முத்தமிடுவதால் செத்துவிடுமா கலாச்சாரம்?

By வெ.சந்திரமோகன்

பிரான்ஸில் நடந்த சம்பவம் இது. தமிழ் எழுத்தாளர் ஒருவர் பிரெஞ்சு தெரிந்த தனது நண்பருடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிர் இருக்கையில் ஒரு ஜோடி, சூழலையும் மறந்து மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் (முத்தம் உட்பட). இதைப் பார்த்த எழுத்தாளர் தன் நண்பரிடம், “இதெல்லாம் நம் நாட்டில் சாத்தியமா?” என்று கேட்டாராம். “ஏன், உங்களுக்கு அத்தனை ஆசையா?” என்றாராம் நண்பர் சிரித்துக்கொண்டே. “இல்லை. அந்த ஜோடியின் அருகில் இருப்பவரைப் பாருங்கள். எதுவுமே நடக்காததுபோல் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் நம் நாட்டில் சாத்தியமாகுமா என்று வியந்துகொண்டிருக்கிறேன்” என்றாராம் அந்த எழுத்தாளர்.

இந்தியாவில் இதுபோன்ற காட்சிகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில் பல்வேறு சமூகச் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. இந்தியாவில் சராசரிக் குடும்ப அமைப்பின் பின்னணியிலிருந்து வரும் யாரும் இந்தக் காட்சியைச் சாதாரணமாகக் கடந்துவர மாட்டார்கள் தான். ஆனால், பொதுவெளியில் காதலர்கள், தம்பதியர் தங்கள் அன்பைப் பரிமாறிக்கொள்வதைத் தடுக்கும் வகையில் ‘கலாச்சாரக் காவலர்கள்’ நடந்துகொள்வதுதான் இன்று பெரும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. கேரளத்தில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முத்தப் போராட்டம் இதற்குச் சரியான உதாரணம்.

கோழிக்கோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. ‘இந்தி யாவில் பேசுவதற்கும் சாப்பிடுவதற்கும்தான் வாயைப் பயன்படுத்துவோம். முத்தம் என்ற ஒன்று நம் நாட்டிலேயே கிடையாதே’ என்ற ‘தார்மிக’ கோபத்தில் கொதித்தெழுந்த ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட யுவ மோர்ச்சா என்ற அமைப்பு, அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இந்த அராஜகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்று ஃபேஸ்புக் மூலம் ‘சுதந்திரச் சிந்தனையாளர்கள்’ என்ற அமைப்பினர் ஒன்றுதிரண்டனர். ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முத்தப் போராட்டம் செய்ய அந்த அமைப்பு முடிவுசெய்தது.

கொச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆயிரக் கணக் கான ஆண்களும் பெண்களும் திரண்டனர். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் இதில் அடக்கம். யுவ மோர்ச்சா, ஏபிவிபி, பஜ்ரங் தள் போன்ற இந்து அமைப்புகளும் முஸ்லிம் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்துக்கு எதிராகக் களத்தில் இறங்கின. எனினும் ஏற்பாடு செய்யப்பட்டதுபோல், முத்தப் போராட்டம் நடைபெறாமல் காவல்துறை ‘கடமை’யாற்றியது. போராட் டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், போலீஸ் வேனுக்குள்ளும், காவல் நிலையத் திலும் முத்தமிட்டுக்கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. இதற்கிடையே, கலாச்சாரக் காவலர்களின் கடும் எதிர்ப்பால் ‘கிஸ் ஆஃப் லவ்’ ஃபேஸ்புக் பக்கமும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது. தங்கள் தரப்பின் நியாயத்தை, அந்த அமைப்பினர் ஃபேஸ்புக்குக்குப் புரியவைத்த பின்னர், மீண்டும் அந்தப் பக்கம் திறக்கப்பட்டது.

அடிப்படைவாதம் என்ற ஆபத்து

போராட்டத்தில் கலந்துகொண்ட பலர், “கலாச்சாரக் காவலர்களின் அத்துமீறலைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இந்த முத்தப் போராட்டத்தை நடத்த முடிவுசெய்தோம்” என்று குறிப்பிடு கின்றனர். இப்படியான அதிரடியான முடிவுதான் தங்கள் போராட்டம் குறித்த விரிவான கவனத்தை ஈர்த்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். “வாழ்வதற்கான அடிப்படை உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படை யான இந்திய அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரான வைதான் காதலர்கள் மீதான தாக்குதல்கள்” என்று இந்த அமைப்பினர் கொந்தளிக்கிறார்கள்.

காரணம் கலாச்சாரமா?

காதலர் தினக் கொண்டாட்டங்கள், பப் கலாச்சாரம் போன்றவற்றையும் அடிப்படைவாத அமைப்புகள் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றன. காதலர் தினத்தின்போது பொது இடங்களில் சந்தித்துக்கொள்ளும் காதலர்களிடம் தாலியைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளச் சொல்வது அல்லது காதலனின் கையில் ‘ராக்கி’கட்டச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சநஞ்சம் அல்ல.

‘காதலுக்குத் தண்டனை’ என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை பஞ்சாயத்துத் தலைவர்கள் உட்பட, அதே ஊரைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கலாச்சாரக் காவலின் தீவிரம் எந்த எல்லையையும் எட்டும் என்பதற்கு உதாரணம் இது. கலாச்சாரத்தைவிடவும் மேன்மையானது மனிதநேயமே என்பதை நாம் இன்னும் உணரவில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற தருணங்

களில் மதத்தின் அடிப்படையில் வேறுவேறு துருவங்களில் செயல்படும் இந்து அடிப்படைவாத அமைப்புகளும், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் ஒரே நேர்க் கோட்டில் வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அடிப்படையில், சமூக ஒழுக்கம், பண்பாடு என்று பல்வேறு பெயர்களைச் சொன்னாலும் தங்கள் சமூகத் துக்குள் ‘கலப்பு’ நிகழ்ந்துவிடக் கூடாது என்ற பதற்றம்தான் அடிப்படைவாத அமைப்புகளை இயக்குகிறது. காதல், கலப்புத் திருமணம் போன்றவற்றுக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அந்த அமைப்புகள் எடுப்பதற்கும் காரணம் இதுதான். இயல்பாகவே இவற்றுக்கு எதிரான மனப்பான்மையில் இருக்கும் பெற்றோர்களுக்குத் தார்மிக ஆதரவை இதுபோன்ற அமைப்புகளும், குறிப்பிட்ட சில கட்சிகளும் தாராளமாகத் தருகின்றன. அதன் மூலம் அரசியல் ஆதாயத்தையும் அந்த அமைப்புகள் பெறு கின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் பலாத்கார நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்

கொண்டே வருகின்றன. தெருக்களில், பேருந்துகளில் ஏன் வீடுகளிலேயே பாலியல்ரீதியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர். இந்தியாவில் 53.22 % குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று சொல்கிறது ஐ.நா-வின் புள்ளிவிவரம்.

இவை பற்றியெல்லாம் எந்தக் கலாச்சாரக் காவலர்களும் கவலைப்படுவதில்லை. காதலர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தால்தான் உங்கள் கலாச்சாரம் பறிபோகிறதென்றால் கலாச்சாரத்தின் உண்மையான அர்த்தம்தான் என்ன?

- வெ. சந்திரமோகன்,

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்