கலையின் வலிமை

By அரவிந்தன்

இமையத்தின் கதையுலகம் தரும் வாழ்வின் சித்திரங்கள் இமையம் என்னும் கலைஞனின் இருப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகின்றன. இமையத்தின் கதைகளின் வழி அல்லாமல் வேறு வழிகளில் இந்த அனுபவங்களுக்கு ஆளாக இயலாது என்பது அவரது படைப்புகளின் மதிப்பைக் கூட்டுகின்றன. அனுபவங்கள் கலை நோக்குடனும் செய்நேர்த்தியுடனும் மறுஆக்கம் செய்யப்படும்போது நிகழும் மாயம் இது.

வஞ்சிக்கப்பட்டதன் ஆத்திரமும் பழிவாங்கும் வன்மமும் மனித மனங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. பெரும் ஏற்றத்தாழ்வுகளும், வலிமையிலும் வாய்ப்புகளிலும் மாபெரும் இடைவெளிகளும் உள்ள நமது சமுதாயத்தில் ஆத்திரங்களும் வன்மமும் உருவாவது இயல்புதான். மானுட விழுமியங்களின் அடிப்படையில் இந்த உணர்வுகளை நாம் கண்டிக்கலாம். ஆனால் வாழ்வைப் பதிவுசெய்யும் கலைஞன் இந்த விழுமியங்களின் அளவுகோல்களுடன் வாழ்வை அணுக இயலாது. தனக்குச் சொல்லொணாத அநீதி இழைத்தவனுக்குக் கெடுதல் நேர வேண்டும் என்பதற்காகச் சேவலைப் பலிகொடுத்து சூனியம் வைக்கும் மனிதர்கள் தமது அனுபவங்களிலிருந்தே பாடத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். தங்களுக்கான பாதையையும் வகுத்துக்கொள்கிறார்கள். சட்டத்தாலோ சமுதாய அமைப்புகளாலோ தர முடியாத நிவாரணத்தைப் பெறக் கடவுளை அணுகுவதைவிடச் சாத்தானை அணுகுவது அவர்களுக்கு உவப்பானதாக இருக்கிறது.

இது சரியா, தவறா என்று சமூக விஞ்ஞானிகள் வாதிடலாம். ஆனால் அடி மட்டுமே வாங்கித் தேய்ந்துபோன இந்த மனிதர்களுக்கு அந்த வாதங்கள் எதுவும் தேவையில்லை. இதுதான் யதார்த்தம். எவ்வளவு பூசி மெழுகினாலும் மறைக்க முடியாத யதார்த்தம். இந்த யதார்த்தத்தை மதிப்பீடுகள், கருத்து நிலை சார்ந்த வாதங்களின் துணை இன்றிக் கொலைச்சேவல் கதையில் பதிவுசெய்கிறார் இமையம். கிராமத்துப் புழுதியும் வெக்கையும் மனிதர்களின் ஆற்றாமையும் படிப்பவர்களை நேரடியாகத் தாக்கும் சித்தரிப்பின் மூலம் இந்த வாழ்க்கையைப் பொது அனுபவத்துக்குக் கொண்டுவருகிறது இமையத்தின் கலை. மன்னித்து அருளும் பண்பு இந்த மனிதர்களுக்கு ஏன் இல்லை? இவர்களுக்கு இந்த அளவுக்கு அநீதி இழைப்ப்பவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் மனிதாபிமானமோ இரக்கமோ இல்லை? காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் மதிப்பீடுகளும் ஒழுக்க நெறிகளும் இவர்களுக்கு ஏன் அந்நியமாக இருக்கின்றன? நெறிகளுக்கும் வாழ்நிலைகளுக்குமான தொடர்பு என்ன? இமையம் காட்டும் வாழ்வின் சித்திரங்கள் இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியபடி சலனம் கொள்கின்றன.

‘ஒரு கதையும் இரண்டு மனிதர்களும்' என்னும் கதையில் நீதிமன்ற வளாகத்தில் சந்தித்துக்கொள்ளும் குப்புசாமியும் குள்ளம்மாளும் காட்டும் வாழ்வு உரையாடல் மூலமாக உயிர்பெறுகிறது. தன் வாழ்வின் பாடுகளைச் சொல்லும் குள்ளம்மாளிடம் பகிர்ந்துகொள்ளக் குப்புசாமிக்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை. அவர் சொல்ல ஆரம்பித்தால் இதேபோன்ற கதைகளைத்தாம் சொல்ல வேண்டியிருக்கும்.

அதே கதைகள். அதே வலி. அதே விரக்தி. இமையத்தின் பாத்திரங்கள் பெரும்பாலும் வலியையும் விரக்தியையும் சுமந்துகொண்டு திரிகிறார்கள். அவர்கள் மனதில் கனன்றுகொண்டிருக்கும் கோபத் தீ ஒரு ஊரையே எரிக்க வல்லது. இந்த நெருப்பு இந்தக் கதையில் ஆற்றாமையாக வெளிப்படுகிறது. ‘கொலைச்சேவ’லில் பழிவாங்கும் வன்மமாக வெளிப்படுகிறது. ‘பழம்புளி வீட்டுக் கதை'யில் வீம்பாக வெளிப்படுகிறது. ‘அணையும் நெருப்பு' கதையில் வெறுப்பின் உச்சத்தில் துளிர்க்கும் தத்துவமாக வெளிப்படுகிறது. எல்லாமே வஞ்சனைக்கு ஆளான மனதின் எதிர்வினைகள்.

