அணையில் மூழ்கிய வாழ்க்கை

சர்தார் சரோவர் அணையின் 55 அடி உயர மதகுகளை மூடுவது என்ற முடிவை ‘நர்மதை கட்டுப்பாட்டு ஆணையம்’ ஜூன் 16-ல் எடுத்தது. இந்த அணைக்கான அடிக்கல்லை நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு 1961-ல் நாட்டினார். நேரு தனது உரையின்போது, “இந்த அணைத் திட்டத்துக்காக வீடுகளோடு சேர்த்து நிலங்களை அளித்த ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் முழுமையான வாழ்வாதார இழப்பீடு அளித்து நியாயம் வழங்க வேண்டும்” என்று சொன்னது இப்போது பலருக்கும் நினைவிருக்காது.

அந்த நிலங்களை அரசு கையகப்படுத்தியபோது அவற்றில் முற்றிய கோதுமைக் கதிர்கள் அறுவடைக்குக் காத்திருந்தன. அன்றைக்கு 6 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள், இன்றைக்கு 900 ஆகப் பெருகியிருக்கின்றன. என்றாலும், அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட நிலமும் இதர சொத்துக்களும் ‘நீர்ப்பாசனத் திட்டம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள்’ என்று இன்றுவரை அறிவிக்கப்படவில்லை. அந்த இடங்களில்தான் திட்ட அலுவலகம், ஊழியர்களுடைய குடியிருப்புகள், சாலைகள், கிடங்குகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுத் தேர்தலை மனதில் கொண்டு…

கடந்த 8 ஆண்டுகளாக 122 மீ்ட்டர் உயரம் வரையே தண்ணீர் தேக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைப் பூர்த்தி செய்துவிட்டால், அதை அடுத்துவரும் குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது தன்னுடைய சாதனையாக விளம்பரப்படுத்தி வெற்றியை அறுவடை செய்ய பாஜக தீர்மானித்திருக்கிறது. உண்மையில், இது சாதனையே இல்லை என்பதுதான் உண்மை. மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதிகள் நீரில் மூழ்கப் போகின்றன.

2017 பிப்ரவரி 8-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஜூலை 31-க்குள் அனைவருக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டுவிடுமா? மக்கள் அனைவரையும் அங்கே குடியமர்த்திவிட முடியுமா? மறு குடியமர்த்தலுக்கான இடங்கள் இன்னும் தயாராகவில்லை. குடிநீர் இல்லை, சாலைகள் போடப்படவில்லை, கழிவுநீர், மழைநீர் வெளியேற வடிகால்கள் அமைக்கப்படவில்லை. கால்நடைகள் மேய மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்த வசதிகள் அனைத்தும் மறுகுடியமர்த்தல் பகுதிகளில் கட்டாயம் செய்து தந்திருக்கப்பட வேண்டும்.

எது சாதனை?

நர்மதை நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தங்களுக்கு முழு அளவுக்கு இழப்பீடு வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் வலியுறுத்துகின்றனர். உச்ச நீதிமன்றமும் 2000, 2005, 2017 ஆண்டுகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிப் போராடுவோரைத்தான் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’, ‘தேச விரோதிகள்’ என்று குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பின்னணியில்தான், நர்மதை நதி நீரை முழுமையாகப் பயன்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காக மத்திய பிரதேச அரசைப் பாராட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், அணையின் உயரத்தை மேலும் உயர்த்தி அதிக அளவில் நீரைத் தேக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னால், இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையையே ஆயிரக் கணக்கில் குறைத்த மோசடியை உச்ச நீதிமன்றமே தன்னுடைய 2005 தீர்ப்பில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்களுக்கு ரொக்க இழப்பீடு வேண்டாம் – நிலம்தான் வேண்டும் என்று வலியுறுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களுக்கு இன்னமும் நிலம் தரப்படவில்லை; நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இன்னமும் அறிவிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் அதிலும் குறிப்பாக ஏழைப் பெண்கள் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை, சுகாதாரம் போன்ற சாதாரண வசதிகளைக்கூட இன்னமும் பெறாமல் இருக்கிறார்கள். இந்த உண்மைகளெல்லாம், அணையில் நீரைத் தேக்கும் உயரத்தை அதிகப்படுத்துவதற்காகக் கூட்டப்படும் கூட்டங்களில் ஒப்புக்கொள்ளப்படுவதே இல்லை.

மத்திய பிரதேசத்தில் உள்ள மறுவாழ்வுக் குடியிருப்புப் பகுதிகள் மிகவும் மோசமான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளன. 78 இடங்கள் வசிப்பதற்கே தகுதியற்றவை என்று விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொடுத்த இடத்துக்குத் தகுந்த மதிப்பைவிடக் குறைவான இழப்பீட்டைப் பெற்றவர்களால் வீடுகளைக் கட்டிக்கொள்ளவோ அதில் குடியேறவோ முடியவில்லை.

