இந்தியாவை அறிவோம்: சத்தீஸ்கர்

By செய்திப்பிரிவு

மாநில வரலாறு

இந்தியாவின் மத்தியக் கிழக்கு மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். தலைநகர் ராய்ப்பூர். கி.மு. 4-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் தெற்கு கோசலை என்று அழைக்கப்பட்ட பிரதேசம் இது. 36 கோட்டைகள் எனும் பொருள்படும் இந்தப் பிரதேசம், ரத்தன்பூரின் ஹேஹேய வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாநில முகைமையின் கீழ் பல பகுதிகள் இணைக்கப்பட்டு இந்தப் பிரதேசம் உருவானது.

இதன் தலைநகராக ராய்ப்பூர் இருந்தது. சுதந்திர இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே சத்தீஸ்கர் தனி மாநிலக் கோரிக்கை இருந்துவந்தது.

1970-களில் இந்தக் கோரிக்கை எழுச்சிபெற்றது. 1990-களில் இது உச்சமடைந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தக் கோரிக்கைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. 2000 நவம்பர் 1-ல் இது தனி மாநிலமானது.

புவியியல் அமைப்பு

இந்தியாவின் 10-வது பெரிய மாநிலமான சத்தீஸ்கர், 1,35,191 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இந்தியாவின் பரப்பளவில் இது 4.11%. ஒரு சதுர கிமீ பரப்பில் 189 பேர் வாழும் மக்கள் அடர்த்தியைக் கொண்டது இம்மாநிலம் (தமிழ்நாட்டில் 555 பேர்). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மக்கள்தொகை 25,545,198. நாட்டின் மக்கள்தொகையில் இது 2.11%. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கர் மக்கள்தொகையில் இந்துக்கள் 93.25%.

இவர்களில் 50% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடியினர் 34%. பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 12%. கிட்டத்தட்ட 65%-க்கும் மேற்பட்டோர் கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள். முஸ்லிம்கள் 2.02%. கிறிஸ்தவர்கள் 1.92%. பிற சமூகத்தினரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

சமூகங்கள்

சமவெளிப் பகுதிகளில் தெலி, சத்னாமி, குர்மி இனத்தவர்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். வனப் பகுதிகளில் வசிப்பவர்களில் கோண்டு, ஹால்பி, ஹால்பா, கமர் ஆகிய சமூகத்தினரின் ஆதிக்கம் உண்டு. சத்தீஸ்கரின் முக்கிய நகரங்களில் வங்காளிகளும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். ராய்ப்பூர், பிலாஸ்பூர், ராய்கர் போன்ற நகரங்கள் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நகர்ப்புற மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.

துர்க், பிலாய் நகர் போன்ற பகுதிகளில் சுரங்கத் தொழில் சார்ந்த தொழில்களைச் சார்ந்து தொழிலாளர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வேலை இல்லாத நாட்களில் ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். சத்தீஸ்கரின் எழுத்தறிவு 84.05%. ஆண்கள் 90.58%, பெண்கள் 73.39%.

ஆறுகள்

மாநிலத்தின் முக்கிய நதி மகாநதி. சத்தீஸ்கரின் கங்கை என்று அழைக்கப்படும் நதி இது. மகாநதியின் மொத்த நீளம் 851 கிமீ. அதில், 286 கிமீ பாய்வது இம்மாநிலத்தில்தான். பஸ்தார் பகுதியில் பாயும் நதிகளைத் தவிர சிவநாத், அர்பா, ஜோங்க், ஹஸ்தேவ் போன்றவை மகாநதியின் கிளை நதிகள்.

மகாநதியும் அதன் கிளை நதிகளும் மாநிலத்தின் நீராதாரத்தில் 53.48% பங்கு வகிக்கின்றன. மகாநதி, கோதாவரி, கங்கை, நர்மதை ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நீராதாரங்கள். சிவநாத், அர்பா, இந்திராவதி, ஹஸ்தேவ், சோன் ஆகிய நதிகளும் சத்தீஸ்கரை வளமாக்குகின்றன.

காடுகள்

சத்தீஸ்கர் நிலப்பரப்பு 59,772 சதுர கிமீ காடுகள் அடர்ந்தது. அதாவது, 44.21% காடுகளைக் கொண்ட மாநிலம் இது. வனப் பகுதிகளில் 43.13% காப்புக் காடுகள், 40.21% பாதுகாக்கப்பட்ட காடுகள். 3% வனப் பகுதிகள் மிகவும் அடர்ந்த காடுகள். 25.97% காடுகள் ஓரளவு அடர்த்தியானவை.

