2 மினிட்ஸ் ஒன்லி 25: அன்பின் நன்றி!

By ஆர்.ஜே.பாலாஜி

நம் ஊரில் காலாண்டு, அரையாண்டு விடுமுறையைப் போல வெளிநாட்டி னரும் விடுமுறைக் கால சுற்றுலாவை வெகுவாகக் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் அவர்களுக்கு முக்கியமான விடுமுறை சுற்றுலாக் காலமே கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை ஒட்டிய ஒரு மாத காலம்தான். சொந்த ஊரிலோ அல்லது வெளிநாட்டுக்குச் சென்றோ அந்த நாட்களை முழு ஓய்வுக் காலமாக பலர் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் என் நண்பரின் வீட்டுக்கு, அமெரிக்காவில் இருந்து அவரது நண்பர் ஒருவர் இந்தியாவை சுற்றிப் பார்க்க தனது குடும்பத்தினருடன் வந்திருந் தார். புத்தாண்டு விடுமுறையை முடித்துவிட்டு ஊருக்குப் புறப்படத் தயாராக இருந்த அவரை, இரண்டு நாட்களுக்கு முன்பு சந்திக்க வாய்ப்பு அமைந்தது. அந்த மனிதருக்கு 50 வயதிருக்கும். டாட்டூ ஆர்டிஸ்ட். அமெரிக்காவில் பிரபலமாக உள்ள டாட்டூ ஆர்டிஸ்ட் கலைஞர்களில் அவரும் ஒருவர். அவர் உடம்பு முழுவதும் வரைந்திருந்த டாட்டூ ஸ்டைலைப் பார்த்தபோதே அவருடன் ஏதாவது பேச வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும்.

தனக்கு ஓவியம் வரையத் தெரியும். அதையே ஒரு தொழிலாக மாற்றிக்கொண் டால் என்ன என்ற யோசனையாலேயே அவர் ஒரு டாட்டூ கலைஞராக மாறியிருக்கிறார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆகவே, கடந்த 25 ஆண்டுகளாக அவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

தனக்குள் கிரியேட் ஆகும் ஒரு டாட்டூ மாடலை முதலில் அவரது உடம்பிலோ அல்லது அவரது மனைவியின் கைகளிலோ பரிசோதித்த பிறகே தன்னைத் தேடி வரும் மனிதருக்கு வரையத் தொடங்குகிறார். அவரை நான் பார்த்தபோதே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் போலவும், நம்ம ஊரைச் சேர்ந்த விராட் கோலியை நினைவுப்படுத்தும் விதமாக இருந்தார்.

எனக்கும் பயங்கர ஆசை வந்து, ‘எங்கே டாட்டூ மெஷின்? நாமும் வரைந்து கொள்வோம்?’ என்று கேட்டேன். அதுக்கு அவரோ, ‘நான் இந்தியாவுக்கு விடுமுறை கொண்டாட்டத்துக்காக வந்ததால் அதை யெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு வந்தேன்!’ என்றார். தொடர்ந்து அவரிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.

திடீரென ஒரு யோசனை.. டாட்டூ கலைஞர் களில் என்ன பெரிய மனிதர், சின்ன மனிதர்? வரையத் தெரிந்தால் போதாதா? என்ற யோசனையே அது. அதற்கும் அவரிடம் பதில் இருந்ததுதான் ஆச்சர்யம்.

டெலிவிஷன், விசிடி பிரபலமாகத் தொடங்கிய 90-களின் ஆரம்பத்தில் வீடியோ கேம், தொலைக்காட்சிகள் வழியே டபிள்யூ டபிள்யூ ஈ (WWE) மாதிரியான மல்யுத்தப் போட்டியும் பிரபலமாக ஆரம்பித்தது. ஒரு விளையாட்டு வீரரோ, நடிகரோ பரவலாக டாட்டூ வரைந்து கொள்வதை ஃபேஷனாக்கிக் கொண்டனர்.

அந்த மாதிரி காலகட்டத்தில் அமெரிக்கா வில் டாட்டூ வரைவதில் பிஸியாகத் தொடங் கிய இந்த மனிதர் தன்னிடம் யார் டாட்டூ வரைந்துகொள்ள வந்தாலும், ‘இந்த வகை டாட்டூ ஓவியத்தை உருவாக்கியது நான். இதை வேறு யார் பயன்படுத்தினாலும் என்னிடம் முறையே அனுமதி பெற வேண்டும்’ என கையொப்பம் வாங்கிக்கொள்வாராம்.

இது என்ன வேடிக்கையாக இருக்கிறது என்ற பாணியிலேயே வருபவர்கள் எல்லோ ரும் டாட்டூ வரைந்து சென்றிருக்கிறார்கள்.

