நனவாகுமா கனவு?

நம் தேசத்தின் நிறைவேறாத நூற்றாண்டுக் கனவு: சர்வதேசத் தடகளத்தில் ஒரு தங்கம்

சில நாட்களில் தொடங்கப்போகிறது 2016 ஒலிம்பிக் திருவிழா. இதில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதே இன்றைய பரபரப்பான கேள்வி. குறிப்பாக, தடகளத்தில் நிறைவேறாத நூற்றாண்டுகளின் கனவை இம்முறை இந்தியா எப்படி நிறைவேற்றப்போகிறது?

உலகின் மிகப்பெரும் மனித சக்தியைக் கொண்ட தேசம். 2020-ல் வல்லரசாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பும் தேசம். அதன் நிறைவேறாத நூற்றாண்டுக் கனவு: ‘சர்வதேசத் தடகளத்தில் ஒரு தங்கம்’. தடகளத்தில் தொடர்ந்து மண்ணைக் கவ்வுவது இந்தியாவின் துயர்மிகு சரித்திரம். மில்கா சிங்கையும், பி.டி.உஷாவையும்தான் தடகளத்துக்கென இந்திய முகமாக இன்றுவரை கைகாட்டுகிறோம். மில்கா சிங் களத்தில் இருந்தது 1960-களில். பி.டி.உஷா 1980-களில்.

அதைவிட ஆச்சரியம், இந்தியா இதுவரையில் ஒலிம்பிக் தடகளத்தில் ஒரு தங்கம்கூட வென்றது இல்லை. கடைசியாக, வெள்ளி வென்றது எப்போது தெரியுமா? 1900 பிரான்ஸ் ஒலிம்பிக்கில். இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்காரர் நார்மன் கில்பர்ட் பிரிட்சார்ட் தான் அதையும் வாங்கிக்கொடுத்தார். இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அதன் வரலாற்றிலேயே சிறப்பான இடத்தைப் பிடித்தது அப்போதுதான். 17-வது இடம்.

ஒலிம்பிக் பதக்க அலசல்கள்

கடைசியாக நடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியைச் சற்று அலசுவோம். 27 பேர் கலந்துகொண்ட மும்முறை நீளம் தாண்டும் போட்டியில் 27-வது ஆளாக வந்தார் நம் வீரர் ரஞ்சித் மகேஷ்வரி. 27-வது என்றுகூடச் சொல்ல முடியாது. தவறாகத் தாண்டியதால் பவுல் முறையில் வெளியேற்றப்பட்டார் என்பதே சரி.

டின்டு லூகா, பி.டி.உஷாவின் பள்ளியில் இருந்து வந்தவர். 800 மீ. ஓட்டத்தில் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதி என மீடியாக்கள் சொன்னபோது, டின்டுவுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், அவருடைய மாநிலத்தைச் சார்ந்த அஞ்சு பாபிஜார்ஜே, ‘டின்டு வெல்வதற்கு வாய்ப்புகளே இல்லை’ எனப் பேட்டியளித்தார். கடைசியில், இறுதிச்சுற்றுக்குக்கூட முன்னேற முடியாமல் பரிதாபமாக டின்டு தோற்றுப்போனார். இத்தனைக்கும் அவர் தேசிய சாதனையை (1:59.17) கொண்டவர்.

சுதா சிங் 3,000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்குக்கூட முன்னேற முடியவில்லை. அதிக தூரப் போட்டிகளான 20, 50 கி.மீ. நடை, மாரத்தான் என அடுத்தடுத்துத் தோல்விகள். போட்டிகள் முடிந்தபோது மற்றவர்கள் பதக்கத்துக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருக்க… நாம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தோம். தேசிய சாதனை வீரர் அனில் குமார் 100 மீ. ஓட்டப் போட்டியில் 10.30 நொடிகளில் வெற்றியை வைத்திருக்கிறார். ஒலிம்பிக் 100 மீ. இறுதிப்போட்டியில் அனைவரும் 9.98 நிமிடத்துக்கு முன்பாக முடித்தவர்கள். அந்தப் போட்டியில் கடைசியாக வந்த ஜமைக்காவைச் சேர்ந்த அசாஃபா பாவல் கூட 9.72 நொடிகளில் கடந்த வெற்றிச்சரித்திரம் கொண்டவர்.

சேல்லி ஆன்னின் குதிரை ஓட்டம்

அமெரிக்காவைப் பாருங்கள், சீனாவைப் பாருங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஜமைக்கா குட்டி நாடு. பூதக்கண்ணாடியை வைத்துத்தான் வரைபடத்தில் அந்நாட்டையே தேட வேண்டும். ஆனால், தடகளத்தில் உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் அந்நாட்டினர். 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்காவின் தங்கமங்கை சேல்லி ஆன்னின் ஓட்டத்தைப் பாருங்கள், தேர்ந்த உயர் ரக பந்தயக் குதிரையைப் போல அத்தனை லாகவத்துடன் நொடிகளில் இறுதிக்கோட்டை அடைவார். தடகளத்தில் உயரம் முக்கியமெனக் கருதப்பட்ட வரலாற்றைச் சுக்குநூறாய் உடைத்தவர். உயரம் கொண்டவர்கள் களத்தில் ஓடிக்கொண்டிருக்க இவரோ பறந்துகொண்டிருப்பார்.

