அமெரிக்கா ஏன் தோற்கிறது

By டேவிட் எல்.கிர்ப்

கல்வியைச் சந்தைப் பொருளாக்குவதில் அமெரிக்காவின் தோல்வி மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்!

பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு தகர்ந்துவிட்டது, இதற்கான மாற்றை இந்தத் தொழிலே தகவமைத்துக்கொண்டுவிடும் என்று இன்றைய கல்வித் துறை சீர்திருத்தவாதிகள் நினைக்கின்றனர். போட்டி ஏற்பட்டால் இந்தத் துறை சீரடைந்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர்.

வேறு சிலரோ, இணையத்தின் மூலம் சீரமைத்துவிடலாம் என்று எதிர்மறையாகச் சிந்திக்கின்றனர். இரு தரப்பாருமே கல்வித் துறையின் பிரச்சினையை ‘சந்தை' தீர்த்துவிடும் என்றோ, 'தொழில்நுட்பம்' சரிசெய்துவிடும் என்றோதான் நினைக்கின்றனர். இது மனித ஆற்றல் சம்பந்தப்பட்டது இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியம் என்றே கருதவில்லை.

இரண்டு உத்திகளுமே அவற்றை முன்மொழிந்த வர்கள் கொடுத்த பீடிகை அளவுக்கு வெற்றிபெறவில்லை. அதற்கு நல்ல காரணங்களும் உண்டு. ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான உறவுகளைச் சீர்குலைத்துவிட்டு, கல்வித் தரத்தை மேம்படுத்த முடியாது. தங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; அடையக்கூடிய நல்ல லட்சியம் இருக்கிறது; பள்ளிக்கூடத்தில் படிப்பதன் மூலம் வாழ்வில் சாதனை படைத்துவிட முடியும் என்ற எண்ணத்தை மாணவர் கள் மனதில் விதைக்க வேண்டும். இதை வலுவாக மேற்கொள்ளும்போதுதான் ஆசிரியருக்கும் மாணவ ருக்கும் இடையில் ஒரு பிணைப்பு ஏற்பட முடியும்.

சந்தைகளுக்கேற்ற வாசகங்கள்

கல்வித் துறையின் கொள்கை வகுத்தலில், சந்தை களுக்கேற்ற வாசகங்கள்குறித்தே அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. உயர் தரத்திலான வாசிப்புத் திறனும், கணிதப் புலமையும்தான் வெற்றிக்கான அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர் களுக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு ஊதா நிற அட்டைகள் (தண்டனையாக) தரப்படுகின்றன. நன்றாக மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, சிறப்பூதியம் போன்ற சலுகைகள் தரப்படுகின்றன.

வர்த்தக நிறுவனங்கள் எப்படி லாபம் தராத கடைகளை மூடி, எங்கே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமோ அங்கே கடை திறப்பதைப் போல, குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் மூடப்படுகின்றன. புதிய ஆசிரியர்கள், புதிய நிர்வாகிகளுடன் வேறு இடத்தில் நவநாகரிக மோஸ்தர்களுடன் ‘மாதிரி'ப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இணையத்தால் என்ன செய்துவிட முடியும்?

இணையம் மூலம் படிக்க உதவும் ‘கே-12' போன்ற பள்ளிக்கூடங்கள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் இப்போது பெருகிவிட்டன. இவையெல்லாம் பள்ளிக் கூடங்கள் என்று அழைப்பதற்கே அருகதையற்றவை. தங்களுடைய குழந்தைகள் எங்கே படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோர்களுக்குத் தரப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு எந்தப் பலனும் ஏற்பட்டுவிடவில்லை. மில்வாகியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் இந்தச் சோதனையை முதலில் நடத்தியது. ஆனால், கல்வித் தரத்தில் அது சற்றும் முன்னேறவில்லை.

கல்வியின் அடித்தளம்

கல்வித் துறை சீர்திருத்தவாதிகள் சந்தைகள், போட்டிகள்குறித்து மட்டும்தான் பேசுகின்றனர்; நல்ல கல்விக்கான அடித்தளமான திறமை மிகுந்த ஆசிரியர்கள், பாடம் கற்பதில் ஆர்வம் மிகுந்த மாணவர்கள், சவாலான பாடத்திட்டம்குறித்துப் பேசுவதே இல்லை. காலம்காலமாக இந்தத் துறைகளில் ஏற்படும் சவால்களையெல்லாம் எதிர்கொண்டு இன்னமும் முனை மழுங்காமல் இருக்கும் உத்திகள்தான் கல்வித் தரத்தைத் தொடர்ந்து பராமரித்துக்கொண்டு வருகின்றன.

“எந்த விதமான உற்பத்தியாக இருந்தாலும், சேவையாக இருந்தாலும் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருங்கள்” என்று மேலாண்மை நிர் வாகத்தில் நிபுணரான டபிள்யு. எட்வர்ட்ஸ் டெமிங் 50 ஆண்டுகளாக இடைவிடாமல் சொல்லிவந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானிய நிறுவனங்கள், ‘திட்டமிடு, செய், சரிபார், செயல்படு’ என்ற கொள்கையைத்தான் கடைப்பிடிக்கின்றன.