அதுவே, 90-களின் காலகட்டம் முடிந்து 2000-க்கு பிறகான காலகட்டத்தில் சோனி மாதிரியான நிறுவனங்கள் விடியோ கேம் போன்ற விஷயங்களை பிரபலமாக்கத் தொடங்கின. அதேமாதிரி பல்வேறு நிறுவனங்கள் கிரிக்கெட் தொடங்கி பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களையும் வீரர்களையும் வீடியோ கேம் வழியே குழந்தைகளிடம் கொண்டு செல்லத் தொடங்கின. உதாரணத்துக்கு விராட் கோலி கையில் ஒரு டாட்டூ வரைந்திருந்தால் அதே ஒரிஜினல்தன்மை வேண்டும் என்பதற்காக அந்த மாதிரி டாட்டூவை வீடியோ கேமில் வரும் பொம்மை விராட் கோலி கைகளிலும் வரைய வேண்டிய சூழல் இருந்தது. அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த டாட்டூ ஓவியத்தை வரைந்தவருக்கு காப்புரிமை அடிப்படையில் ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்ற சூழல் உருவாகும்.

பிற்காலத்தில் எப்போதாவது ஒருநாள் இந்த மாதிரியான தேவை இருக்கும் என் பதை அமெரிக்காவில் இருந்து என் நண்ப ரின் வீட்டுக்கு வந்திருந்த இந்த மனிதர் முன் கூட்டியே திட்டமிட்டிருக்கிறார். அதனால் தான் வரைந்த டாட்டூ ஓவியங்களுக்கு முறையே கையொப்பம் பெற்று வைத்திருக் கிறார். அந்த மனிதரின் தொலைநோக்குப் பார்வையும், உழைப்பும் எனக்கு பெரும் வியப்பாக இருந்தது.

தான் செய்யும் தொழிலுக்கு எதிர் காலம் இருக்கு என்பதை யோசித்து 20 ஆண்டு களுக்கு முன்பே திட்டமிட்டு ஒரு வேலையை செய்திருக்கிறாரே! ஒரே வேலையை இங்கே பலரும் செய்யலாம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதில் தனித்து, வெற்றியுடன் மேலே வருவார்கள். அதுக்கு காரணம் சரியாக திட்டமிட்டு உழைப்பை வெளிப் படுத்தும் யுக்திதான். இந்த அமெரிக்க மனிதர் வாங்கிய 15 கையொப்பம் தான் அவரை இன்று மில்லினியர் பட்டியலில் கொண்டுபோய் அமர்த்தியுள்ளது. அதுக் குக் காரணம் அவ ரோட புத்தி, திட்ட மிடல் தான். இந்த தொலை நோக்குப் பார்வை யான உழைப்பை நாமும் செய்தால் நிச்சயம் வெற்றி அடைய முடியும். இப்படி ஒரு மனிதரைப் பற்றி இந்த ‘2 மினிட்ஸ் ஒன்லி’ தொடரோட 25-வது வாரத்தில் பகிர்ந்துகொள்வது ரொம்பவே மகிழ்ச்சி.

கடந்த 25 வாரங்களாக நல்ல மனிதர்கள், நல்ல விஷயங்கள் என பகிர்ந்துகொண்ட திருப்தியோடு இந்த அளவில் இந்தத் தொடரில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொள்கிறேன்.

‘ஏன், இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் இல்லையா?’ என நீங்கள் கேட்கலாம். என் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட சில வேலை களை நோக்கிய திட்டமிடல் இருப்பதால் இதுபோதும். அதனால்தான் இந்த பிரேக்.

பெரும்பாலும் வயதானவர்கள்தான் இந்த மாதிரி நம்பிக்கை தொடர் எழுதணும் என்பதை உடைத்து என்னைப் பொன்ற சின்ன பையனுக் கும் வாய்ப்பு அளித்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றி. தொடர்ந்து படித்து என்னை உத்வேகப்படுத்திய வாசகர் களுக்கும் நன்றி. என்னோட பயணத்தில் இது ஒரு மைல்கல்.

எல்லோரும் உங்களை நன்றாக பார்த் துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அருகில் இருப்பவர்களையும் பார்த்துக் கொள்ளுங் கள். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

மறுபடியும் சந்திக்கும்வரை…. ‘டு பி ஹியூமன், ஆல் இட் டேக்ஸ் ஜஸ்ட் 2 மினிட்ஸ் ஒன்லி!

- நிறைந்தது

எழுத்தாக்கம் : ம.மோகன்

ஓவியங்கள் : ஷ்யாம், முத்து, வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

விளையாட்டு

36 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்