மார்பெர்க்: இன்னொரு எபோலா?

By சுதாகர் கஸ்தூரி

எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா?

டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது விந்து திரவத்தைப் பரிசோதித்து அதில் எபோலா இன்னும் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால், நமது தலைவலி இத்தோடு முடிந்துவிடவில்லை. இரு மாதங்களுக்கு முன் வந்த ஒரு தகவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

செப்டம்பர்-11 என்றாலே அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்தான் நினவுக்கு வரும். மற்றொரு மோசமான செய்திக்கும் அந்த நாள் பிரபலமடைந்திருக்கிறது. உகாண்டாவின் தலைநகரான கம்ப்பாலாவில், மெங்கா என்ற மருத்துவமனையில் ஒரு செவிலியர் மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சல் என்ற தொற்றுநோயால் அன்று மரணம் அடைந்திருக்கிறார். ஒருவர் மட்டுமே இறந்திருக்கும் இந்த நோய்க்கு ஏன் பயப்பட வேண்டும்?

மார்பெர்க் ரத்தக்கசிவுக் காய்ச்சல், எபோலாவின் சகோதரன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட அதே அறிகுறிகள், அதே அளவிலான தொற்றும் தீவிரம், பரவும் வேகம், கொல்லும் குரூரம் என்ற வகையில், இது எபோலாவுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. எபோலா முதன்முறையாகக் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய இதே வருடத்தில், இது மீண்டும் தோன்றியிருக்கிறது என்றால், பரபரப்பின் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஜெர்மனியிலிருந்து…

1967-ல் ஜெர்மனியின் மார்பெர்க், ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் அன்றைய யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடு நகரங்களின் ஆய்வுக்கூடங்களிலிருந்து தொற்றி, வெளியேறி, பெரும் பீதியைக் கிளப்பிய இந்த நோயை மார்பெர்க் நகரின் பெயரையே சூட்டினார்கள். மார்பெர்க்கின் ஆய்வுக்கூடத்தில் உகாண்டாவிலிருந்து கொண்டுவந்திருந்த ஆப்பிரிக்கப் பச்சைக் குரங்கு களிடமிருந்து, அவற்றைப் பேணியவர்களுக்கு முதலில் தொற்றி, அவர்களிடமிருந்து நகரில் பரவியது இந்நோய். மோசமான செய்தி என்னவென்றால், எபோலா போலவே இதற்கும் மருந்துகள் இல்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. பிழைத்தால் அதிர்ஷ்டம்.

ரத்தக் கசிவு நோய்கள் பலவகை உண்டு. எபோலா, லிஸ்ஸா, கிரிமீயன் காங்கோ போன்றவை தீவிர மானவை. இருப்பதிலேயே மோசமானது எபோலா என்றால், அதைவிட இறப்பு வீதம் அதிகம்கொண்டது மார்பெர்க்தான் (மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்).

பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து…

மார்பெர்க் வைரஸ், எபோலா போன்று, ரூஸெட்டஸ் ஏஜிப்டியாக்கஸ் என்ற ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்களிடமிருந்தே பிற இனங்களுக்குப் பரவுகிறது. நைஜீரியா, கென்யா, உகாண்டா, காங்கோ, தென்னாப்பிரிக்க நாடுகளில் மார்பெர்க் காய்ச்சல் அவ்வப்போது தோன்றித் தணிந்த வரலாறு உண்டு. பழந்தின்னி வவ்வால்கள் அதிகம் காணப்படும் சுரங்கங்களில் பணிபுரியும் சுரங்கத் தொழி லாளர்களிடம் இந்த வைரஸ் தொற்றி, அவர்கள் மூலம் குடும்பங்களில் பரவித் தீவிரமடைகிறது. இந்த நாடுகளில் சுரங்கப் பகுதி நகரங்களில் சுத்தம், சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு அதிகம் இல்லாததால், நோய் பரவுவதும் வெகு எளிதாகிறது. சமீபகாலம் வரை, இந்தக் குடியிருப்புகளில் உள்ளவர்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும் வாய்ய்பு இல்லாமையால், நோய் அந்தப் பகுதியில் மட்டும் கட்டுப்பட்டிருந்தது. உகாண்டாவில் இறந்த செவிலியருக்கு மார்பெர்க் நோய் எப்படித் தாக்கியது என்பது இன்றும் புதிர். வவ்வால் நிறைந்த எந்தக் குகைக்கும் அவர் சென்றதாகத் தெரியவில்லை.

