ஏ.ஜி.கே: மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்தவர்

தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் தலைவராக வாழ்ந்த அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கன் புதன்கிழமை (10.8.2016) மாலை காலமானார். தோழர் ஏ.ஜி.கே. என்று மக்களாலும் தோழர்களாலும் அழைக்கப்பட்டவர். தோழர் தியாகு தனது சிறை சுயசரிதையில் அவரைப் பற்றி இப்படிக் குறிப்பிடுவார்: “ஒருவர் நம்மோடு பத்தாண்டுகள் இருந்தும் நம்மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதவராக இருக்கலாம், வேறு சிலரோ நம்மோடு மிகக் குறைந்த காலமே இருந்திருப்பர். அவர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் வாழ்நாள் முழுமைக்குமானது. ஏ.ஜி.கே. எனக்கு அப்படித்தான். நான் அவரோடு ஒன்றாக இருந்தது சிறை மருத்துவமனையில் 10 நாட்கள் மாத்திரமே. வாழ்நாள் முழுமைக்குமான தாக்கத்தை ஏற்படுத்தினார் ஏ.ஜி.கே. என்றால், அதுதான் ஏ.ஜி.கே.”

60-களில் இன்றைய நாகப்பட்டினமான அன்றைய கீழத் தஞ்சையில் ஏ.ஜி.கே. அசலான மக்கள் தலைவராக இருந்தார். முதலில் திராவிடர் கழகம், பின்பு இடதுசாரி இயக்கம் என இரண்டின் சாரத்தையும் தன்னுள் ஏந்திய அவர், வெற்றிகரமான மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தார்.

செய்யாத குற்றமும் தண்டனையும்

அன்றைய கீழத் தஞ்சை முதலாளிகளுக்கு, நிலவுடைமையாளர்களுக்கு அவர் ஒரு துர்சொப்பனம். ஒடுக்கப்பட்ட மக்களின் கூலி உயர்வுக்காகவும், சுயமரியாதைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிறைய. ஒரு முறை, ஏ.ஜி.கே. தாக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்து மக்கள் கொந்தளித்தனர். அவரைத் தாக்கியதாகச் சொல்லப்பட்ட முதலாளியின் வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்து நொறுக்கினர். அந்த வீட்டிலிருந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த குழந்தைகளுக்கும் பெண் களுக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, ஏ.ஜி.கே. மருத்துவமனையில் இருந்தார். காயமடைந்திருந்த அவர் சாகட் டும் என போலீஸார் காத்திருக்க, அதற்குள் அந்தணப்பேட்டை யில் அந்தக் கொலைச் சம்பவம் நடந்திருந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஏ.ஜி.கே. சேர்க்கப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சீர்காழி கிளை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்த சம்பவம், புனைகதைகளை மிஞ்சக்கூடிய பரபரப்பு மிக்கது. கிளைச் சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றே காலிலும் கையிலும் விலங்கு மாட்டித் தெருவில் நடத்திச் சென்றனர். இதையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட அவர், வழியெங்கும் நின்ற மக்களிடம் பேசத் தொடங்கினார். மதியம் ஒரு மணிக்குக் கிளம்பிய ‘ஊர்வலம்’ மாலை 4.30-க்கு கிளைச் சிறையை அடைந்தது. இத்தனைக்கும் நீதிமன்றத்துக்கும் கிளைச் சிறைக்கும் இடையிலான தூரம் வெறும் ஒன்றேகால் கி.மீ. மாத்திரமே.

ரகசிய சங்கம்

சிறையின் இரும்புக் கம்பிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகச் சிறை வரலாற்றிலேயே சுதந்திர இந்தியாவில் சிறைப்பட்டோர் நலஉரிமைச் சங்கம் என்ற ரகசிய அமைப்பை நிறுவிய அவர், தியாகு, லெனின் போன்றோரின் துணையுடன் கட்டுக்கோப்பு மிக்க சிறைப் போராட்டத்தை திருச்சி மத்திய சிறையில் தொடங்கினார். தமிழகச் சிறை வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் அப்படி யான ஒரு சிறைப் போராட்டம் இல்லை என தியாகு குறிப்பிடு வார். அந்தப் போராட்டத்தையே 1983-ல் மற்ற சிறைகளுக்கு தியாகு போன்றோர் விரிவாக எடுத்துச் சென்றனர்.

ஏ.ஜி.கே.வை எப்படியாவது தூக்குமரத்தில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் மிக ஆர்வமாக இருக்க, 1973-ன் இறுதிவாக்கில் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். அவரது தண்டனைக் குறைப்புக்காக பெரியார், ஈ.வி.கே.சம்பத் போன்றவர்கள் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

எளிய வாழ்க்கை

1984-ல் முழு ஆயுள் தண்டனையும் கழிந்து விடுதலையானார் ஏ.ஜி.கே. 52 வயதுக்குப் பின்புதான் திருமணம், குழந்தைகள் என்று எளிய சந்தோஷங்கள் நிகழ்ந்தன. பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் மிகச் சரியான புள்ளியில் இணைத்தவர் அவர். சமரசமற்ற எளிய வாழ்க்கை அவருடையது. இது போன்ற அரிதான மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் எந்த ஏற்பாடும் நம்மிடம் கிடையாது. அவரைப் பற்றி நம்மிடமிருக்கும் சிறந்த சித்திரங்கள் தியாகுவின் எழுத்து வழி உருவாகும் சித்திரமும், ப.சு.கவுதமன் அவரிடமே உரையாடித் தொகுத்த ‘ஏ.ஜி.கஸ்தூரி ரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ எனும் புத்தகமும்தான். அவரது எதிரிகளால்கூடப் பறிக்க முடியாத உயிரை, அவரது 84-வது வயதில் இயற்கை பறித்துக்கொண்டது.

- சாம்ராஜ், எழுத்தாளர், தொடர்புக்கு: naansamraj@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்