நம் கல்வி... நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்

By மு.இராமனாதன்

அந்தக் காலத்தில் +2 இல்லை. பள்ளிப் படிப்பு பதினோராம் வகுப்போடு முடியும். அது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்டது. பள்ளிப் படிப்பையும் பட்டப் படிப்பையும் இணைக்கும் ஓராண்டுப் படிப்பு பி.யூ.சி. எனப்பட்டது. இதைக் கலைக் கல்லூரிகளில் படிக்க வேண்டும். ஆக 10, 11, 12 என ஒவ்வொரு வகுப்பையும் தனித்தனியாகப் படித்துத் தேற வேண்டும். 10-ம் வகுப்புக்கும் 12-ம் வகுப்புக்கும் நடுவில், கொஞ்சமல்ல, 11-ம் வகுப்புப் பாடங்கள் முழுவதையும் காணாமல் அடிக்கிற தனியார் பள்ளிகளின் பின்நவீனத்துவக் கல்விமுறை அப்போது அறிமுகமாகியிருக்கவில்லை. என்றாலும், அப்போது படிப்பது ஆயாசம் தருவதாக இருந்ததில்லை. இன்றைக்கு இருப்பது போன்ற அழுத்தங்கள் மாணவர்கள்மீது இல்லை. விரும்பிய அளவுக்குப் படிக்கலாம். இரவு 10 மணிக்கு மேல் விழித்திருந்து படித்தவர்கள் குறைவு.

தேர்வு வைக்கப்படாத பாடப் பிரிவுகளும் இருந்தன. வாரத்துக்கு இருமுறை கைத்தொழில், ஓவியம், நீதிபோதனை வகுப்புகள் இருக்கும். மாலை நேர விளையாட்டைத் தவிர, பள்ளி நேரத்தில் உடற்பயிற்சி வகுப்புகளும் நடக்கும். நான் படித்த காரைக்குடி மாதிரி உயர்நிலைப் பள்ளியில் நான்கு கால்பந்தாட்டத் திடல்கள் இருந்தன.

ஆசிரியர்கள்

அன்று ஆசிரியர்கள் பயிற்றுவிப்பதை வெகு தீவிரமாக எடுத்துக்கொண்டார்கள் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. அரசப்பன் சார் வெள்ளைச் சட்டைக்கும், வெள்ளைக் கால்சட்டைக்கும் இடையே மெலிதான கறுப்புப் பட்டி அணிந்து மிடுக்காக இருப்பார். எனது இயற்கணிதமும் வடிவகணிதமும் அவர் போட்ட அடித்தளத்தின் மீதுதான் நிற்கின்றன. வகுப்பில் கணிதமன்றிப் பிறிதொன்றை அவர் பேசி யாரும் கேட்டிருக்க முடியாது. ராமசந்திரன் சார் உலக வரைபடத்தையே எங்கள் தலைக்குள் கடத்திவிட்டவர். இப்போது செய்திகளில் ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புதிய கடல் வழி பட்டுப் பாதையானது மத்தியக் கிழக்கில் புறப்பட்டு கொல்லம், கொழும்பு, மலாக்கா நீரிணை மார்க்கமாக தென் சீனத் துறைமுக நகரை அடையும்' என்று படித்தால் அதைப் புரிந்துகொள்வதற்கு உலக வரைபடமோ கூகுள் வரைபடமோ தேவைப்படுவதில்லை. டாட் டீச்சர் ஆங்கில இலக்கணம் என்று தனியாகப் பயிற்றுவிக்கவில்லை. ஆனால், பாடப் புத்தகத்தில் வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் பயின்றுவரும் இலக்கணத்தை விளையாட்டுபோல் சொல்லிக்கொடுத்தவர். நாகலிங்க ஐயா யாரும் நோட்ஸ் படிக்கக் கூடாது என்பதில் கறாராக இருந்தார். ஆனால், திருத்தணியிலிருந்து தென்குமரி வரை சந்தையில் கிடைக்கிற எல்லா உரை நூல்களையும் வாங்கிப் படித்துவிடுவார். எந்த உரையைப் பார்த்து எழுதினாலும் கண்டுபிடித்துவிடுவார். கம்பனின் ‘கண்டனன் கற்பினுக் கணி’யும் இளங்கோவின் ‘தேரா மன்னா'வும் இன்றும் மனதுக்கு நெருக்கமாக இருப்பதற்கு ஐயாவின் பாடத்தைக் கேட்டு நாங்களே உரை எழுதிப் படித்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். அப்போது மொழிப் பாடங்களுக்கு மட்டும்தான் உரை நூல்கள் இருந்தன. அதற்கே தடை விதிக்கப்பட்டது. இப்போதெல்லாம் சில பள்ளிகளில் எல்லாப் பாடங்களுக்கும் உரை எழுதிக் கொடுத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். பாடப் புத்தகங்களைப் புரட்டிக் கூடப் பார்க்க வேண்டாம்; உரைநூல்களை நெட்டுருப் போட்டால் போதுமானது என்கிறார்கள்.

