காங்கிரஸை காப்பாற்றுவாரா பிரியங்கா?

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்க, கடைசி பிரம்மாஸ்திரமாகக் களமிறக்கப்படுகிறார் பிரியங்கா காந்தி. உபி தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சியினருக்குப் புது உற்சாகத்தைத் தந்திருக்கிறது. ஆனால், இந்த வியூகம் எந்த அளவுக்கு எடுபடும்?

உபியில் சுமார் 40 வருடங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ், இன்றைக்கு அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பலத்துடன் இல்லை. இதுபோன்ற சமயங்களில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் களமிறக்குவது, காங்கிரஸுக்குப் புதிய விஷயமல்ல.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வரிசையில் ராகுல் காந்தி திடீர் என நுழைந்தபோது எதிர்காலப் பிரதமராகப் பேசப்பட்டார். 2007-ல் தேசியப் பொதுச் செயலாளராகவும், 2013-ல் காங்கிரஸின் துணைத் தலைவர் பதவியிலும் அமர்த்தப்பட்டார். எனினும், எதிர்பார்த்ததுபோல் ராகுலின் மகிமை எடுபடவில்லை.

இதனால், காங்கிரஸாரின் பார்வை மீண்டும் பிரியங்கா மீது விழுந்திருக்கிறது. சொல்லப்போனால், கடந்த இரு தேர்தல்களாகவே பிரியங்காவைக் கொண்டு வர வேண்டும் என்று உபி காங்கிரஸார் குரல்கொடுத்துவந்தனர்.

இந்தியாவின் இதயம் என்றும், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் நுழைவு வாயிலாகவும் கருதப்படும் உபியில், அரியணை ஏறுவதன் அவசியத்தை அம்மாநில காங்கிரஸார் உணர்ந்திருக்கிறார்கள். பிரியங்காவின் வருகைக்காக அவர்கள் காத்திருப்பதன் பின்னணி இதுதான்.

கடந்த மக்களவைத் தேர்தலில் வீசிய நரேந்திர மோடி அலையால் உபியில் மொத்தம் உள்ள 80-ல் 75 தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜக. இதனால், உபி சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தீவிரமாகக் களம் இறங்குகிறது. ஆளும் கட்சியான சமாஜ்வாதி மற்றும் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் ஆகியவற்றுடன் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இக்கட்சிகளுடன் நான்காவதாக காங்கிரஸ் இணைவதே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரியங்காவின் அரசியல் செல்வாக்கு உயர, அவரது காதல் கணவரான ராபர்ட் வதேரா தடையாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. வதேரா மீதான குற்றச்சாட்டுகள், பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்குப் பலம். எனவே, பிரியங்காவுடன் ஒரு பிராமண முகமும் காங்கிரஸுக்குத் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, உபியின் மருமகளும், டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தவருமான ஷீலா தீட்சித் முதல் அமைச்சர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். உபியில் சுமார் 13 சதவிகிதம் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஷீலா, பிரியங்காவுடன் இணைந்து செயல்படுவார்.

ரேபரேலியில் சோனியாவுக்கும், அமேதியில் ராகுலுக்கும் என மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளராக உள்ளார் பிரியங்கா. 2012 உபி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளராக இருந்து பிரச்சாரம் செய்தார். இதில், அமேதியில் வெறும் இரண்டு சட்டசபைத் தொகுதிகளை காங்கிரஸால் பெற முடிந்தது. அதிலும், அதன் ஒரு எம்எல்ஏவான டாக்டர் முகம்மது முஸ்லிம், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், உபி தேர்தலையும் தாண்டி, அடுத்த மக்களவைத் தேர்தல் வரை காங்கிரஸாரை வலுவிழக்காமல் இருக்கச் செய்வதில் பிரியங்காவின் வருகை பலன் தரலாம் என்றே பார்க்கப்படுகிறது.

தொடர்புக்கு : shaffimunna.r@thehindutamil.co

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்