ஆசிரியர்-மாணவர் பிணைப்பு

நிறுவனங்கள் தங்களுடைய நிர்வாகத் திறனாலும், சரியான அமைப்பு முறையைக் கையாள்வதாலும், புதிய கருத்துகளையும் தொழில்நுட்பங்களையும் நிறு வனத்துக்குள்ளேயே கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாலும்தான் முன்னேறுகின்றன என்று ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் வரலாற்றாசிரியரும் புலிட்சர் விருது பெற்றவருமான ஆல்பிரட் டி. சாண்ட்லர் பல உதாரணங்களுடன் விளக்கிக் காட்டியிருக்கிறார்.

இது போன்ற கலாச்சாரத்தை உருவாக்க நீண்ட நாட்கள் பிடிக்கும், ஆடம்பரமான எண்ணம் கொண்ட நிர்வாகிகள் இந்த முயற்சிகளைச் சீர்குலைத்துவிடுவார்கள். வெற்றிகரமான அனைத்துக் கல்வி முயற்சிகளும் வலுவான ஆசிரியர்-மாணவர் பிணைப்புமூலம்தான் உருவாகியுள்ளன. அந்தப் பிணைப்புக்கு ஆதரவாக நிர்வாக அமைப்புகளும் உதவியுள்ளன. பள்ளிப் படிப்புக்கு முந்தைய வகுப்புகளில் மாணவர் களைத் தயார்செய்யும் நிறுவனங்கள் அவர்களிடம் கல்வி வேட்கையை விதைக்கின்றன.

அக்கறையுள்ள ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களைவிட மூத்தவர்கள் பலருடன் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இப்போது கல்வித் துறையில் புதிதாக முளைத்துள்ள வியாபாரப் போட்டியின் காரணமாகப் பட்டயம் படிக்கும் ஆர்வத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய படிப்பைப் பாதியில் கைவிடுகின்றனர். இணையம் மூலம் படிக்கின்றனர். கற்றலில் ஆழ்ந்த பிரச்சினை உள்ளவர்களைத் தொழில் முறைக் கல்வியாளர்கள் கையாள்கின்றனர்.

வெற்றியும் தோல்வியும்

பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிறுவப்பட்ட அமைப்பு, புதிய கல்வி முறையில் 100 ஆரம்பப் பள்ளிகள் நன்றாக மேம்பட்டிருப்பதாகவும், 100 மேம்படவில்லை என்றும் கூறுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இடையே நல்ல நம்பிக்கை நிலவிய இடங்களில் பள்ளிகள் நல்ல தரத்தை எட்டின. அப்படி இல்லாத 100 பள்ளிகள் தோல்வியடைந்தன.

நாடு முழுக்கக் கல்வியைக் கண்காணிக்கும் ‘பிக் பிரதர்ஸ் பிக் சிஸ்டர்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற அமைப்பு லட்சக் கணக்கான வளரிளம் மாணவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது. அந்த அமைப்பு ஏற்பாடு செய்த, மலையேறும் நிகழ்ச்சியாக இருந் தாலும், அருங்காட்சியகம் அமைப்பதாக இருந்தாலும் மாணவர்களும் பெரியவர்களும் இணைந்தே செய்தனர். இதனால், அவர்களிடையே பரஸ்பர மரியாதையும் அன்பும் அதிகரித்தது.

‘நியூயார்க் சிடி யுனிவர்சிடி’ மாணவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, படிப்பைப் பாதியில் கைவிடுவோர் எண்ணிக்கை குறைந்து, பட்டம் பெறுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. இந்தத் திட்டங்களும் நடவடிக்கைகளும் ஆசிரியர்கள், மாணவர்கள் பிணைப்பு அவசியம் என்பதை உணர்த்தியபோதிலும், கற்றல்-கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்துக்காகக் கோடிக் கணக்கான டாலர்களை பப்ளிக் பள்ளிகள் செலவழித்து வருகின்றன. தொழில்நுட்பம்தான் முக்கியம் மற்ற அம்சங்கள் அல்ல என்று அவை வாதிடுகின்றன. தொழில்நுட்ப ஆதரவாளர்கள் என்னதான் கூறி னாலும், அவற்றால் விளைந்த பலன்கள் ஏமாற்றத் தைத்தான் தருகின்றன என்கிறார் டாம் வாண்டர் ஆர்க். இவர் பில்–மெலிண்டா கேட்ஸ் நிறுவனங்களின் கல்வித் தொழில்நுட்பத்தை வழங்கும் அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

திறமையுள்ள ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தைக் கையாண்டால், அது கல்வித்தரத்தை நன்றாக வளர்த்து விடும். சொல்லித்தருவதும் கற்றுக்கொள்வதும் மனம் சார்ந்தது. அதற்குத் தொழில்நுட்பம் மட்டுமே உதவி செய்துவிட முடியாது. கணினியோ சந்தையோ இதைச் சாதிக்க முடியாது. எனவே, வியாபார தந்திரங்கள் கல்வித் துறையில் வெற்றிபெறாமல் போவதில் வியப்புக்கே இடமில்லை.

- © தி நியூயார்க் டைம்ஸ்,
தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்