யார் என்ன எப்படி? - தற்போதைய பேச்சுவார்த்தையின் நிலை என்ன?

By செய்திப்பிரிவு

தம்பி

இந்திய அரசு வரும் அக்டோபர் 31-க்குள் எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு ஒப்பந்தத்தின் கூறுகள் இரு தரப்புகளாலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று கெடு விதித்திருக்கிறது. ஆனால், இதற்கு என்எஸ்சிஎன்-ஐஎம் ஒப்புக்கொள்ளவில்லை. நாகாலாந்துக்கென்று தனிக் கொடியும் தனி அரசமைப்புச் சட்டமும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.

என்எஸ்சிஎன் - ஐஎம் அமைப்புக்கு எதிரான அமைப்புகள் நாகா தேசிய அரசியல் குழுக்கள் ‘என்என்பிஜி’ என்ற குடையின் கீழ் திரண்டுள்ளன. இவை அரசுடன் சமரசத் தீர்வு காண்பதில் விருப்பமாக உள்ளன. ஒப்பந்தத்தின் கூறுகள் என்ன என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

உச்ச பதற்றத்தில் நாகாலாந்து: பின்னணி என்ன?

இதுவரை... பிரிட்டிஷ் இந்திய காலத்தில் ஆரம்பித்த பிரச்சினை இது. 1881-ல் நாகா மலைகள் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டன. வெவ்வேறு பழங்குடியினரின் தொகுதிகளான நாகா மக்கள் இதை விரும்பவில்லை. “பழங்காலத்தில் உள்ளதுபோல எங்களை நாங்களே ஆண்டுகொள்கிறோம்.

எங்களை விட்டுவிடுங்கள்” என்று 1929-ல் இந்தியா வந்த சைமன் குழுவினரிடம் கூறினார்கள். பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக 1946-ல் நாகா தேசிய கவுன்சில் என்ற இயக்கத்தை அங்கமி ஸபு ஃபிஸோ உருவாக்கினார். 1947 ஆகஸ்ட் 14 அன்று, நாகா பகுதிகள் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கவும் செய்தார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு ஃபிஸோ 1952-ல் நாகா கூட்டாட்சி அரசாங்கம் என்ற தலைமறைவு இயக்கத்தை உருவாக்கினார்.

அது ஆயுதக் கிளர்ச்சியாகவும் உருவெடுத்தது. இதனை அடக்க இந்திய அரசாங்கம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரத்தின் கீழ் படைகளை அனுப்பியது. 1963-ல் நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. 1970-களின் இடைப்பகுதியில் நாகா தேசிய கவுன்சிலின் ஒரு பகுதி வன்முறைப் பாதையைக் கைவிட்டது. அந்த இயக்கத்திலிருந்து நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் என்ற இயக்கம் பிரிந்தது.

அந்த இயக்கம் மேலும் இரு பிரிவுகளாக 1988-ல் பிரிந்தது. அந்தப் பிரிவுகளுள் ஒன்றுதான் ‘நாகாலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் - ஐஎம்’ (என்எஸ்சிஎன் - ஐஎம்) இந்த இயக்கம்தான் இந்திய அரசுடன் 1997-ல் நாகாலாந்து பிரச்சினை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது அந்த இயக்கம்தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை நடத்துவது யார்?

நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி. தொடர்புடைய இயக்கங்கள், வெவ்வேறு இனக்குழுக்கள், திருச்சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். பெரும்பாலானோர் தனிக் கொடி, தனி அரசமைப்புக் கோரிக்கையைக் கைவிடவில்லை என்றாலும், ஒப்பந்தம் உருவான பிறகு அவற்றைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்கிறார்கள்.

அண்டை மாநிலங்களுக்கு என்ன பாதிப்பு?

நாகாலாந்துக்காகப் போராடும் இயக்கங்களின் பிரதான கோரிக்கை ‘மாபெரும் நாகாலிம்’. அதாவது, நாகாலாந்து மட்டுமல்லாமல் மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளையும் ஒன்றிணைத்து ‘மாபெரும் நாகாலிம்’ உருவாக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு மணிப்பூர், அசாம் மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. அரசு விதித்துள்ள கெடு நெருங்குவதால் மூன்று மாநிலங்களிலும் பதற்றம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்