இந்தியாவின் வளர்ச்சி வீதம் ஏன் துல்லியமாக இல்லை?

By செய்திப்பிரிவு

அருண் குமார்

எல்லோருடைய கணிப்புகளுக்கும் மாறாக இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜிடிபி) கடந்த ஐந்து காலாண்டுகளாக 8%, 7%, 6.6%, 5.8% என்று பயணித்து இப்போது 5% என்கிற அளவுக்குச் சரிந்துவிட்டது.

உள்ளபடி இதை யாருமே கணிக்கவில்லை. காரணம் என்ன?
இரண்டு மாதங்களுக்கு முன் ஜூலையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையை எடுத்துக்கொள்வோம். ‘நடப்பு நிதியாண்டில் 7% வளர்ச்சி இருக்கும்’ என்று அது சொன்னது. ஒரு மாதத்துக்கு முன் ஆகஸ்ட்டில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதக் கொள்கை அறிவிப்பில், ‘வளர்ச்சி 6.9%’ என்றது. ஜூன் மாதம் அதுவே ‘7%’ என்றும், அதற்கும் முன் ‘7.2%’ என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆசிய வளர்ச்சி வங்கியும், ஐஎம்எஃப்பும் முந்தைய எதிர்பார்ப்பிலிருந்து தங்கள் கணிப்பைக் குறைத்தன என்றாலும், அவையும் 7% என்றே கணித்தன.

எப்படி இத்தனை அமைப்புகள் தங்களுடைய கணிப்பில் தவறுகின்றன? இவையெல்லாமே அரசுகள் தரும் தரவுகளையே இத்தகைய கணிப்புகளுக்கு நம்பியிருக்கின்றன, சுயமாக எதையும் அவை திரட்டுவது கிடையாது. அரசு எப்போதுமே நல்லதையே அறிவிக்க நினைப்பதால், உண்மைகள், இழப்புகள், தவறுகள் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை.
முதலீடு ஏன் அதிகரிக்கவில்லை, நுகர்வு ஏன் பெருகவில்லை? வளர்ச்சி எங்கே சிதறுகிறது? உற்பத்திக் கொள்ளளவில் 75% வரை பயன்படுத்தப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக முதலீடு 30% ஆகவே இருந்தது. இந்தக் கொள்ளளவுப் பயன்பாடும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி, நுகர்வு இரண்டுமே அதிகமாகும்.

இல்லாவிட்டால் கூடுதலாக முதலீடு செய்தால்கூட, உற்பத்தியும் லாபமும் குறைவாகவே இருக்கும். ஓர் ஒப்பீட்டுக்கு இதைக் கவனிப்போம். கடந்த ஜூன் மாதம் பங்குச் சந்தை உச்சத்தில் இரு்நதது, அப்படியும் முதலீட்டு விகிதம் அதிகரிக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் தனியார் நிறுவனத்தின் தரவுகளைப் பார்த்தால் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடுகள் குறைவாக இருக்கின்றன. கடந்த ஆண்டின் நான்கு காலாண்டிலும் கால் கால் சதவீதமாக வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்து, வட்டி வீதத்தை 1% இறக்கியும் முதலீடுகள் பெருகவில்லை.

பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது என்று சொன்னபோது, அரசு தொடர்ந்து மறுத்துவந்தது. இப்போது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு நிபுணர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியாளர்கள் என்று அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை அறிவித்த நிதியமைச்சர், இப்போது கட்டம் கட்டமாக அறிவிப்புகளையும் சலுகைகளையும் வரிக் குறைப்புகளையும் அறிவிக்கிறார். பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதை இச்செயல்கள் ஒப்புக்கொள்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக இந்த அறிவிப்புகள் எதுவுமே வளர்ச்சியை மீட்க உதவாது. பிரச்சினையின் மூலவேர் எது என்பதை அரசு இன்னமும் அடையாளம் காணவில்லை. அரசுக்குப் பிரச்சினை எங்கிருந்து வருகிறது? அது அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையிலிருந்து வருகிறது. பணமதிப்புநீக்க நடவடிக்கையிலிருந்தே அது சுருங்கிக்கொண்டே இருக்கிறது. பொது சரக்கு, சேவை வரி அதன் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தது.

அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையின் சில பிரிவுகள் பொது சரக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை, மற்றவற்றுக்கு மிக எளிதாக வரி செலுத்தும் வழிமுறைகள். இந்தத் துறைதான் நாட்டின் தொழில் உற்பத்தியில் 45% அளவுக்குக் காரணமாக இருக்கிறது. இத்துறைதான் 94% தொழிலாளர்களுக்கு வேலையைத் தருகிறது. இதில் ஏற்பட்டுள்ள சரிவுதான் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் கீழே தள்ளுகிறது.

இது ஏன் வளர்ச்சித் தரவுகளில் இடம்பெறவில்லை?

இந்தத் துறை தொடர்பான தரவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் திரட்டப்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான உற்பத்திப் பிரிவுகளும் சிறு நிறுவனங்களும் இருப்பதால் மாதந்தோறும் காலாண்டுதோறும் ஆண்டுதோறும் என்று தரவுகளைத் திரட்ட முடிவதில்லை. எனவே, ஐந்தாண்டுகள் இடைவெளியில் கிடைக்கும் கடைசித் தரவுகளின் அடிப்படையிலேயே அனைத்தும் மதிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் தனது தரவுகளுக்கும் மதிப்பிடல் களுக்கும் திட்டமிடல்களுக்கும் வேளாண் துறை உற்பத்தி, தொழில் துறை உற்பத்தி குறியீட்டெண், ரயில்வே-போக்குவரத்து-தகவல்தொடர்பு-வங்கிகள்-காப்பீட்டு நிறுவனங்கள்-அரசின் வருவாய், செலவுத் துறைகள் ஆகியவற்றின் தரவுகளையே பெரிதும் நம்பியிருக்கின்றன. இதில் வேளாண் துறையைத் தவிர மற்றவை அனைத்தும் அமைப்புரீதியான துறைகளாகும். சுரங்கம், வங்கிகள், ஹோட்டல்கள்-சிற்றுண்டியகங்கள், போக்குவரத்து ஆகியவையும் அமைப்புரீதியான துறைகளே.

அமைப்புரீதியான துறைகளை அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைகளுக்கும் பிரதிநிதியாகக் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைக்கு ஏற்பட்ட மூன்று அதிர்ச்சிகளின் விளைவுகளைக் கணக்கில் கொள்ளாததால், அரசின் வளர்ச்சி வீதக் கணக்குகள் தவறாகவே தொடர்கின்றன. எனவே, அரசின் தரவுகளை ஏற்கும் நிபுணர்களாலும் இதைச் சரியாகக் கணிக்க முடியாமல் இருக்கிறது. அரசிடம் உள்ள தகவல்கள் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட துறையை மட்டும் சரியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறைக்கு மாற்று வழிமுறையைக் கையாள வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், “எங்களுக்கு வேலை கொடுங்கள்” என்ற கோரிக்கை அதிகரித்திருப்பதும், அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறையில் வேலைசெய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் அமைப்புரீதியாகத் திரட்டப்படாத துறை 10% அளவுக்குச் சுருங்கியிருப்பதை உணர முடிகிறது. இதைக் கணக்கில் கொண்டால் ஜிடிபி 5%-க்கும் குறைவு என்பது புரியும். அது யாராலும் உணரப்படாத நிலையில் இருப்பதற்கு அமைப்புசாராத் துறைகள் தொடர்பாக நம்மிடம் சரியான தரவுத் திரட்டு முறை இல்லாததே காரணம்.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 secs ago

இந்தியா

5 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

46 mins ago

க்ரைம்

52 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்