சச்சார்: சமூக நீதியின் நாயகன்!

By ம.சுசித்ரா

ந்திய இஸ்லாமியர்களின் சமூக-பொருளாதார நிலையையும் இந்திய மண்ணில் அவர்களுடைய நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் ஆழ்ந்து தெளிந்து அலசிய ராஜேந்தர் சச்சார் கமிட்டி அறிக்கை வெளியான காலம் அது. 10 ஆண்டுகள் இருக்கும். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற மதுரை காக்காத்தோப்பில் உள்ள மூட்டா அரங்கத்துக்கு வந்திருந்தார் சச்சார். அவர் உரையைத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய பேராசிரியர் அந்தக் கூட்டத்துக்கு வர முடியவில்லை. திடீரென்று அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவருடைய முதுமையையும் பொருட்படுத்தாமல் சச்சாரின் குரல் கம்பீரமாக அரங்கை நிறைத்தது. அன்றைய தேதியில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான அரசுத் திட்டங்களையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துப் பேசினார். டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தமிழ் ஈழப் பிரச்சினை முதல் கூடங்குளம் அணு உலை விவகாரம் வரை உள்ளும் புறமுமாகப் பேசியது வியப்பளித்தது. ஏப்ரல் 20 அன்று தனது 94 வயதில் டெல்லியில் உயிர்நீத்த சச்சாரை நினைவுகூர பல காரணங்கள் இருக்கின்றன.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் சச்சார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யூ.சி.எல்.) முன்னோடி. 1986 முதல் 1995 வரை பி.யூ.சி.எல். தலைவராகச் செயலாற்றியவர். 1985-ல் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டறியும் உண்மைக் குழு உறுப்பினராகவும் கடைசி மூச்சுவரை செயலாற்றியவர்.

இத்தனைக்கும் தங்கத் தொட்டிலில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை பீம் சென் சச்சார் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தவர். தனது தந்தை முதல்வராக இருந்த காலத்திலேயே பஞ்சாப் சோசலிசக் கட்சியின் தலைவராகச் செயல்பட்டவர் ராஜேந்தர் சச்சார். அதே காலகட்டத்தில் பஞ்சாப் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு சச்சார் எழுதிய கட்டுரை ஒன்று அவருடைய வாழ்க்கை பதிவாகக் கவனிக்கவைக்கிறது: “ஒரு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் நேரு. எங்களுடைய வீட்டில் காலை சிற்றுண்டி அருந்த நேருவுக்கு நட்பு அழைப்பு விடுத்தார் அப்பா. சிறு பிராயத்திலிருந்து நேருவின் ஆளுமையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட என்னைப் போன்ற இளைஞனுக்கு அது ஒரு அரிய தருணம். ஆனால், சோஷலிசப் பாதையை எங்களுக்குக் காட்டிய நேரு தன்னுடைய சில தவறான கொள்கைகளால் அதிலிருந்து இடறிவிட்டதாக எங்களுடைய கட்சி அப்போது முடிவுக்குவந்திருந்தது.

எனவே, காலை சிற்றுண்டியை நேருவுடன் சேர்ந்து சாப்பிடப்போவதில்லை என்று அப்பாவிடம் சொன்னேன். அன்று என்னுடைய அகந்தையை நினைத்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது. இந்தியாவின் மகத்தான தலைவரான நேருவுக்கு என்னைப் போன்ற ஒரு பொடியன் பொருட்டே அல்ல. ஆனாலும், சமரசமற்ற, சோஷலிசம் மீது வலுவான நம்பிக்கைகொண்ட ஒரு இளைஞனின் அந்த நடவடிக்கையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று நினைக்கிறேன். இன்னும் அந்தக் குணத்தை நான் இழந்துவிடவில்லை.”

பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்து வளர்ந்தவர் சச்சார். தேசப் பிரிவினையின்போது தன் கண்முன்னே இந்துக்கள் கொன்று குவிக்கப்படுவதைக் காணச் சகிக்காமல் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இந்தியா வந்தவர். டெல்லிக்கு வந்து சேரும் வழியில் இஸ்லாமியர்கள் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்ணெதிரே கண்டவர். ஆறாத வடுவாக அவர் மனதில் பதிந்த அந்தக் காட்சிகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் என்பதைப் பொறுத்தே ஒரு சமூகம் பலவீனமானதாக மாற்றப்படுகிறது என்கிற உண்மையைச் சுட்டிக்காட்டின.

