எனக்கு ஏன் தமிழகம் பிடிக்கும்?

By பால் சக்கரியா

நான் தனித்து ஆலோசிப்பதும் மற்றவர்களிடம் சொல்வதும் இதுதான்: ‘கேரளத்தை விட்டு, இந்தியாவில் வேறு எங்காவது வசிக்க நேருமானால் அது தமிழ்நாடாகவே இருக்கட்டும்!’ கூடவே இதையும் சேர்த்தே சொல்வேன்: ‘வெப்பநிலை பரவாயில்லை. ஊரின் பரந்த மனம்தான் வெப்பநிலையைவிட முக்கியமானது.’

அரை நூற்றாண்டாகத் தமிழ்நாட்டுக்கு வந்துபோகும் உறவை வைத்துச் சொல்கிறேன், தமிழகம் யாருடனும் அந்நியரைப் போலப் பழகுவதை நான் பார்த்ததில்லை. சில சமயங்களில் அரசியல் ஏற்படுத்திய கொந்தளிப்புகளை இயல்புக்கு மாறான சம்பவங்கள் என்றே நான் ஒதுக்குவேன். பரந்த மனப்பான்மைதான் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை உணர்வு. சந்தேகமோ சகிப்பின்மையோ அல்ல. திராவிடக் கலாச்சாரம் விரும்புவது வெளியேற்றத்தை அல்ல; ஏற்றுக்கொள்ளலைத்தான் என்பது என் நம்பிக்கை. நான் அறிந்தவரையில், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் அமைதியானது. அதேசமயம், ‘சாது மிரண்டால்...’ என்ற பழமொழி உண்மையும்கூட. தூண்டப்பட்டால் வெள்ளந்தியும் ரெளத்திரராக மாறிவிடுவார்.

தமிழ் அரசியலும் அண்டையிலிருக்கும் கேரள அரசியலும் வேறுபட்டவை. கேரளத்தில் கம்யூனிஸ்ட் முன்னணிக்கும் காங்கிரஸ் முன்னணிக்கும் இடையில் ‘நாற்காலி விளையாட்டு’ நடக்கிறது. இரண்டு அணிகளும் நிலைபெற்றிருப்பது - உண்மையைச் சொல்லி விடுகிறேனே - அவரவர்களுக்காக மட்டுமே. மலையாளிகளுக்காகவோ கேரளத்துக்காகவோ அல்ல. ஆக, அவர்களுக்கு எந்தத் தத்துவமும் இல்லை. ஆனால், தமிழகத்தில் முதன்மையான இரு கட்சிகளும் ஒரே திராவிடக் கொள்கையின் கிளைகள்தாம். தலைவர்கள்தாம் அவற்றின் வேறுபட்ட அடையாளங்கள். இந்த 50 ஆண்டுகளில் இரு கட்சிகளும் தன்னலத்தைக் காத்துக்கொண்டே தமிழ் மக்களின் நலன்களையும் முன்னெடுத்திருப்பதாகவே வெளியிலிருந்து பார்க்கும் எனக்குத் தோன்றுகிறது.

அரசியல் தலைவர்கள் மீதான தமிழ் மக்களின் வழிபாட்டு மனோபாவம் அசாதாரணமானதுதான். மலையாளிகள் அளவுக்குக் குற்றம் காண்பவர்கள் அல்லர் தமிழர்கள். குற்றம் காண்பவர்களின் மொத்தக் குத்தகையான கேரளம், இன்ஜின் தகராறு ஏற்பட்ட வண்டிபோல எங்கும் செல்லாமல் முட்டிமுட்டி நிற்கத் தொடங்கி நாட்கள் பல ஆயிற்று. இங்கே தென்படும் பளபளப்பெல்லாம் அந்நிய மண்ணில் உழைத்த பணத்தின் விளைவே.

இன்னொன்றையும் சொல்லாமல் இருக்க முடியாது. மலையாளத்தில் ‘குதிரை ஏறுதல்’ என்று ஒரு பிரயோகம் உண்டு. நிலவுடைமை - காலனிய நாட்களில் ‘எஜமானர்கள்’ குதிரை மேல் அமர்ந்து சாமானிய மக்களை விரட்டியும் மிதித்தும் நடத்திய கொடுங்கோன்மையைச் சுட்டும் சொல்லாடல் அது. தமிழக அரசியலில் இந்த மனோபாவம் இப்போதும் நிலவுவதாகத் தோன்றுகிறது. கட்சிக் கொடி வைத்த காருடன் சாலைகளில் நடத்தப்படும் அரசியல்வாதிகளின் இந்தத் தேரோட்டம் திராவிடக் கொள்கைகளுக்கு வெகு தூரத்தில் இருப்பது.

சரி, நிறை-குறைகளைத் தாண்டி சார்பில்லாத ஓர் இடத்தில் நின்று தமிழக அரசியலை மதிப்பிட்டால் அது எப்படி இருக்கும்? இந்த அரை நூற்றாண்டில் தமிழகத்தில் கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்த திராவிட இயக்கத்தால் முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் மாபெரும் தோல்வி என்றால், சாதியின் கூர்முனையை இன்னும் அது முறிக்கவில்லை. பிராமணியத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள், அதே பிராமணியத்துடன் பங்கு போட்டுக்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

சந்தர்ப்பவாதமான இந்துத்துவ சக்திகளுடனான கூட்டு, திராவிடக் கொள்கைகளை என்றென்றைக்குமாக ஊனப்படுத்தியிருக்கிறது. வகுப்புவாத பாசிஸத்துக்கு எதிராக உருக்குக் கோட்டையாக நிற்க வேண்டிய திராவிட இயக்கம், அதன் வேர்களை மறந்து பிராமணிய சக்திகளுக்கு முன்னே கைகூப்பியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் அவலமோ, திராவிட மக்களின் அவலமோ மட்டுமல்ல.

இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற நம்பிக்கையாளர்களுக்கு நேர்ந்திருக்கும் அவலம். அதிமுகவின் இன்றைய நிலையைப் பாருங்கள்! திராவிட இயக்கம் அதன் சறுக்கல்களிலிருந்து எழுந்திருக்க வேண்டும். அதன் வேர்களிலிருந்து பாடம் படிக்க வேண்டும். தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் மட்டும் அல்ல; இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக அமையும் அது!

- பால் சக்கரியா, மலையாள எழுத்தாளர், சமூகவியல் அறிஞர்
தமிழில் : சுகுமாரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்