அதிசயமாக உயிர்பிழைத்தவர்கள்

மார்பெர்க்கின் தாக்கம் 2008-லும் நிகழ்ந்திருக்கிறது. நெதர்லாந்திலும் அமெரிக்காவிலும் உகாண்டா சென்றுவந்த இருவர் மார்பெர்க் நோயால் தாக்கப்

பட்டுப் பிழைத்திருக்கிறார்கள். இருவரும், உகாண்டாவின் தேசிய வனவிலங்குக் காப்பகத்துக்குச் சென்றதாகவும், அங்கிருக்கும் பிரபலமான குகையில் தகுந்த பாதுகாப்பு உறைகள் இன்றி நுழைந்ததாகவும் தெரியவந்தது. அந்தக் குகையில் பழந்தின்னி வவ்வால்கள் நிறைந்திருக்கும். வவ்வால்களின் எச்சங்கள், இறந்த வவ்வால்களின் உடல் திரவங்கள் இவர்கள்மீது பட்டு, அதன்மூலம் பரவியிருக்கக்கூடும் என எண்ணப்படுகிறது. தகுந்த சிகிக்சை இன்றியும் அவர்கள் அதிசயமாக உயிர்பிழைத்தனர்.

மார்பெர்க் காய்ச்சலில் இறப்பு விகிதம் குறித்து வேறுபட்ட கருத்து நிலவுகிறது. சுமார் 90% இறப்பு சாத்தியம் என்று ‘டைம்’ இதழ் கூறியிருக்கிறது. இதே அட்டவணைப்படி எபோலா 50% - 80% வரை இறப்பு விகிதம் கூறப்பட்டிருக்கிறது. இது சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்தப் போதுமான, நம்பத் தகுந்த புள்ளிவிவரங்கள் இல்லை.

மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சலுக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள், எபோலா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. மார்பெர்க் காய்ச்சலுடன் எளிதில் நோயாளிகள் கண்டங்கள் தாண்டி வந்துவிட முடியும். அவர்களுக்கு எபோலாவின் அறிகுறிகள் தோன்றி, அதற்கான மருந்து கொடுத்து அது பயன்பெறாமல் போகும் நேரமே மார்பெர்க் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்குள் நிலைமை மோசமாகிவிட்டிருக்கும். அவர்களைக் கையாண்ட செவிலியரும் நோய் தாக்கம் கண்டிருப்பர். எபோலா போன்றே இதுவும் தீவிரமாகப் பரவுவதால், அறியாமைக்கும் அழிவுக்கும் இடையே உள்ள போராட்டமாக இது வெடிக்கும். ஒரே நேரத்தில் எபோலா, மார்பெர்க் என்று இரண்டு தீவிரமான தொற்று நோய்களை உலகம் சமாளிப்பது மிகக் கடினம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

உகாண்டா மட்டுமல்ல, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் நபர் களைக் கண்காணிக்க வேணடும். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுச் செயலாக்கம் செய்வது அத்தனை எளிதல்ல. பெருமளவில் சமூக, பொருளாதாரச் சிக்கல்களை உலகெங்கிலும் இந்தக் கட்டுப்பாட்டு விதிகள் ஏற்படுத்தக் கூடும். இதனை முன்னறிந்து, தயார்நிலையில் நாடுகள் இருக்க வேண்டும்.

மார்பெர்க் மற்றும் மற்றைய ரத்தக் கசிவுக் காய்ச் சல்களைப் பற்றிய பொதுஅறிவு மக்களிடையே பரவலாகப் பரப்பப்படுவது அவசியம். இதுவரை நாம் அறிந்திராத கிரீமியன்- காங்கோ, லிஸ்ஸா போன்ற நோய்கள்குறித்து ஊடகங்களும் சுகாதாரத் துறை போன்ற அரசு இயந்திரங்களும், மருத்துவத் துறையும் அடிக்கடி மக்களிடம் செய்திகளைக் கொண்டுசேர்க்க வேண்டும்.

இந்தக் காய்ச்சல் பரவியிருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்யாதிருத்தல், அங்கிருந்து வரும் உறவினர்கள்குறித்து முன்கூட்டியே அரசுக்கு அறிவித்தல், வந்தவர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர் களைத் தனிமைப்படுத்தி வைத்தல், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அறிவித்தல், மருத்துவமனையிலும் அவர்களைப் பற்றிய விவரங் களைத் தயங்காது அறிவித்தல் போன்றவற்றால் மருத்துவர்கள், பேணுபவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.

- சுதாகர் கஸ்தூரி,

அறிவியல் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர், ‘6174' என்னும் அறிவியல் புனைகதை நாவலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: kasturi.sudhakar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இந்தியா

11 mins ago

க்ரைம்

8 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்