடந்தேறியிருக்கின்றன. 2015-2017 ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் உயிருள்ள குழந்தை பிறப்புகளில் 63 தாய்கள் தமிழகத்தில் மரணமடைந்திருக்கின்றனர். இது நாட்டிலேயே மூன்றாவது குறைந்த எண்ணிக்கை.

தேசிய சராசரியில் தமிழ்நாடு பாதியளவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது, மருத்துவக் கட்டமைப்பில் ஏனைய மாநிலங்களுடன் தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது தெரியும். அறந்தாங்கியின் சாதனையைத் தமிழ்நாடு முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தும்போதுதான் நம் நாடு மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்குவதாக அர்த்தமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்