குறுகிய தூரப்போட்டியில் ஜமைக்கா முடிசூடா மன்னன் என்றால், நீண்ட தூரப்போட்டிகளில் ஆப்பிரிக்க நாடுகள். முதல் மூன்று இடங்களுக்கான போட்டி கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, மொராக்கோ ஆகிய நால்வருக்குள்தான் நடக்கும். மற்றவர்கள் நான்குக்குப் பிறகான இடங்களுக்கு வேண்டுமானால் போட்டி போட்டுக்கொள்ளலாம். காரணம், ஆப்பிரிக்கர்களின் அர்ப்பணிப்பும் பயிற்சியும் சிலிர்க்க வைக்கக்கூடியது. காடு, மேடு என பல்லாயிரக்கணக்கான கி.மீ-க்களை அங்குலம் அங்குலமாக அளந்து வைத்திருக்கும் அவர்களின் கால்கள். ஒரு நாளில் சாதாரணமாக 12 மணி நேரத்தைப் பயிற்சிக்காக ஒதுக்குகிறார்கள். கென்யர்கள் அலை அலையாக நீண்ட தூர ஓட்டப் போட்டியில் வருவதற்கு என்ன காரணம் என்று ஒரு ஆப்பிரிக்கரிடம் கேட்டேன். யோசிக்காமல் வயிற்றைத் தடவியபடி சொன்னார் ‘சோறு’ என்று. அங்கே சொந்தமாக ஒரு பூட்ஸ் வைத்திருப்பவர் பணக்காரர். வெறும் காலில் 40 கி.மீ. ஓடுவதைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் பின்னான விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் புரியும்.

இந்தியாவின் பசந்தரானா, லண்டன் ஒலிம்பிக் 50 கி.மீ. நடையில் 33-வது இடம்பிடித்தார். அதில் அவர் ஒரு சாதனையும் படைத்தார். இந்தியாவிலேயே 50 கி.மீ. நடையைக் குறுகிய நேரத்தில் கடந்தவர் என்ற சாதனை. அப்படியானால், ஒலிம்பிக்கில் 33-வது இடம் இந்தியாவில் முதலிடம். இந்தியர்களின் தரத்துக்கும் சர்வதேசத் தரத்துக்கும் இடைப்பட்ட இடைவெளி அது.

திரும்பத் திரும்ப நம்மைப் பார்த்துக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான். நம்மால் ஏன் ஒரு சேல்லியையோ, உசைன் போல்டையோ குறைந்தபட்சம் நார்மன் பிட்சர்டைக் கூட உருவாக்க முடியவில்லை? உள்கட்டமைப்பு இல்லாமல், மனித வளம் குறைந்த, பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மை இல்லாத நாடுகளில் இருந்து உலக சாதனைகள் கணக்கெடுக்கப்படும்போது எதில் தொலைத்தோம் நம்மை? இந்தியர்கள் வலிமையற்றவர்களா?

நிம்மதியாகத் தூங்கலாம்

இத்தனை காலமும் ஏன் இந்தியர்கள் தோற்றுப் போகிறார்கள்? முக்கியமான காரணம், அரசியல் மற்றும் மிகக் கேவலமான விளையாட்டுத் துறை ஊழல்கள். வலிமையான வீரனை உருவாக்குவது ஒரே நாளில் நடக்கக்கூடிய விஷயமல்ல. மனம், உடல், தொழில்நுட்பம் என அனைத்தும் அலசி ஆராயப்பட வேண்டிய துறை தடகளம். தடகளத்தின் ஆரம்பமே மனதைத் தயாராக்குவதுதான். அதோடு உடலையும் தயாராக்க வேண்டும். வீரர்களுக்கான பொருளாதாரம், கல்வி, தனிமனித மேம்பாடு என அனைத்திலும் முன்னகர வேண்டும். தூசிதட்டிப்போன நமது ஊரக விளையாட்டு மைதானங்களை, உடற்பயிற்சிக் கூடங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். தோற்றாலும் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளி அளவில் தோற்றுப்போகும் மாணவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதைப் போன்ற அபத்தம் வேறில்லை.

சினிமாக்களை மட்டுமே பார்த்து வளரும் ஒரு மிகப் பெரிய இளைஞர் கூட்டத்தை இந்தியாவின் கனவுகளை நோக்கி எப்போது திருப்பப் போகிறோம்? மொபைல் போன் விளையாட்டுகளைத் தூக்கிப்போட்டுவிட்டு, புழுதிபடிய களத்தில் நம் தேசத்துக்காக விளையாட இளம் தலைமுறையைச் சிரம் தாழ்த்தி அழைக்கிறேன். நமக்காகக் களம் காண்பவர்கள் அவர்கள்தானே?

தங்கப் பதக்கத்தைக் கையிலேந்தியபடி இந்த வார்த்தைகளைச் சொல்லப்போகும் அந்த மகத்தான வீரனுக்காக இந்த தேசம் நூறு வருடங்களாகக் காத்திருக்கிறது: “எங்கள் தேசத்தின் நூற்றாண்டுக் கனவை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். இந்தியா இன்று இரவு நிம்மதியாகத் தூங்கலாம்!”

- நிலன்,

தொடர்புக்கு: writernilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

32 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்