ராம் ரஹீம் ராஜ்ஜியம்!

By சந்தனார்

ழிபாட்டுக் குழுவான தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அசாதாரணமான ஒன்று என்றே சொல்ல வேண்டும். பெரிய அளவிலான அரசியல் செல்வாக்குடன் யாராலும் அணுக முடியாதவராக இருந்தவர் ராம் ரஹீம். ஹரியாணா அரசு செய்யத் தவறிய சமூகப் பணிகளைச் செய்தவர் என்று இந்த வழக்கில் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அவரது சாம்ராஜ்யத்தின் பலம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வழக்கமான போலிச் சாமியார்தனத்தை மிகவும் பிரம்மாண்டமாகச் செய்தவர் ராம் ரஹீம். ‘எம்.எஸ்.ஜி. தி மெசஞ்சர்’ வரிசைப் படங்களைத் தயாரித்து, இயக்கி, ‘நடித்து’ தன்னை அதிநாயகனாகக் கட்டமைக்க முயன்றவர், பின்னர், ‘ஜட்டு இன்ஜினியர்’ படத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்குப் பிரச்சாரம் செய்து நடித்தார். ‘தூய்மை இந்தியா’ திட்டப் பணிகளைச் சிறப்பாகச் செய்ததாக பிரதமர் மோடியிடமிருந்தே பாராட்டு பெற்றவர். முன்பு காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் பின்னர் பாஜக ஆதரவாளராக மாறினார். 2014 ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு பகிரங்கமாக அறிக்கை விடுத்தவர் ராம் ரஹீம் சிங்.

ராம் ரஹீம் குற்றவாளி என்று கடந்த வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். ஊடக நிறுவனங்களின் வாகனங்கள் கொளுத்தப்பட்டன என்றால், அவர் மீது ஊடகக் கவனம் இல்லாத காலகட்டத்தில் என்னென்ன அக்கிரமங்கள் நடந்திருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும்.மறுபுறம், தன்னைக் கடவுளாகக் காட்டிக்கொண்டு ஆசிரமப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த ராம் ரஹீம் தனக்கு உதவியாளர்களாகப் பெண்களையே அமர்த்திக்கொண்டார். சமூக சேவை செய்வதாகவும் பெண்களின் மறுவாழ்வுக்கு உதவுவதாகத் தன்னை நிறுவிக்கொள்வதற்குப் பல வேலைகளைச் செய்தார். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பதுபோன்ற தோற்றத்தையும் வெற்றிகரமாக ஏற்படுத்தினார்.

ஆனால், தனது ஆசிரமத்தில் இருந்த பெண்களில் பலரைப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட 18 பெண்களிடம் ராம் ரஹீமுக்கு எதிராகச் சாட்சியம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாலும் இருவர்தான் முன்வந்தனர். அவர்களும் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சாட்சி சொன்ன ஒரு பெண்ணின் அண்ணன் கொலைசெய்யப்பட்டார். அவர்தான் இந்த விவகாரங்களை வெளியில் கொண்டுவந்தார் என்று ராம் ரஹீம் தரப்பு சந்தேகித்தது. அந்தப் பெண்ணின் சார்பில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுவந்த அவரது தந்தையும் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளானார்.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் கொடுத்த புகாரைத் தனது ‘பூரா சச்’ (முற்றிலும் உண்மை) எனும் மாலை நாளிதழில் 2002-ல் வெளியிட்டவர் ராமசந்திர சத்ரபதி. செய்தி வெளியானதையடுத்து அவரது வீட்டுக்கு அருகிலேயே ராம் ரஹீமின் ஆட்கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நான்கு வாரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார் சத்ரபதி.

ராம் ரஹீம் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தபோது நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களில் சத்ரபதியின் மகனான அன்ஷுல் சத்ரபதியும் ஒருவர். “பணம், செல்வாக்கு, இவற்றைத் தாண்டி நீதி வென்றிருக்கிறது. இந்த நாட்டில் நீதி மரித்துவிடவில்லை” என்ற அவர், ராம் ரஹீமுக்கு எதிராகப் புகார் தெரிவித்த பெண்களையும் மனமாரப் பாராட்டினார். “பாலியல் பலாத்காரத்தை எதிர்கொள்ள நேர்ந்த பெண்களுக்கு இந்தச் சமூகம் ஆறுதல் தராமல், அவமானங்களைத்தான் தருகிறது. இந்நிலையில் அந்தச் சவால்களை எதிர்கொண்டு கடந்த 15 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடிய அந்தப் பெண்களுக்கு என் சல்யூட்” என்று வட இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த மனஉறுதிதான் ராம் ரஹீமின் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதுபோன்ற போலிச் சாமியார்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் இந்தப் பெண்களின் மன உறுதி பெரும் ஊக்கம் அளித்திருக்கிறது என்று நம்பலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

27 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்