ஒரு நூற்றாண்டின் கதைசொல்லி

செப்டம்பர் 16 கி.ராஜநாராயணன் பிறந்த நாள்

ராயங்கல் ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜன்’ என்கிற கி.ரா. இன்று 93 வயதை நிறைவுசெய்கிறார். 1,126 பிறைகளைப் பார்த்துவிட்ட பெருவாழ்வு அவருடையது. 24 வயதில் காசநோயால் தாக்கப்பட்டுப் பிழைப்பது அரிதென்று யாரும் பெண் கொடுக்கவே தயங்கிய ஒரு சூழலில், தனது தெருவிலேயே நான்கைந்து வீடு தள்ளியிருந்த கணவதி அம்மாளை மணந்துகொண்டவர். இன்றும் நாவலும் பத்தியும் எழுதிக்கொண்டு தமிழை மணக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். வாழ்வு யாரை என்ன செய்யும், எங்கே வைக்கும் என்று யாருக்குத் தெரியும்?

சிறுகதையாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறவியலாளர், கரிசல் காட்டு அகராதித் தொகுப்பாளர், கடித இலக்கியப் படைப்பாளி, பேராசிரியர் என எல்லா முகங்களையும் தாண்டி, இவர் 20-ம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த கதைசொல்லி. சுற்றி நடக்கும் அனைத்தையும் ‘கதை’களாகக் கண்டுகொண்டவர் கி.ரா.

தீண்டாமை பேசும் கதைகள்

தமிழ் வாழ்வின் பல விதமான கோலங்களையும் சலனங்களையும் கி.ரா.வின் கதைகளில் காணலாம். இன்றைக்கு விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்களைப் பெருநிறுவனங்கள் கையகப்படுத்திக்கொள்வது சட்டபூர்வமாகியுள்ளது. இத்தகைய அரசியலை கி.ரா. அன்றே படம்பிடித்துக் காட்டினார். கரண்டு, மாயமான், ஒரு வெண்மைப் புரட்சி முதலிய கதைகள் சிதிலம் அடைந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் தனிப்பட்ட வாழ்வையும் சமூக வாழ்வையும் கதைசொல்லிகளுக்கே உரிய நக்கலோடும் துக்கங்களோடும் சித்தரிப்பவை. பேதை கதை இன்றைக்கும் பெரிய பிரச்சினையாக உள்ள பாலியல் வன்முறையின் கோர முகத்தைக் கலை நயத்தோடு மாய யதார்த்தப் பாணியில் கையாள்கிறது.

சாதி, தீண்டாமை, விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை ஆகியவை குறித்தும் கிடை, நெருப்பு, கதவு, குருபூசை, ஜீவன் முதலிய கதைகள் அழுத்தமாகவும் கலாபூர்வமாகவும் பேசியுள்ளன.

மொழியின் சாவி

மொழியின் கதவைத் திறக்கத் தெரிந்த அலிபாபா கி.ரா. நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியிலுள்ள உயிரம்சத்தை உணர்ந்து சொல்லப்பட்டது போலவே அவர்களின் கதைசொல்லும் மரபையும் வித்தாரமாகக் கையாண்டுள்ளார். தமிழ் மரபுப்படி முதற்பொருளான நிலமும் பொழுதும் கருப்பொருட்களான உணவு, விலங்கு, தாவரம், பறவை, பூ, நீர்நிலை, தொழில், இசைக் கருவிகள், பாறை முதலிய பலவும் அவர் படைப்பில் ஆவணம்போலப் பதிவாகிக் கிடக்கின்றன.

நான் ஒரு தடவை கி.ரா.விடம், “உங்கள் தாய்மொழியான தெலுங்கில்தான் நீங்கள் வீட்டில் உரையாடுகிறீர்கள்; உங்கள் படைப்பில் வரும் கதைமாந்தர்கள் பலரும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அவர்கள் உங்கள் எழுத்தில் தமிழில் பேசுகிறவர்கள்போலப் படைத்துள்ளீர்களே, அது எப்படி?” என்று கேட்டேன். “எனக்கு தெலுங்கில் பேசத் தெரியுமே தவிர, எழுதுவதற்குத் தெரியாது. தெரிந்திருந்தால் தெலுங்கில்தான் எழுதியிருப்பேன். என்ன செய்வது.. வழியில்லை” என்பதுபோலப் பதில் சொன்னார்.

மரபின் விளைச்சல்

அவரது தாய்மொழிதான் தெலுங்கே தவிர, அவரது நனவிலி மனதில் பதிந்திருப்பவை தமிழ் மொழியும், தமிழ் இலக்கிய மரபுகளும்தான். அதனால்தான் கரிசல் மண் சார்ந்த மொழி வளமும் நிலக் காட்சிகளும் கருப்பொருளின் தமிழ்ப் பெயர்களும் அவர் படைப்பில் சரளமாக வந்து அமர்ந்துள்ளன. அதனால் அவர், இரண்டாயிரம் ஆண்டுத் தமிழிலக்கிய மரபின் விளைச்சல்தான் என்பதை அவரது ஒவ்வொரு படைப்பும் வாய் திறந்து உரக்கச் சொல்லிக் கொண்டிருக் கின்றன.

- க.பஞ்சாங்கம், தொடர்புக்கு: drpanju49@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

42 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்