பெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்

By கோம்பை எஸ்.அன்வர்

தமிழரின் கடல் வாணிப வரலாற்றில் எனக்கிருக்கும் ஆர்வத்தை அறிந்த நண்பர் ஒருவர், அந்தத்  தகவலைச் சொன்னார். ‘தெக்க, ஒரு பெருமாள் கோயில்ல பழங்கால கப்பல் படம் வரைஞ்சிருக்கும். அங்க குஞ்சாலி மரைக்காயரை சனங்க கும்புடுறாங்க’. தமிழ் இனக் குழுக்களில் 14-ம் நூற்றாண்டு முதல் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் மரைக்காயர்கள். 16 -ம் நூற்றாண்டில் போர்த்துகீசியரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைந்த குஞ்சாலி மரைக்காயர்கள் குறித்த நூல்கள், திரைப்படங்கள் பற்றியெல்லாம்  கேள்விப்பட்டிருந்த எனக்கு, அது புதிய செய்தி.

மிதமான வெயிலடித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், அந்தப் பெருமாள் கோயிலைத் தேடி, தூத்துக்குடி மாவட்டத்தில், மணப்பாடு அருகில் உள்ள மாதவன்குறிச்சியைச்  சென்றடைந்தேன். கண்ணில் பட்ட ஓரிரண்டு பெண்கள் அப்படி ஒரு கோயிலே ஊரில் இல்லை என்று சாதித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நடுத்தர வயதுப் பெண், "எங்க குலக் கோயில்தான் அது, வாங்க" என்று என்னை ஆர்வத்துடன் அழைத்துச் சென்றார். கோயிலின் இரும்புக் கேட்டை தள்ளியவுடன் உடனடியாகக் கண்ணில் பட்டது, மண்டப முகப்பில் வரையப்பட்டிருந்த, பழங்காலத்து பாய்மரக் கப்பலின் படம். மண்டபத்தினுள்ளே பல கிராம தெய்வங்களுடன் கட்டம் போட்ட வெள்ளை கைலியும், பச்சை நிறச் சட்டையும், வெள்ளை துருக்கி குல்லாவும் அணிந்தவாறு, தாடியுடன், குஞ்சாலி மரைக்காயர் அழகிய ஓவியமாகக் காட்சியளித்தார்.

ஒரு நூற்றாண்டு யுத்தம்

இந்தியப் பெருங்கடலில், 16-ம்  நூற்றாண்டு வரையில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தங்குதடையின்றி நடந்துகொண்டிருந்த கடல் வணிகத்தை, குறிப்பாக நறுமணப் பொருள் வணிகத்தைத் தங்களுக்கு மட்டுமே உரியது என்று ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர் ஐரோப்பிய போர்த்துக்கீசியர். அக்காலத்தில் இந்திய மன்னர்களுக்குக் கடற்படையென்று தனியாக எதுவும் கிடையாது. வணிகக் கப்பலில் செல்லும் பாதுகாப்புப் படைகளே கடற்கொள்ளையர்களைச் சமாளித்துக் கொண்டன.

அப்போது, தமிழகக் கடல் வணிகம் என்பது பெரும்பாலும் தென்னக முஸ்லிம்கள் வசம் இருந்ததால், போர்த்துக்கீசியரை எதிர்த்து நிற்க வேண்டிய பொறுப்பும் அவர்களையே சார்ந்திருந்தது. கோழிக்கோடை  ஆண்டுவந்த  சாமுத்ரி, முக்குவ மீனவக் குடும்பத்தில், வீட்டுக்கு ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்று உத்தரவிட்டான். இவ்வாறு பலப்படுத்தப்பட்ட  கடற்படையைக் கொச்சியைச் சார்ந்த குஞ்சாலிகள் தலைமையேற்று, கேரள, தமிழக, இலங்கைக் கடற்கரைகளில் போர்த்துக்கீசியரோடு சண்டையிட்டனர். கோழிக்கோடு, பொன்னானி, கொல்லம், கொச்சி, காயல்பட்டினம், தூத்துக்குடி, கீழக்கரை, வேதாளை என்று பல்வேறு இடங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சண்டைகள் நடைபெற்றன.

