‘எங்கள் குழந்தைகள், அவர்கள் குழந்தைகள்

By வே.வசந்தி தேவி

கல்வியில் பாகுபாடு ஒழிந்தாலொழிய இந்தியாவில் வளர்ச்சி சாத்தியம் இல்லை.

“இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. இது கொடிய அநீதி மட்டுமல்ல; வேகமாக வளரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தைக் கட்டுவதற்கு முற்றிலும் பொருத்தமற்றதும் திறனற்றதுமாகும்” என்பார் அமர்த்திய சென்.

அமெரிக்க அரசியல் அறிவியலாளர் மைரான் வெய்னரின் 'இந்தியாவில் அரசும் குழந்தையும்' (1991) என்ற புத்தகத்தில் அவர் சொல்கிறார், “இந்தியாவின் ஆளும் வர்க்கமும், அரசியல்-அதிகார அமைப்பினரும் கடைப்பிடிக்கும் கொள்கை, ‘எங்கள் வர்க்க குழந்தைகள் வேறு, அடித்தட்டுக் குழந்தைகள் வேறு. இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதும், ஒரே மாதிரியான கல்வி அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பதும் இயலாத விஷயம்' என்பதுதான்.” பாகுபடுத்தும் இவர்களின் கண்ணோட்டமும், வர்க்க-சாதிய அகம்பாவமும்தான் இந்தியக் கல்வியின் தாழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் சொல்கிறார். இந்தப் புத்தகம் வெளிவந்தது 1991-ல். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கூற்றை அமர்த்திய சென் சொன்னது 2013-ல். இடைப்பட்ட 22 ஆண்டுகளில் இந்தியக் கல்வியின் வணிகமயமும் தனியார்மயமும், அதன் விளைவான பாகுபடுத்தலும் ஏற்றத்தாழ்வுகளும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்குத் தீவிரமடைந்திருக்கின்றன.

சமத்துவமாவது மண்ணாவது?

கல்வியாளர் ஜே.பி. நாயக் சொல்கிறார், “கல்வி முக்கோணத்தின் மூன்று பக்கங்கள்: அனைவரும் கல்வி பெறுதல், அதன் தரம், சமத்துவம். இதன் ஒரு பக்கம் சரிந்தாலும், முக்கோணமே உடைந்துவிடும்.” இந்தியாவில் கல்வியில் சமத்துவம் என்பது காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. ஆகவேதான், தாழ்வுற்ற கல்வியும், அதன் காரணமாக தாழ்வுற்ற தேசமும்.

‘சமத்துவமாவது, மண்ணாவது? எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? கற்காலத்து, காலாவதியான கதைகளெல்லாம் பேசாதீர்கள். அதெல்லாம் செத்தொழிந்துவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் ஒழிந்துவிட்டது. பெர்லின் சுவரின் இடிபாடுகளுடன் புதைக்கப்பட்டுவிட்டது' என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். உண்மை என்னவென்றால், பெர்லின் சுவருக்கு மேற்கிலும் கிழக்கிலும் அனைத்து வளர்ந்த நாடுகளிலும், முன்னணியில் வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகளிலும் கல்வியில் சமத்துவம் என்பது ஏகோபித்த ஏற்புகொண்ட, ஆதாரமான வளர்ச்சிக் கொள்கை. இந்த நாடுகளில் அனைத்து வர்க்கக் குழந்தைகளும் முழுவதும் அரசு நிதியில் நடக்கும் அருகமைப் பொதுப்பள்ளிகளில்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள்.

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பள்ளி!

