இயற்கை விவசாயத்துக்கு மானியம் கொடுங்கள்- நெல் இரா.ஜெயராமன்

By செய்திப்பிரிவு

நவீன விவசாயத்துக்குச் செய்யப்படும் செலவில் பாதியைச் செலவிட்டாலே இயற்கை விவசாயம் மூலம் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம். பசுமைப் புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கொட்டப்படும் ரசாயன உரங்களால் மண் நஞ்சாகி, மலடாகிவிட்டது. இதனால் எந்தச் சாகுபடியும் முழு அளவில் மகசூல் தருவதில்லை. விளைபொருட்களும் விஷமாகிவிட்டன.

தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகள் பரவலாக இயற்கை விவசாயத்தை ஆர்வத்துடன் செய்கிறார்கள். ஆனால், இயற்கை விவசாயத்துக்குத் தேவையான நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவற்றுக்கு வேளாண்மைத் துறை மானியம் வழங்குவதில்லை.

ஆனால், விவசாயத்தையும் மண்ணையும் பாழ்படுத்தும் யூரியா, பொட்டாஷ் போன்றவற்றுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இது முழு அளவில் விவசாயிகளைச் சென்று சேருகிறதா என்பதும் கேள்விக்குறிதான். உதாரணமாக, களைக் கொல்லிக்கு 50 % மானியம் அளிக்கிறார்கள். இதை மூன்று முறை உபயோகப்படுத்தினாலும், களைகள் அழிவதில்லை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்காத மருந்துகள்கூட வேளாண் துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றால் பலன் ஏதும் இல்லை.

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. ஆனால், சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்குப் பல்வேறு சிரமங்கள். இதிலும் இடைத்தரகர்களே பலன் அடைகிறார்கள். இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்கிறது. ஆனால், வேளாண் துறை வெளி மாநிலங்களின் பெயர் தெரியாத நெல் ரகங்களை கிலோ ரூ.700 - 800 விலையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட வழங்குகிறது. இதைத் தவிர்த்து, தமிழகத்தில் அந்தந்தப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம்.

வறட்சி, வெள்ளம் என அனைத்தையும் தாங்கி நல்ல மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தவும், அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியையும் வேளாண் துறை கையில் எடுக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயற்கை வேளாண்மைக்கு எனத் தனித் துறையைத் தொடங்கியுள்ளது. அதில் மாணவர்களுக்கு மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்குத் தனி கொள்கையை உருவாக்கி, இயற்கை விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணும்போது நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுகிறது. அரசு மருத்துவத் துறைக்குச் செலவிடும் தொகையும் குறையும். மக்களும் நலமுடன் இருப்பார்கள். இவ்வகை உணவு தானியங்களைச் சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு விநியோகிக்கலாம். இவற்றைச் செய்தாலே இயற்கை விவசாயம் தழைக்கும். இவ்வாறு மண்ணையும் மக்களையும் காக்கும் இயற்கை விவசாயத்துக்குத் தனி அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.

சந்திப்பு: எஸ்.கல்யாணசுந்தரம்​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்