ஞாயிறு அரங்கம்: வனப் புதல்வர்களைக் காக்க என்ன வழி?

By சி.ஆர்.பிஜோய்

வன வளங்களை யார் கையகப்படுத்துவது என்பதில் ஆதிக்க சக்திகளுக்கு இடையில் அதிகரித்துவரும் போராட்டங்களின் வெளிப்பாடுதான் இந்த மோதல்கள். அரசு, அரசுக்கு எதிரான குழுக்கள் என்று இரு தரப்பினருக்கு எதிரான இந்த மோதல்களுக்குக் காரணம், குறுங்குழுவாத முதலாளித்துவம் (குரோனி கேபிடலிசம்) செல்வாக்குப் பெற்று வளர்வதுதான்.

ஆண்டாண்டு காலமாகத் தன்னிடத்திலேயே வாழ்ந்த பழங்குடிகளுக்கு இடமில்லை என்று கதவு சாத்தப்பட்ட வனங்கள், பொருளாதார பலம் மிக்க ஒப்பந்ததாரர்களுக்கும் சுரங்க அதிபர்களுக்கும் (சட்டபூர்வமாகவும் சட்டத்துக்குப் புறம்பாகவும்) கதவைத் திறந்துவிடுகின்றன. 2010 முதல் 2014 வரையில் சட்டத்துக்குப் புறம்பாகக் கனிமங்களை அகழ்ந்து எடுத்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 3,30,512.

2002-ல் வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மேற்கொண்ட வனநில மீட்பு நடவடிக்கையானது, ஏராளமான பழங்குடிகளை வனநிலங்களிலிருந்து வெளியேற்றிவிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் பழங்குடிகள் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக 2006-ல் வன உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து வன நிர்வாகத்தில் புதிய நடைமுறை தொடங்கியது. வனங்களில் வசிப்பவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு கிராம சபைகளிடம் விடப்பட்டது. வனங்களைக் காப்பது, வளர்ப்பது, நிர்வகிப்பது தொடர் பான அதிகாரம் கிராம சபைகளுக்குத் தரப்பட்டது.

அரசை விமர்சிப்பவர்கள்கூட வனங்களையும் பழங்குடிகளையும் பாதுகாக்க வன உரிமைகள் சட்டம்தான் ஏற்றது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஒடிசாவில் உள்ள டோங்ரியா கோண்ட் பழங்குடிகள் தங்களுடைய நியமகிரி மலையைப் போற்றிப் பாதுகாத்துவருகின்றனர். மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோண்டுகள் வெறும் தினக்கூலி ஊழியர்களாக இல்லாமல் வனவளங்களைப் பகிர்ந்துகொண்டு வளமாக வாழ்கிறார்கள். ஆனால், வனத் துறையின் ஒரு பகுதியில் செல்வாக்குமிக்க ஆதிக்க சக்திகள் இது கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி வரையில் நாடு முழுவதும் 29,92,853 ஹெக்டேர் வன நிலங்கள் பழங்குடிகளுக்கு உரியவை என்று அடையாளம் காணப்பட்டு 15,57,424 பேருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இது மொத்த வன நிலங்களில் வெறும் 3.8%தான். அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் வெறும் 9%தான். அரசு, தான் இயற்றிய சட்டத்துக்கு ஆதரவாக நிற்கும் என்று பழங்குடிகள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரையில் வனநிலங்கள் ஒரு பழங்குடிக்குக்கூடப் பட்டா செய்து தரப்படவில்லை. ஆனால் 3,723 பட்டாக்கள் தயாராக இருக்கின்றன. அதே சமயம் 2,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள 4 புலிகள் சரணாலயப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் வெளியேற்றப்படும் ஆபத்து காத்திருக்கிறது. 7,935 ச.கி.மீ. பரப்புள்ள வனப் பகுதிகள் யானைகளுக்கான காப்புக்காடு பகுதி என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பழங்குடிகள் வாழ்வாதாரத்துக்காகத் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து இப்படி மரம் வெட்டும் வேலைக்குப் போயிருக்கிறார்கள்.

வன நிலங்கள் மீது பழங்குடிகளுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு விரைந்து பட்டா வழங்குவதும் அவர்களுக்கு வனப் பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை அளித்து நியாயமான கூலிக்கு வழி வகுப்பதும்தான் அவர்களைக் காப்பதற்கான நியாயமான வழிமுறை. வன நிலங்கள் அரசுக்கும் பழங்குடிகளுக்கும் சொந்தம் என்ற நிலை வரும்போது அதை அவர்கள் அக்கறையோடு காக்க முடியும்.

- சி.ஆர். பிஜோய்,
மக்கள் உரிமைச் செயல்பாட்டாளர்,
சுருக்கமாகத் தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

3 mins ago

ஜோதிடம்

45 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்