மாணவர்கள்

அப்போதெல்லாம் மனனம் செய்கிற மாணவர்களை மற்றவர்கள் உண்டு - இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். பாடத்தை உள்வாங்கிப் படிப்பது என்பதே பொதுவிதியாக இருந்தது. நன்றாகப் படிப்பவர்கள் இருந்தார்கள். சுமாராகப் படிப்பவர்கள் இருந்தார்கள். வசதியானவர்கள் இருந்தார்கள், வசதி குறைந்தவர்கள் இருந்தார்கள். யாரும் வித்தியாசம் பாராட்டுவது இல்லை. நகரின் புகழ்பெற்ற கண் மருத்துவரின் மகன் எங்கள் வகுப்பில்தான் படித்தான். ஊரில் பெரிய கார் வைத்திருந்தவர்களில் மருத்துவரும் ஒருவர். ஆனால், ஒரு நாள்கூட அவன் காரில் பள்ளிக்கு வந்ததில்லை. ஸ்கூட்டர் வைத்திருந்த அப்பாக்களும் இருந்தார்கள். அவர்கள் தங்கள் வாகனத்தைப் பிள்ளைகளைப் பள்ளியில் கொண்டுவிடுவதற்காகப் பயன்படுத்த மாட்டார்கள். நிறைய பேர் சைக்கிள் வைத்திருந்தோம். மற்றவர்கள் பொதுப் பேருந்தில் வருவார்கள், நடந்தும் வருவார்கள். சமத்துவம், யாரும் உரக்கச் சொல்லாமல் நடப்பில் இருந்தது.

இன்று இருப்பதைப் போல பொறியியல் மோகமெல்லாம் அப்போது இல்லை. தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள்தான் இருந்தன. எங்கள் வகுப்பில் நானும் ராமசாமியும்தான் பொறியியலுக்குப் போனோம். விருப்பமான துறையையும் தொழிலையும் அவரவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். இயற்பியலை ஆர்வத்தோடு படித்த சந்திரமோகன் முனைவராகி ஒரு கல்லூரி முதல்வருமானான். லட்சுமணசாமி தனக்கு விருப்பமான வேதியியலைக் கடத்திக்கொண்டுபோய் அமெரிக்காவில் பயிற்றுவிக்கிறான். சுந்தரம் பென்சில் ஓவியத்தில் விற்பன்னன். இப்போது நகைக் கடை நடத்துகிறான். கடையின் மேல்தளம் ஒரு ஓவியக் கண்காட்சியைப் போலிருக்கிறது. வீராச்சாமி - கணக்காளன், ஷீலா சாந்தகுமாரி - விஞ்ஞானி, தெரசம்மா - ஆசிரியை, லெட்சுமணன் - பல் மருத்துவர், சிதம்பரம் - வங்கி அலுவலர். கே.எஸ். கிருஷ்ணனும் அப்துல் ஜபாரும் செல்வநாதனும் ஹர்ஷ்காந்தும் சொந்தத் தொழில் செய்கிறார்கள்.

அப்போது காரைக்குடியில் நான்கு உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. இரண்டு அரசுப் பள்ளிகள், இரண்டு அரசு உதவியுடன் இயங்கிய பள்ளிகள். எங்கும் கட்டணம் இல்லை. இப்போது நகரில் 15 பள்ளிகள் உள்ளன. புதிய பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகள்.

உலகெங்கும் அரசுப் பள்ளிகள்

உலகில் செல்வந்த நாடுகளில்கூட இந்தத் தனியார் பள்ளிக் கலாச்சாரம் இல்லை. ஹாங்காங்கில் பிள்ளைகளிடம் கட்டணம் வசூலிக்கிற, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. வெளிநாட்டினர் படிக்கிற சர்வதேசப் பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையானவை சீன மொழியில் பயிற்றுவிக்கும் அரசுப் பள்ளிகள்தான். இங்கே படித்தவர்கள்தான் ஹாங்காங் பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள்; படிப்பிக்கிறார்கள். உலகின் ஆகச் சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலின் முதல் 50 இடங்களில் மூன்றைப் பிடித்திருக்கிறது ஹாங்காங். முதல் 50 இடங்களில் தலா ஒரு இடத்தைப் பிடித்திருக்கிற பிற ஆசிய நாடுகள் வருமாறு: சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர். மிகுதியும் ஐரோப்பிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்தாம் இந்தப் பட்டியலை ஆக்கிரமித்திருக்கின்றன. உலகின் தலைசிறந்த இந்தக் கல்விக்கூடங்களில் படிக்கிற மாணவர்களில் பலரும் தத்தமது நாடுகளில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்தாம். அங்கெல்லாம் அரசுப் பள்ளிகளில் மேலான உள்கட்டமைப்பு இருக்கிறது; நிதி இருக்கிறது; தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் அப்படித்தானே? பின் ஏன் அரசுப் பள்ளிகள் வக்கற்றவர்களின் புகலிடமாகக் கருதப்படுகின்றன?

ஏனெனில், கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், அதைக் கேட்டுப் பெறுபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர். துரதிர்ஷ்டவசமாக கடந்த 30 ஆண்டுகளில் இவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளுக்குக் கொண்டு போய்விட்டார்கள். மனனம் செய்கிற, மதிப்பெண்களைத் துரத்துகிற கல்வியைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப் பதற்குப் போட்டி போடுகிறார்கள். இந்தப் பாதையிலிருந்து நாம் திரும்ப வேண்டும். அதற்கு கல்வித் துறையிலும் சமூகத்திலும் மனமாற்றம் நிகழ வேண்டும்.

அது நிகழும்போது பிள்ளைகள் தேர்வுகளுக்காக மட்டும் படிக்க மாட்டார்கள். பள்ளிகளில் பாடங்களோடு வாழ்க்கையையும் மனிதாபிமானத்தையும் கற்பார்கள். நடுவில் இந்தச் சமூகம் தொலைத்துவிட்ட பக்கங்களை அவர்கள் மீட்டெடுப்பார்கள்.

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்,

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்