இயற்கையைக் காக்க மக்கள் இயக்கம் அவசியம்

By செய்திப்பிரிவு

வெள்ளத்தால் கேரளத்துக்கு ஏற்பட்ட சொத்துகளின் சேத மதிப்பு ரூ.26,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது. இதற்கும் அப்பால் இயற்கை, மனித, சமூக மூலதன இழப்பு எவ்வளவு என்பதை எளிதில் மதிப்பிட்டுவிட முடியாது. கேரளத்தின் மலைவனங்கள், சதுப்பு நிலங்கள், ஆறுகள் ஆகியவற்றைச் சிதைத்து உருவாக்கிய கட்டிடங்களும் அணைகளும் கல் குவாரிகளும்தான் இந்த இழப்பை ஏற்படுத்தியுள்ளன. மறுவாழ்வு, நிவாரணப் பணிகளுக்குத்தான் இப்போது முன்னுரிமை என்றாலும் வெள்ளச் சேதத்துக்கான காரணங்கள் எவை என்பதையும் அடையாளம் கண்டாக வேண்டும்.

அரசுகளின் அலட்சியம்

கேரளத்தில் மட்டும் அல்ல மேற்குத் தொடர்ச்சி மலையுள்ள அனைத்து மாநிலங்களிலும், நாட்டின் பிற பகுதிகளிலும்கூட இயற்கையை அழித்துவருகின்றனர். 1. இயற்கை வளத்தைக் காக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. 2. மனிதவளம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. சுகாதார வசதிகள், வேலைவாய்ப்புகள் போதிய அளவு உருவாக்கப்படவில்லை. இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்தும் வேலைவாய்ப்பு, வருமானத்துக்காகப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. (பாலக்காடு மாவட்டத்தில் பிளாச்சிமடா பஞ்சாயத்தில் கோகா கோலா நிறுவனம் நீர்வளத்தை வணிகநோக்கில் வரம்பின்றி உறிஞ்சி எடுத்தது. இதனால் நீர்வளம் குறைந்ததுடன் மாசுபடவும் நேர்ந்தது. நீர்வள இழப்பு மட்டும் ரூ.160 கோடியாக மதிப்பிடப்பட்டது.) 3. வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக வழங்கப்பட்ட அறிவியல் சார்ந்த ஆலோசனைகள் அரசுகளால் தொடர்ந்து அலட்சியப்படுத்தப்பட்டன. ஆதிரப்பள்ளி நீர்மின்சார திட்டத்தை வகுத்தவர்கள் தண்ணீர் கிடைக்கும் அளவை மிகையாக மதிப்பிட்டுவிட்டார்கள். எனவே, அதில் கிடைத்த மின்சாரத்துடன் ஒப்பிடுகையில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்து அணையைக் கட்டினார்கள். பராமரிப்புச் செலவும் அதிகமாகவே இருக்கிறது. 4. சமூக மூலதனத்தில் கடுமையான அழிவு ஏற்பட்டதை அரசுகள் லட்சியம் செய்யவில்லை.

உள்ளூர் சமூகங்களின் உரிமைகள்

மனிதர்கள் உருவாக்கிய மூலதனங்களை மட்டும் பார்க்கக் கூடாது. மனிதர்கள் உருவாக்கியவை, இயற்கை உருவாக்கியவை, மனிதர்களாலான மூலதனம், சமூகமாகிய மூலதனம் ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். ஒரு பகுதியின் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை அங்கே வாழும் மக்களுக்குத்தான் இருக்கும் என்பதை இனி புதிய நிர்வாகத்தில் அங்கீகரிக்க வேண்டும். இயற்கை வளங்களைக் காக்க இப்போது எதிர்மறையான ஊக்குவிப்புகளைத்தான் அளிக்கிறோம். அதையும் ஊழலும் கெடுபிடியும் மிக்க அதிகாரவர்க்கம் மூலமாகவே அளிக்கிறோம். இது மாற வேண்டும்.

சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டிய அனைத்துத் தரப்பினருக்கும், வெளிப்படையான விதத்தில் ஊக்குவிப்புகளை அளிக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு எங்களுடைய குழு அப்படிப் பல பரிந்துரைகளைக் கூறியிருக்கிறது. ‘சர்ப்ப காவுகள்’ என்று அழைக்கப்படும் பாம்புகளின் வசிப்பிடத்தைச் சிதையாமல் காக்க, அப்பகுதி மக்களுக்கு சேவைக் கட்டணம் தர வேண்டும். மண்ணில் கரித்தன்மையை அதிகரிக்க, ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை எருவை இட மானியம் தர வேண்டும்.