18,346 குடும்பங்கள் இந்த அணை திட்டத்துக்காகச் சொந்தக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டன. இது 2017 மே 27-ல் அரசு வெளியிட்ட அரசிதழ் அறிக்கையில் வெளியான தகவல். எங்களிடம் உள்ள தரவுகளின்படி இந்த எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு.

தாகம் மிகுந்த ஆறு

எவ்வளவு ஏழையாக இருந்தாலும் தற்காலிகக் குடியமர்வை ஏற்கமாட்டார். அல்லது அவருக்குக் கிடைக்க வேண்டிய மனையளவில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொள்ள மாட்டார். அதிகாரிகளோ, ‘அரசு எதைக் கொடுத்தாலும் அதை ஏற்கத் தயார்’ என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் ஜூலை 15-க்குள் கையெழுத்திட வேண்டும் என்று எல்லோருக்கும் நெருக்குதலைத் தந்திருக்கின்றனர்.

மக்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள் எல்லா கிராமங்களிலும் இரவில் ஒட்டப்படுகின்றன. மிரட்டியோ, ஆசை காட்டியோ 2.5 லட்சம் பேரைக் கிராமங்களிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று உத்தி வகுக்கப்பட்டிருக்கிறது. மதகுக் கதவுகளை இழுத்து மூடி தண்ணீர் மட்டத்தை உயரவைத்து, கையில் கிடைத்த மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் தாங்களாகவே வெளியேறச் செய்துவிட வேண்டும் என்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆற்றோரங்களில் வாழ்ந்த இந்த மக்களை, ஆறே இல்லாத இடங்களிலும் அந்தக் கலாச்சாரமும் சூழலும் இல்லாத பகுதிகளிலும் குடியமர்த்தத் திட்டமிடப்படுகிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி, எல்லாப் பயனாளிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்காமல் எப்படி இதைச் செய்து முடிக்க அரசால் முடியும்?

இன்னும் மறுவாழ்வு பெற வேண்டியவர்கள் எண்ணிக்கை ‘பூஜ்யம்’ என்று மத்திய பிரதேச அரசு கூறுகிறது. மகாராஷ்டிரமும் ஆதிவாசிகளை ஏமாற்றிவிட்டு, அணையின் நீர்மட்ட உயரத்தை அதிகப்படுத்த உத்தரவிட்டுவிட்டது. குஜராத் எந்தக் காலத்திலும் அணையால் இடத்தை இழந்தவர்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்து கேட்டதே கிடையாது. நர்மதை திட்டத்தின் அடுத்த கட்டம் மக்களுக்கு இப்போதுதான் புரியத் தொடங்கியிருக்கிறது. ஆதிவாசிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. இப்போது அவர்களைக் குடியமர்த்தியுள்ள இடங்களில் குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடையாது. அவர்கள் வாழ்ந்த இடங்களில் தண்ணீரைத் தேக்கி மிகப் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், டெல்லி-மும்பை தொழிற்பேட்டை வளாகத்துக்கும் தண்ணீரைக் கொண்டுசெல்லப் போகிறார்கள்.

உண்மைக் கேள்விகள்

ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. உலக வங்கி இந்தத் திட்டத்திலிருந்து ஏன் விலகியது? உண்மையில் எத்தனை குடும்பங்களுக்கு முழுதாக மறுவாழ்வு வழங்கப்பட்டது? கட்டாயப்படுத்தி வெளியேற்றிய குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? குஜராத் சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திட்டத்தை முடிக்கத் துடிப்பதன் அவசியம் என்ன? கடல்நீர் நிலப் பகுதியில் ஊடுருவியதையும் நல்ல நீர் உவர் நீராக மாறியதையும் இதுவரை தடுக்காமல் இருப்பது ஏன்? மறுவாழ்வுக்காக, கிராமங்களைச் சேர்ந்த சாமானியர்களும் பழங்குடிகளும் ஒவ்வொரு துறையாக அலைய வேண்டுமா? அவர்களுக்கு விடையோ, பலனோ கிடைப்பதற்கு முன்னால் அணையின் மதகுகளை அவசர அவசரமாக மூடத்தான் வேண்டுமா? இதை வாசிக்கும் அறிவார்ந்த வாசகர்களும் மக்களும் இதற்கான பதில்களைத் தீர்மானிக்கட்டும்.

- மேதா பட்கர், நர்மதைப் பாதுகாப்பு இயக்க நிறுவனர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி ©: ‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்