வீம்பும் வன்மமும் வஞ்சிக்கப்பட்ட வலியிலிருந்துதான் பிறக்கும் என்பதில்லை. சிலரிடம் இயல்பாகவே அது கூடியிருக்கும். ‘எதிரி' கதையில் வரும் பாக்கியம் அப்படித்தான். பக்கத்து வீட்டுக்காரன் செய்த பிழையை அவளால் மன்னிக்க முடியவில்லை. சமாதானமாகப் போனால் எல்லாருக்கும் நல்லது என்று காவல்துறை முதல் உறவினர்கள்வரை எல்லோரும் சொல்லும் அறிவுரையைக் கேட்க அவள் தயாராக இல்லை. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்னும் ஆதி வெறியை அவள் பிரதிபலிக்கிறாள்.

தன் நிலத்தைப் பெருவணிக நிறுவனத்துக்கு விற்க மாட்டேன் என்று பிடிவாதம் காட்டும் தங்கம்மாள் (உயிர்நாடி -2) மண் மீதான பற்று எவ்வளவு ஆழமான பிடிவாதத்தை ஏற்படுத்தும் என்பதன் உதாரணமாக இருக்கிறாள். எல்லோரும் நிலத்தை விற்றுவிட்டுப் போகையில் அவள் மட்டும் பணிய மறுக்கிறாள். எல்லாரையும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது என்பதை அழுத்தமாகக் காட்டும் கதை இது. “வெளயுற காட்டெ வித்துட்டு தூங்கற ஊட்டெக் கட்டுறவன் குடியானவனாடா?” என்று தங்கம்மாள் கேட்கும் கேள்வி மண்ணை உயிராக நேசிப்பவர்களின் கேள்வி.

இமையத்தின் கதைகளில் வரும் பெண்கள் மிகவும் வலுவான பாத்திரங்களாக வெளிப்படுகிறார்கள். பெண்களின் ஆளுமை வீச்சில் ஆண்கள் மங்கிவிடுகிறார்கள். பெண்களின் வாழ்நிலைகளினூடே, வாழ்வை அவர்கள் எதிர்கொள்ளும் விதங்களின் வழியே, தனக்கான புனைவுலகத்தைக் கட்டி எழுப்புகிறார் இமையம். பேச்சு மொழியைத் துல்லியமாகத் தருவதில் இவருக்கு இருக்கும் தேர்ச்சியும் ரசனையும் இவரது கதைகளைப் படிப்பதற்கான காரணத்தைக் கூட்டுகின்றன.

கருத்து, அரசியல், படிமம் சார்ந்த பதற்றங்கள், உரிமை கோரல்கள், முகமூடிகள் ஆகியவை இல்லாமல் வாழ்க்கையைக் கலைஞனுக்கே உரிய முறையில் அணுகும்போது உருவாகும் புனைவுச் சித்திரங்கள் கலை வெளிப்பாடுகளாக மாறுகின்றன. அசலான கலையின் வலிமை இதுதான். இந்த வலிமை இமையத்தின் புனைவுகளில் கூடியிருக்கிறது.

கலைஞனுக்கே உரிய நோக்கில் அல்லாமல் சமூக விமர்சகருக்குரிய நோக்கில் வாழ்க்கையை அணுகும்போது இமையத்தின் கலைத் திறன் அவரை விட்டு விலகுகிறது. இத்தகைய நோக்கில் எழுதப்படும் கதைகள் தட்டையான சமூக விமர்சனச் சித்திரங்களாகத் தேங்கிவிடுகின்றன. ‘மணலூரின் கதை’, ‘வேலை’ ஆகிய கதைகளை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். அறிவார்த்தமான அணுகுமுறை கொண்டும் கலைப் படைப்புகள் உருவாக முடியும் என்றாலும் சமூக இயக்கத்தின் எண்ணற்ற சிக்கல்கள், வகைப்படுத்த முடியாத அவற்றின் ஊடுபாவுகள் ஆகியவற்றை விரிவாகக் கற்று ஆழமாக உள்வாங்கும் திறனும் உழைப்பும் கொண்ட அணுகுமுறையே அறிவார்த்தமான படைப்புகளை மேலான தளத்திற்குக் கொண்டு செல்லும். இத்தகைய வலிமை கூடாத விமர்சன அணுகுமுறை புனைவின் சித்திரங்களைக் கருத்து நிலை சார்ந்த துணுக்குகளாக மாற்றிவிடும்.

இந்த விபத்துக்கு ஆளாகாமல் பயணித்தால் இமையம் தன் கலையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

தொடர்புக்கு: aravindan.di@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

43 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்