இணையகளம்: டெல்லி - இருமல்வாசிகளின் நகரம்

By செய்திப்பிரிவு

யதார்த்தா கேபி

1981 ஜூன் மாதத்தில் புழுக்கம் நிறைந்த ஏதோ ஒருநாள் காலையில் பாபி காலர், 22 இன்ச் பெல்பாட்டம், ஸ்டெப் கட்டிங், அரைகுறை ஆங்கிலம் சகிதமாக டெல்லியில் காலடி வைத்தேன். இது ஏதோ என்னுடைய டெல்லி அனுபவக் குறிப்பு என்று பதற்றம் அடைய வேண்டாம். இது வேறு.

அப்போது டெல்லிக்கு ஒரு தனித்த வாசம் இருந்தது. ஒருவகையான பழ வாடை என்பதா, புழுதியின் வாடை என்பதா, எத்தனையோ நூற்றாண்டு வரலாற்றின் வாடை என்பதா என்று அடையாளம் காண முடியாத அளவுக்கு நான் நடந்த சாலைகள், பயணித்த பேருந்துகள், பணியில் சேர்ந்த உள்துறை அமைச்சகத்தின் கட்டிடம், உணவு அருந்திய சவுத் இந்தியா கிளப், தங்கியிருந்த மந்திர் மார்க் வீடு என்று எங்கும் நீக்கமற அந்த வாடை என்னைத் துரத்திக்கொண்டே இருந்தது.

அப்போதைய வெயிலும் மழையும் குளிரும் பனியும் ஒருவகையான வெள்ளந்தித் தன்மையைக் கொண்டிருந்ததாக இருந்தது. வாகனங்களின் புகை பல நேரங்களில் கண்களில் எரிச்சலை வரவழைத்தது. முக்கியமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருவகையான துக்கிணியூண்டு பூச்சிகள் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களிலிருந்து பறந்துவந்து டெல்லி மனிதர்களின் வாழ்க்கையை நரகமாக்கிவந்தன. அந்தப் பூச்சிகள் கும்பல் கும்பல்களாகப் பயணித்து நம் முகத்தைத் தாக்கும். அதனால், சில பிரத்தியேகமான கோளாறுகளைப் பலரும் எதிர்கொண்டனர்.

அதேபோல டீசல் புகை, தொழிற்சாலைகளின் புகை சற்று சங்கடத்தை அளித்துவந்தன. ஆனால், அவையெல்லாம் பழகிவிட்டன. எப்போதாவது விடுமுறைக்கு கிருஷ்ணகிரி போனபோது இந்தப் புகையும் கண் எரிச்சலும் இல்லாமல் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைந்ததுபோல உணர்ந்திருக்கிறேன். டீசல் பேருந்துகள், வாடகை வாகனங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து சிஎன்ஜி வாயுவால் இயக்கப்படும் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு உண்மையிலேயே காற்று மாசு தலைநகரில் வெகுவாகக் குறையத் தொடங்கியது.

ஆனால், இப்போதெல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து கரும்புச் சக்கை, பயிர்களின் காய்ந்த தட்டையை எரிப்பதால் அந்தப் புகையும் உடன் எழும் தும்பும் டெல்லியை உண்டு இல்லை என்று செய்துவருகின்றன. அங்குள்ள விவசாயிகளுக்கு அவற்றை முறையாக அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் அளித்த பிறகும் அங்கங்கு காய்ந்த பயிர்களை எரிக்கிறார்கள். அதனால், டெல்லிவாசிகள் படும் சிரமங்கள் ஏராளம்.

இந்த ஆண்டும் அதேபோல கண்களில் எரிச்சலும் தொண்டையில் கமறலும் வறட்டு இருமலும் எங்களை வதைக்கின்றன. இந்த இருமல் தொடங்கிய ஓரிரு நாட்களில் ரொம்பவும் பயந்துபோனேன். தொண்டையில் ஏதாவது புற்றுதான் வந்திருக்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு மிகவும் முரட்டுத்தனமான இருமல்.

மெட்ரோவிலும் பொது இடங்களிலும் என்னுடன் சேர்ந்து என்னைப் பகடிசெய்வதுபோல மற்றவர்களும் இருமத் தொடங்கியபோதுதான் விஷயம் புரிந்தது. தூக்கமில்லா இரவுகள் இருமலுடன் தொடர்கின்றன. பக்கத்தில் படுக்கும் மனைவியைப் பார்த்தால் பாவமாக இருக்கும். இந்த இருமலைக் கேட்டுத் தூங்க வேண்டியிருக்கிறதே என்று. ஓரிரு நாட்களில் அவளும் என்னுடன் சேர்ந்து இருமத் தொடங்கிவிட்டாள். பக்கத்து அறையில் தூங்கும் மகளும் இப்போது கலந்துகொண்டிருக்கிறாள்.

மருந்து மாத்திரைகளைப் போட்டாலும் தூக்கத்தில் கண் சொருகும்போது இருமல் வந்து எழுப்பிவிடுகிறது. என்னைப் போலவே இந்த நரக நகரத்தில் பலரும் உழன்றுவருகின்றனர். அன்னை யோக்மாயாவும் பேரருளாளர் ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவுலியாவும் இந்த டெல்லி மாநகரத்தை எப்போதும் காத்து ரட்சிப்பதாக இந்நகரத்தின் பெரும்பாலானவர்களைப் போல நானும் உறுதியுடன் நம்புகிறேன்.

(ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சுற்றுலா

36 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்