வகுப்பறைதான் சமத்துவம் உருவாக்கும், பிரிவுகள் உடைக்கும்; ஆகவே, அறிவைப் பெருக்கும் இடமும், ஆற்றல் வளரும் இடமும் அதுவே. நம் நாட்டில் அந்தப் பேச்சுக்கே இன்று இடமில்லை. நமது சாதிய ஏணியில் எத்தனை படிகள் இருக்கின்றனவோ, அத்தனையும் கல்வி ஏணியிலும் இருக்கின்றன. ஒவ்வொரு சிறு வர்க்கப் பிரிவுக்கும் ஒரு வகைப் பள்ளி. இத்தகைய கல்விக் கொள்கையின் மூலம் ஒரு வலிமை வாய்ந்த சமுதாயக் கட்டமைத்தல் நடந்துகொண்டிருக்கிறது. ஒளிரும் இந்தியா, வாடும் இந்தியா என்ற இரு வேறு இந்தியாக்கள் உருவாவதிலும், அதனை வலிமைப்படுத்தி, நிலைக்க வைப்பதிலும் கல்வி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல நாடுகளில் பள்ளிக் கல்வியின் தரத்தை ஒப்பிடும் பி.ஐ.எஸ்.ஏ. என்ற உலகளாவிய கணிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட 74 நாடுகளில் இந்தியாவின் இடம் 73. இந்தத் தரவரிசையில் உயர்ந்து நிற்கும் அனைத்து நாடுகளும் பேதங்களற்ற, இலவசப் பொதுப் பள்ளிகள் வழியாக மட்டுமே கல்வி அளிக்கும் நாடுகள். இந்த நாடுகள் சோஷலிஸ நாடுகள் அல்ல; முதலாளித்துவ நாடுகள்தான். சமத்துவத்தில் நம்பிக்கையற்ற முதலாளித்துவ நாடுகள் ஏன் அனைத்துக் குழந்தைகளும் சமமான, இலவசக் கல்வி பெறும் அமைப்பை பல காலமாக ஏற்றிருக்கின்றன? காரணம், ஒரு நாட்டின் மனித வளம் முழுவதும் ஆற்றல் பெற்ற சக்தியாக எழ வேண்டுமென்றால், அனைத்துக் குழந்தைகளும் சமதரக் கல்வி பெற வேண்டும். இந்த நாடுகளின் வளர்ச்சிக்கான அடித்தளமே இத்தகைய கல்வி அமைப்புதான்.

இந்தப் பாதையிலிருந்து இந்தியா விலகுவதன் நாசகர விளைவுகள், மனித வள வளர்ச்சியில் 174 நாடுகளில் இந்தியா 136-வது இடம்; சமூக முன்னேற்றத்தில் 132 நாடுகளில் 102-வது இடம்; உழைக்கும் மக்களில் நவீனத் திறன் கொண்டோர் இந்தியாவில் 6.7%, சீனாவில் 50%, ஐரோப்பிய யூனியனில் 75%.

எங்கெங்கு காணினும் பாகுபாடு

இந்தியக் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் ஆயிரம் வழிகளில் இயங்குகின்றன. கல்வியின் ஒவ்வொரு நூலிழையிலும் பாகுபாடு பின்னப்பட்டிருக்கிறது. கொடிய அநீதியான சாதிய அமைப்பை தார்மிக அமைப்பு என்று ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடியவர்களல்லவா நாம்!

இன்று புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கட்டத்தில், வெட்கக்கேடான வர்க்கக் கல்வியே, வர்த்தகக் கல்வியே நமதாகிவிட்டது. இன்றைய ஆளும் சித்தாந்தமான சமூக டார்வினிஸம், போட்டிப் பாதை ஒன்றே வளர்ச்சிப் பாதை என்று பறைசாற்றுகிறது. வல்லவர்கள் மட்டும் வாழ வழிவகுக்கும் பாதை இது. வசதி படைத்த பெற்றோர்களின் அதீத ஆசைகளுக்காக, அதிகார வேட்கைக்காக நடக்கும் இந்த இதயமற்ற போட்டியில் குழந்தைகள் பகடைக்காய்களாக மாறுகிறார்கள். கருணையற்ற வணிக உலகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இதைத்தான் அமர்த்திய சென், “முதல் இடத்தைப் பிடிக்கும் இளைஞர்களை உருவாக்கும் தேசிய வெறி” என்று குறிப்பிடுகிறார்.

