எங்கிருந்து வந்தார்கள்?

தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் குழுவினர், சிந்துச் சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த சுமார் கி.மு. 2000 -1500 காலகட்டத்தில் சம்ஸ்கிருத மொழியையும், தனித்துவமான கலாச்சார நடவடிக்கைகளையும் தாங்கி இந்தியாவுக்குள் வந்தவர்களா? இந்திய வரலாற்றிலேயே மிகவும் சிக்கலான, அதிகம் சச்சரவுக்குள்ளான இந்தக் கேள்விக்கு மெதுவாக ஆனால், உறுதியான பதில் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

ஆம்! அவர்கள் அப்படி வந்தவர்கள்தாம் என்கிற குழப்பமற்ற முடிவில் உலகம் முழுவதிலும் இருக்கும் அறிவியலாளர் களைச் சங்கமிக்கச் செய்திருக்கிறது புதிய டி.என்.ஏ.ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட மரபணு ஆய்வு (டி.என்.ஏ. என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் டி ஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் என்பது எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் குரோமோசோம்களின் முக்கிய அங்கமான அமிலம்).

இது பலருக்கு ஆச்சரியமானதாகவும், சிலருக்கு அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கும். ஏனெனில், ஆரியர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்ற கருத்தை முற்றிலுமாக மரபணு ஆய்வுகள் பொய்ப்பித்துவிட்டன என்றுதான் கடந்த ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் கதைப்புகள் இருக்கின்றன. இந்த வியாக்கியானம் நம்பும்படியானதல்ல என்பது நுணுக்கம் நிறைந்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்த எவருக்கும் தெரியும். தந்தையிலிருந்து மகனுக்குக் கடத்தப்படும் ஒய் குரோமோசோம்களைக் குறித்து வெள்ளமெனப் பெருகி வரும் புதிய விவரங்கள் இந்தக் கருத்தை முற்றிலும் உடைத்துவிட்டன.

சமீப காலம் வரை தாயிலிருந்து மகளுக்குக் கடத்தப்படும் எம்.டி. டி.என்.ஏ. விவரங்கள் மட்டுமே கிடைத்தன. (எம்.டி. டி.என்.ஏ. என்பது மைட்டோகான்ட்ரியல் டிஎன்ஏ. செல்லுக்குள் இருக்கும் வட்டவடிவிலான இந்த டி.என்.ஏ. உணவில் இருக்கும் ரசாயன சக்தியைச் செல்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித்தருவது. தாயிலிருந்து மட்டுமே கருமுட்டையின் செல்வழியாக மகளுக்குக் கடத்தப்படுவது) இந்த விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த சுமார் 12,500 ஆண்டுகளில் இந்திய மரபணுக் குளத்துக்குள் வெளியிலிருந்து கலப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதுபோல் தோன்றியது. ஆனால், ஆண்களின் ஒய் டி.என்.ஏ.பற்றி வந்திருக்கும் புதிய விவரங்கள், இந்த முடிவைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட்டன. மேற்கண்ட அதே காலகட்டத்தில் இந்திய ஆண் பரம்பரையில் வெளியிலிருந்து மரபணுக்கள் கலந்திருக்கின்றன என்பதற்கு வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது.

பின்னோக்கிப் பார்க்கும்போது, எம்.டி. டிஎன்ஏவுக்கும் ஒய் டிஎன்ஏவுக்கும் இடையில் இருக்கும் இந்த வேறுபாட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது. வெண்கல யுகப் புலம்பெயர்தலில் மிகவும் கடுமையான பாலினப் பாகுபாடு இருந்தது என்பதே அந்தக் காரணம். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அப்போது புலம்பெயர்ந்தோர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்தனர்.

அதனால்தான் எம்.டி. டி.என்.ஏ. குறித்த விவரங்களில் ஆண் மரபணு ஓட்டம் தெரியவில்லை. அதே நேரத்தில் ஒய் டி.என்.ஏ. விவரங்களில் அது தெரிகிறது. குறிப்பாக, இந்திய ஆண் மரபில் 17.5% இன்று மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் பரவலாக இருக்கும் ஆர்1ஏ எனப்படும் ஹாப்லோ குழுவைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. (ஹாப்லோ என்பது ஒரே மூதாதையரிலிருந்து தொடரும் மரபணுக் குழு). இந்த ஆர்1ஏ ஹாப்லோ குழு போண்டிக்-காஸ்பியன் பிரதேசத்திலிருந்து மேற்கு, கிழக்குத் திசைகளில் நகர்ந்து, வழியிலேயே உடைந்து பல கிளைகளாகப் பிரிந்தது.

இந்தியாவுக்குள் புலம்பெயர்வு குறித்து வந்துள்ள சமீபக் கண்டுபிடிப்புகளை ஒரு கட்டுக்கோப்பான வரலாறாகக் கட்டமைத்த ஆய்வுக் கட்டுரை பிஎம்சி எவல்யூஷனரி பயாலஜி என்கிற சக ஆய்வாளர்களின் பரிசீலனைக்குட்பட்ட கட்டுரைகளை வெளியிடும் ஆய்வு இதழில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் வெளியானது. ‘பாலினப் பாகுபாடு மிகுந்த மக்கள்கூட்டப் பரவல் இருந்ததாக இந்திய துணைக் கண்டத்தின் மரபணு வரிசைப்படுத்தல் காட்டுகிறது’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், பிரிட்டனிலுள்ள ஹட்டர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 அறிவியலாளர்கள், “வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மரபணு உள்ளோட்டம் வலுவாக ஆண்களால் உந்தப்பட்டது. இது பண்டைக்கால இந்தோ-ஐரோப்பாவின் தந்தை தலைமையிலான, கணவன்வழிக் கூட்டத்தின் இருப்பிடத்தில் மணமான பெண் தங்கும் வழக்கமுள்ள, தந்தைவழி சமூகக் கட்டமைப்பின் தன்மையுடன் அனுசரித்துப் போகும் அம்சமாகும். போண்டிக்-காஸ்பியன் பிரதேசத்திலிருந்து ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புள்ள ஒய் டி.என்.ஏ. வம்சாவழிக் கூறுகளைத் தாங்கி 5,000-லிருந்து 3,500 ஆண்டுகளுக்கு முன்பு யூரேஷியப் பகுதியின் அகண்ட பரப்புகளுக்குப் பரவிச் சென்ற இந்தோ-ஐரோப்பிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே இது நடந்தது’ என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

“வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் புலம்பெயர்ந்திருப்பதற்கான மிகவும் வலுவான சான்றுதான் இந்தியாவில் காணப்படும் ஆர்1ஏ குழு” என்று மின்னஞ்சல் மூலமாக இக்கட்டுரையாளர் நடத்திய உரையாடலில் பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் கூறினார். உலகம் முழுவதிலுமிருக்கும் மரபணு விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின்போது திரட்டப்பட்ட ஏராளமான விவரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் பேராசிரியர் ரிச்சர்டின் குழு தனது வலுவான முடிவுகளை முன்வைத்துள்ளது.

(தொடரும்...)

தமிழில்: ஆர்.விஜயசங்கர், ஆசிரியர், ஃபிரண்ட்லைன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

15 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்