பீரங்கி பொருத்தப்பட்ட ‘காரவல்’ என்ற போர்த்துக்கீசிய பெரும் கப்பல்களோடு மோதுவது சிரமம். ஆனால், அக்கப்பல்களை உடனுக்குடன் திசை திருப்புவது எளிதல்ல என்பதோடு, அவை கடலில் விரைந்து செல்ல வேகமான காற்றின் உதவியும் தேவை. எனவே, குஞ்சாலிகள் பெரும் கப்பல்கள் புக முடியாத ஆற்று முகத்துவாரங்கள்  போன்ற குறுகிய இடங்களில் மறைந்திருந்து, சிறு படகுகளில் விரைந்து, துடுப்பைப் போட்டு காரவல்களைத் தாக்கிவிட்டுத் திரும்பும் உத்தியைக் கையாண்டு, வெற்றியும் பெற்றனர். சிறிய படகுகள் என்பதால்,  போர்த்துக்கீசிய பீரங்கிகளுக்கு அவை எளிதாகச் சிக்கவில்லை. வரலாற்று ஆய்வாளர்

கே.கே.என்.குறுப்பு ‘இந்தியாவின் கடற்படை மரபுகள்: குஞ்சாலி மரைக்காயர்களின் பங்கு’ என்ற நூலில் ‘இது போன்ற பல படகுகளை ஆற்றின் முகத்துவாரத்தில், குறுகிய நீர்ப் பரப்பிலும் குஞ்சாலிகள் மறைத்துவைத்திருந்தனர். அவை ஒன்றுசேர்ந்து போர்த்துக்கீசிய காரவல்களைத் தாக்கி, அவற்றின் பாய்மரங்களைத் தீயிட்டு செயலிழக்கச் செய்தன’ என்கிறார்.

மரைக்காயர்களின் போர்த் தந்திரத்துக்கு ஏற்றவாறு மாதவன்குறிச்சி அருகில் கடலில் கலக்கும் ஆற்று முகத்துவாரம் அமைந்துள்ளது. குஞ்சாலிகள் என்னதான் திறம்பட சண்டையிட்டு சில வெற்றிகளை அடைந்திருந்தாலும், போர்த்துக்கீசியரின் உயர்ரக ஆயுதத் தொழில்நுட்பத்துக்கு முன்னர், முடிவில் தோல்வியையே தழுவினர். மணப்பாடு போர்த்துக்கீசியர் கைவசமிருந்தது. குஞ்சாலி மரைக்காயர்களில் ஒருவர் அல்லது அவர்களது தளபதிகளில் ஒருவர் மாதவன்குறிச்சி அருகில் போரிட்டு வீர மரணம் அடைந்திருப்பாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், போரில் மரணத்தைத் தழுவியோரைத் தெய்வமாக்கிக் கௌரவிப்பது இம்மண்ணின் கலாச்சாரம்.

ஆணியில்லாத கப்பல்

மரைக்காயர் வழிபாட்டுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் ஒவ்வொருவர் சொல்லும் கதையும் சற்று மாறினாலும், பெரும்பாலானவை வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன.  நம் நெடிய பாரம்பரியத்தில் தொலைந்துபோய்விட்டவற்றின் பதிவுகளாகவும் அந்தக் கதைகள் அமைந்துள்ளன.  உதாரணமாக, புரட்டாசி மாதம் கோயில் கொடையின் போது  நடைபெறும் வில்லுப்பாட்டில் ‘நம்ம மரைக்காயருக்கு 999  கப்பல் இருந்துச்சு. அவுக ஆயிரமாவது கப்பல, ஆணியில்லாத கப்பலா இருக்கணுமுன்னு முடிவு பண்ணுனாக...’ என்று சேர்ம சுந்தரி தாமோதரன் குரலை உயர்த்தி, இழுத்துப் பாடும் போது, ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தமிழர்களின் கப்பல்களை ஆணிகள் பயன்படுத்தாமல் வலுவாகக் கட்டும் திறன் பெற்றிருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