இந்தப் போட்டி உலகில் பாடத்திட்டம் நாளும் அதிகரிக்கிறது; பள்ளிப் பைகளின் கனம் ஏறுகிறது, முதுகுகள் வளைகின்றன, வீட்டுப்பாடம் கொல்கிறது, வாழ்வே மனஅழுத்தம் நிறைந்ததாகிறது. பள்ளி நேரத்துக்குள் இந்தப் பாடத்திட்டத்தைக் கற்றுத்தருவது இயலாததால், தனிப்பயிற்சி அத்தியாவசியமாகி, பள்ளியின் நீட்சியாகவே மாறிவிடுகிறது. குழந்தைகள் பள்ளியிலிருந்து தனிப்பயிற்சி வகுப்புகளுக்கு ஓடுகிறார்கள். மாலை நேரமும், அதிகாலை நேரமும் சேர்ந்து, வகுப்புப் பாடங்களைப் படிப்பதிலேயே கழிகிறது. ‘அப்படித்தான் நீ முதல் ராங்க் வாங்க முடியும்; வெல்ல முடியும்; மற்றவர்களைத் தோற்கடிக்க முடியும். மற்றவர்களைத் தோற்கடிப்பது. அதுதான் வாழ்வின் குறிக்கோள்.'

வடிகட்டுவதற்கான உத்திகள்

இந்தப் பிரமிடின் உச்சியில், வசதி படைத்தோர் (அதாவது, மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்போர்) இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச்செல்லும் திறமை பெறுகிறார்கள். மத்தியதர, மேல்தட்டுப் பெற்றோர் தங்கள் குழந்தைகள் உலகை வெல்ல வேண்டுமென்ற வெறியுடன் அவர்களை வளர்க்கிறார்கள். இவர்களுக்கு வானமே எல்லை என்று சொல்லப்படுகிறது. சிறு வயதிலிருந்தே திட்டமிட்டு ‘புரோகிராம்’ செய்யப்பட்டு, ஆற்றல் பெருக்கப்பட்டு உலக அளவில் இவர்களின் பிரவேசம் நடந்துவருகிறது. ‘ஒளிமிகு இந்தியாவின்' பதாகையை ஏந்தி, உலகை வெல்ல வளையவரும் வாலிபர் குழாம் இது. இந்தியாவை வல்லரசாக ஆக்கத் துடிப்போரின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள். இவர்களின் ஆளுமைக்கும் ஆதிக்கத்துக்குமான ஓர் உலகம் எப்பாடு பட்டேனும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். கண்டவரும் நுழைந்துவிடாதபடி அந்த ஏகபோக உலகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக, குண்டு துளைக்காத கவசங்களும், தாண்ட முடியாத மதிற்சுவர்களும் கட்டமைக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பின் ஒவ்வொரு படியும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு எட்டிவிடாத உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். கல்வி மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டுமென்பதிலிருந்து, ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகள் வரை சாமானியரின் குழந்தைகள் வென்றுவிடாத வகையில், முதல் சுற்றிலேயே அவர்கள் தோற்று, வெளியேறிவிடும் வகையில் சாதுரியமாக அமைக்கப்படுகின்றன. அப்படித்தான் ‘மெரிட்’ என்பது உறுதிப்படுத்தப்படும் என்பது கேள்விக்கப்பாற்பட்ட வேதமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ‘மெரிட்’ என்பதன் இலக்கணத்தையும், அதன் வடிகட்டு விதிகளையும் உருவாக்குபவர்கள் அவர்களேதான்.

‘டென்னிஸ் தெ மெனஸ்’ என்ற புகழ் பெற்ற கார்ட்டூன் சிறுவன், விளையாட்டு ஒன்றைத் தன் தோழன் ஜோயிக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சொல்கிறான், “விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம், ஜோயி!” இன்றைய இந்தியக் கல்விக் கொள்கை, அமைப்பு, விதிகள், அனைத்தையும் உருவாக்கி இயக்கிவருவது இந்த நாட்டின் மத்தியதர வர்க்கமும், அதற்கும் மேம்பட்ட வசதி படைத்தோரும்தான். இந்த வர்க்கங்களின் நலனுக்காக, அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் அவையெல்லாம்.

இந்தக் கல்விச் சிறை தகர்க்கப்பட்டாலன்றி, இந்தியாவுக்கு வளர்ச்சி இல்லை; ஜனநாயகம் இல்லை; மக்களுக்கு வாழ்வும், விடுதலையும் இல்லை.

- வே. வசந்தி தேவி,

கல்வியாளர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,

தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்