12.28% காடுகள் திறந்தவெளிக் காடுகள். 0.09% குறுங்காடுகள். மூன்று தேசியப் பூங்காக்களும், 11 வன விலங்குச் சரணாலயங்களும் உள்ளன. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் நிறைந்த மாநிலம் இது.

நீராதாரம்

மாநிலத்தின் வடிநிலத்தில் மகாநதியும் கோதாவரியும் 85% பங்கு வகிக்கின்றன. நல்ல மழைப்பொழிவு கொண்ட மாநிலம். எனினும், நீராதாரங்களை முறையாகப் பாதுகாக்காததன் காரணமாக அடிக்கடி வறட்சி ஏற்படுவதுண்டு. பயன்பாட்டுக்குரிய மேற்பரப்பு நீர் 4,17,20,00,000 கன மீட்டர்; நிலத்தடி நீர் 11,96,00,00,000 கன மீட்டர்.

மாநிலத்தின் நீர்ப்பாசனப் பகுதி 43 லட்சம் ஹெக்டேர். பாசன நீரும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. 69% பாசன நீர்தான் பயன்படுத்தப்படுகிறது. மூன்று பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், 26 நடுத்தரத் திட்டங்கள், 2,892 சிறு திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மாநிலத்தின் பட்ஜெட்டில் பாசன வசதிகளுக்காக ரூ.246.47 கோடி ஒதுக்கப்படுகிறது.

கனிம வளம்

அபரிமிதமான கனிமவளம் கொண்ட மாநிலம். நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% சத்தீஸ்கருடையதுதான். நிலக்கரி உற்பத்தியும் அதிகம், இரும்புத் தாது உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும், வெள்ளீய உற்பத்தியில் முதலிடத்தையும் வகிக்கும் மாநிலம். சுண்ணாம்பு, டோலமைட், பாக்ஸைட் போன்றவை அதிகமாக உற்பத்திசெய்யப்படுகின்றன.

பொருளாதாரம்

பொருளாதாரத்தில் நாட்டின் 17-வது இடத்தில் இருக்கும் மாநிலம். 2018-19-ம் ஆண்டின் சத்தீஸ்கரின் ஜிடிபி ரூ.3.26 லட்சம் கோடி. 2017-18-ல் இம்மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 6.7%. தேயிலை உற்பத்தியில் நாட்டிலேயே 17-வது இடத்தில் இருக்கும் மாநிலம்.

2017-18-ல் 1,425 லட்சம் டன் நிலக்கரி, 348 லட்சம் டன் இரும்புத் தாது, 351.54 லட்சம் டன் சுண்ணாம்புக்கல் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. குவார்ட்ஸ், பளிங்கு, வைர உற்பத்தியும் மாநிலப் பொருளாதாரத்துக்கு வளம் சேர்க்கின்றன.

அரசியல் சூழல்

தேசியக் கட்சிகளே இம்மாநில அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2000-ல் மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமானது சத்தீஸ்கர். எனவே, முதல் சட்டமன்றமானது 1998 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. மொத்தம் 90 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 48 இடங்களுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அஜித் ஜோகி முதல்வரானார்.

2003-ல் நடந்த தேர்தலில் 50 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. ரமண் சிங் முதல்வரானார். 2008 தேர்தலில் 50 இடங்கள், 2013 தேர்தலில் 49 இடங்களில் வென்று ரமண் சிங் 15 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் இருந்தார். 2018 தேர்தலில் 68 இடங்களில் பெரும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். மொத்தம் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் பாஜக சொல்லிவைத்தாற்போல் 2004, 2009, 2014 தேர்தல்களில் 10 இடங்களில் வென்றது. இம்முறை காங்கிரஸ் கடும் போட்டியாக இருக்கிறது.

முக்கியப் பிரச்சினைகள்

மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலம். மாநிலத்தின் 47% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்பதால், சமூகப் பிரச்சினைகள் அதிகம். வன்முறைக்கும் அது காரணமாக இருக்கிறது. ‘இந்தியாவின் அரிசிக் கிண்ணம்’ என்று அழைக்கப்படும் மாநிலம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதில் ஆட்சியாளர்கள் காட்டும் சுணக்கம், விவசாயிகளை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

மாநிலம் உருவாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகும், தொழில் துறை முன்னேற்றம் என்பது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. போக்குவரத்து வசதியில் மிகவும் பின்தங்கிய மாநிலம். சுகாதார வசதிகளும் மிக மோசம். மாவட்ட மருத்துவமனைகளே பல பகுதிகளில் இல்லை என்பது இம்மாநிலத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்