மரைக்காயரின் ஓவியத்துக்கு முன்னே உள்ள சிறு மேடையில் அமர்ந்தவாறு, தனது வில்லுப்பாட்டினைத் தொடரும் சேர்ம சுந்தரி குழுவினர், ஆணியில்லாத கப்பலை உருவாக்குவதற்காகக் காட்டுக்குள் சென்ற மரைக்காயரும், விஸ்வகர்மாக்களும் கபாலசாமி குடியிருந்த மரத்தை விவரம் தெரியாமல் எதேச்சையாக வெட்டுவதிலிருந்து, மரைக்காயர் கடல் போரில் மரணமடைந்தது, பூசைக்குத் தகுதிபெற்றது வரை விவரிக்க, இதனூடே பெருமாள் கோயில் கொடை நடைபெறுகிறது. வில்லுப்பாட்டில் சகோதரர்களாக வர்ணிக்கப்படும் குன்னாலி, குட்டி அலி என்ற பெயர்கள் குஞ்சாலி மரைக்காயர்களின் வரலாற்றுடன் வரும் மரைக்காயர் பெயர்களுடன் ஒத்துப்போகின்றது.  கேரளக் கடற்கரையில் ஆரம்பித்த மரைக்காயர்களின் கடற்பயணம் மணப்பாடு அருகே சோக முடிவை அடைந்ததையும் வில்லுப் பாட்டு விவரிக்கின்றது. இந்தச் சம்பவம் சுமார் 400-லிருந்து 500 வருடங்களுக்குள் நடந்திருக்கலாம் என்று அனைவரும் கருதுகின்றனர்.

தொன்மங்களின் பொருள் விளக்கம்

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் கேரளத்து குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றுடன் ஒத்துப்போனாலும், வில்லுப்பாட்டு அவர்களை ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரையின் அரசர்களாகச் சித்தரிக்கின்றது. 400 வருடங்களுக்கும் மேலான வரலாறு, காலப்போக்கில் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மாறியிருக்கிறது என்று இதை எடுத்துக்கொள்ளலாம். ஆயிரமாவது கப்பலை ஆணியில்லாத கப்பலாக்குவதில் மரைக்காயர் காட்டும் ஈடுபாடு, இழந்த தமிழர் கடல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கருதலாம். 

ஐரோப்பிய காலனியத்துக்கு எதிராக, போர்த்துக்கீசியருடன் போரிட்டு வீர மரணமடைந்த குஞ்சாலி மரைக்காயர்களின் நினைவாக, சுதந்திர இந்தியா, 1954-ல் ‘ஐ.என்.எஸ் குஞ்சாலி’ என்ற இந்திய கடற்படைத் தளத்தை நிறுவிக் கௌரவித்தது. குஞ்சாலிகள் மறைவுக்குப் பின்னர் பெரும் வீழ்ச்சியைக் கண்ட தமிழகத்தின் கடல் வணிகப் பாரம்பரியம் கிட்டத்தட்ட நம் நினைவுகளிலிருந்து அடியோடு அகன்றுவிட்டது என்றே கூறலாம். கேரளா தவிர்த்து, தமிழகத்தில் குஞ்சாலிகள் பெரிதும் மறக்கப்பட்ட நிலையில், தென் தமிழ்நாட்டில் வருடா வருடம், மாதவன்குறிச்சி பெருமாள் கோயில் கொடை விழாவில் தொடர்ந்து உரிய மரியாதை செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

- கோம்பை எஸ்.அன்வர்,

தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர்,

வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: anvars@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

26 mins ago

வலைஞர் பக்கம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்