‘கேரளத்தின் எந்தப் பகுதிக்கான வளர்ச்சி, காப்புத் திட்டங்களிலும் இனி உள்ளூர் மக்கள் விலக்கப்பட மாட்டார்கள், அவர்களிடம் ஆலோசனை கலந்து அவர்களுடைய ஒத்துழைப்புடனேயே திட்டங்கள் அமல்படுத்தப்படும்’ என்ற உறுதியை கேரள அரசு அளிக்க வேண்டும். அது எந்த வளர்ச்சி, காப்புத் திட்டம் என்பதையும் அவர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். இதை அமல்படுத்த வார்டு, கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் நகர, மாநகர ஆட்சி மன்றங்களுக்கும் அதிகாரம் அளித்து உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு அறிக்கைகளைத் தயாரித்து சூழலைக் காக்க வேண்டும்.

மக்களை உறுப்பினர்களாகக் கொண்ட பல்லுயிர்ப் பெருக்க மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அந்தக் குழுக்களே எல்லா நிர்வாகப் பணியையும் மேற்கொள்ள உரிய அதிகாரங்களையும் வழங்க வேண்டும். பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளை அணுக சுற்றுலாப் பயணிகளிடம் சேவைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிய நடைமுறைகளுக்குப் பிறகு சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உள்ளது உள்ளபடி தொகுத்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.

வன உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். பழங்குடிகள் மட்டுமல்லாது வனங்களில் பாரம்பரியமாக வாழுவோர் அனைவரும் வனப்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், மேலாண்மை செய்யவும், மரம் அல்லாத இதர வனப் பொருட்களைச் சந்தைப்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். வனப் பகுதிகளில் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகளால் சுற்றுச்சூழலுக்கு என்ன நேரிட்டது என்பதை உடனுக்குடன் இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, இந்தத் தகவல்கள் மறைக்கப்படாமல் பெறப்பட வழி செய்ய வேண்டும். தகவல்களைத் திரிக்காமல் பதிவு செய்துவந்தால் சூழலுக்குக் கேடான அம்சங்களை உடனுக்குடன் களைந்துவிடலாம்.

பாதுகாப்பான எதிர்காலம்

மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் பற்றிய நிபுணர் குழுக்களின் அறிக்கைகள், கஸ்தூரிரங்கன் குழு அளித்த அறிக்கை, ஊம்மன் வி ஊம்மன் குழு அறிக்கை ஆகியவை மக்கள் பார்க்கும் வகையில் பதிவேற்றப்பட வேண்டும். தங்களுடைய பகுதியில் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமாக இருந்தாலும், அரசுக்குச் சொந்தமாக இருந்தாலும் அந்த நிலம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, அதில் உள்ள தாவரங்கள் எப்படிப்பட்டவை, அதன் நீரியியல் தன்மை என்ன, அந்த சுற்றுவட்டாரம் எப்படிப்பட்டது என்ற ஆவணங்களை இனி உள்ளாட்சி மன்றங்கள் தயாரித்து தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைக் காக்கும் பெரும் பொறுப்பை அந்தந்த உள்ளாட்சி மன்றங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும். நிலங்களின் தன்மைக்கேற்ற பொருத்தமான மேலாண்மை நடைமுறைகளை உள்ளாட்சி மன்றங்கள் பரிந்துரைக்கலாம். சுற்றுச்சூழலைக் காக்க ‘ஸ்மார்ட்போன்’ போன்ற நவீனத் தகவல் தொடர்பு சாதனங்களைக்கூட மக்களும் உள்ளாட்சி அமைப்புகளும் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் நிலப்பகுதிக்கும் பருவங்களுக்கும் ஏற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்களை வகுப்பதில் மக்களும் உதவ வேண்டும்.

1990-களில் கேரளத்தில் தொடங்கப்பட்ட ‘மக்கள் திட்ட இயக்கம்’ போல அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு-வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போதைய நிதியமைச்சரான தாமஸ் ஐசக் இதை அப்போது தலைமையேற்று நடத்தினார். இதை ஐசக் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே கேரள மக்களால் பழைய இயற்கைச் சூழலை மறு உருவாக்கம் செய்வதுடன், காப்பாற்றவும் முடியும். கேரள அரசு இத்தகைய முற்போக்கான அணுகுமுறையைக் கையாள வேண்டும். அதன் மூலம்தான் எதிர்காலத்தில் இதைப்போன்ற அதிக மழை வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது முழுக்க இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது சேதங்களைக் குறைத்துக்கொள்ள முடியும்.

- மாதவ் காட்கில்

 மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை

ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர்.

 தமிழில்: சாரி,  தி இந்து ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

32 mins ago

சினிமா

37 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்