இத்தகைய அனுபவங்களினால்தான் 2005-ல் உருவாக்கப்பட்ட சச்சார் கமிட்டியில், சச்சாரைத் தவிர ஆறு பேர் இடம்பெற்றிருந்தாலும் அதில் சச்சாரின் பங்களிப்பு அளப்பரியது என்கின்றனர் சமூக அறிஞர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2006-ல் வெளியிட்ட அந்த ஆய்வறிக்கை சரித்திரத்தில் இடம்பிடிக்கக் காரணம் அதில் வெளிவந்த சில புள்ளிவிவரங்களே!

தலித்துகள், பழங்குடியினரைக் காட்டிலும் இந்தியாவில் சமூக-பொருளாதாரரீதியாக இஸ்லாமியச் சமூகத்தினர் பின்தங்கிய நிலையில் அமிழ்த்தப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்தது. சச்சார் கமிட்டி அறிக்கை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐஎஃப்எஸ். ஆகிய பொறுப்புகளில் 3.2% மட்டுமே இஸ்லாமியர்கள் என்று சுட்டிக்காட்டியது. இஸ்லாமிலும் சாதிரீதியான பிரிவுகளும் பிளவுகளும் இந்தியாவில் நிலவுவதை வெளிக்கொணர்ந்தது. வட இந்திய இஸ்லாமியர்களுக்கும் தென்னிந்திய இஸ்லாமியர்களுக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது என்று காட்டியது. அதே நேரத்தில் இடஒதுக்கீட்டினால் தென்னிந்திய இஸ்லாமியர்கள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துவருவதையும் எடுத்துரைத்தது.

“இத்தனை இடர்பாடுகளுக்கு இடையில் தாங்கள் ‘தேச விரோதிகள் அல்ல’, ‘பயங்கரவாதிகள் அல்ல’ என்பதை அன்றாடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இஸ்லாமியர்கள் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்களால் சமூக-பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் அடைய முடிவதில்லை. பொதுவெளியிலும் அரசு இயந்திரத்தாலும் எப்போதுமே சந்தேகக் கண்ணோட்டத்துடன் தாங்கள் பார்க்கப்படுவதாக மருகுகிறார்கள். இது அவர்களுடைய ஆழ்மனதை அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது” என்றது அந்த ஆய்வறிக்கை. இந்திய இஸ்லாமியர்களின் அவலநிலையை வெளிக்கொணர்ந்த அந்த அறிக்கையின் மூலம் சமூக நீதியின்நாயகன் ஆனார் சச்சார்.

மரண தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர் சச்சார். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை நீக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். டப்ளின் தீர்ப்பாயத்தில் ஒரு நீதிபதியாகப் பொறுப்பேற்று ஈழத்தில் நடந்தது தமிழ் இனப் படுகொலை என்றும் ராஜபக்சே போர் குற்றவாளி என்றும் உரக்கக் கூறினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் புது டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னின்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அணு உலைகளின் தீமைகளைத் தெளிவுபடுத்தினார். மாட்டிறைச்சி தடைச் சட்டம், தேசத்துரோகச் சட்டம் (124ஏ) உள்ளிட்டவை மக்கள் விரோதச் சட்டங்கள் எனக் கடுமையாக எதிர்த்தார். மதத்தின் பெயரால் நடைபெற்றுவரும் அத்துமீறல்களைக் கண்டித்தார். கருத்துரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயகக் கலாசாரத்தை இடைவிடாது ஆதரித்தார்.

மனித உரிமைக்கான எந்த ஒரு இயக்கமோ, கூட்டமோ அவர் இன்றி முழுமை பெறாது என்று சொல்லும் அளவுக்கு நெருக்கடியான சூழல் எங்கு உருவானாலும் அங்கு முன்னின்ற உரிமைப் போராளி, சமரசமற்ற சமூகப் போராளி சச்சார்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

19 mins ago

சினிமா

24 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்