நான் எப்படிப் படிக்கிறேன்? - கல்வியாளர் வே. வசந்தி தேவி

By மு.முருகேஷ்

என் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் எனக்கு வெவ்வேறு விதமான வாசிப்பு இருந்திருக்கிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம் சிறுவயதில் பள்ளியில், எட்டு-ஒன்பது வகுப்புகளில் படிக்கும்போது, என் பெற்றோர்களால் உருவாக்கப்பட்டது. அப்போது நாங்கள் வசித்தது திண்டுக்கல்லில். அப்பா, சென்னை புத்தக விற்பனையாளர்களிடமிருந்து புத்தகங்களை வரவழைத்த வண்ணம் இருப்பார்.

அப்போது வாசித்தவை: சார்லஸ் டிக்கின்ஸ், வால்ட்டர் ஸ்காட், வில்கி காலின்ஸ் போன்ற புகழ்பெற்ற 19-ம் நூற்றாண்டு இங்கிலாந்து நாவலாசிரியர்கள். ஆர்தர் கோனான் டாய்லின் ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பலமுறை வாசித்திருக்கிறேன்.

தமிழ்ப் பத்திரிகைகளில் வரும் தொடர் கதைகள், கல்கியின் அனைத்துத் தொடர்களும் வாசித்தது உண்டு. கல்லூரிக்கு வந்த பின் தத்துவார்த்தப் புத்தகங்களில் ஆர்வம் உண்டாயிற்று. விவேகானந்தரின் ‘ஞானயோகம்’ என் பக்தி மார்க்க நம்பிக்கையைப் புரட்டிப் போட்டது. அடுத்து, பிரம்மஞானம் (Theosophy), இங்கர்சாலின் நாத்திகவாதம் குறித்த புத்தகங்களைக் கொஞ்ச காலம் வாசித்தேன். சீக்கிரமே அவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, மார்க்ஸிய நூல்களிடம் திரும்பினேன்.

1975-1980 வரை அதிகம் ஆட்கொண்டவை அன்று வளர்ந்துகொண்டிருந்த புதிய இடதுசாரிச் சிந்தனைகள், ஹெர்பர்ட் மர்கூஸ, அல்தூஸர் போன்றவர்களின் எழுத்துக்கள். பின்தங்கிய நாடுகளின் நசிவுக்குக் காரணமான ஏகாதிபத்தியத்தின் தொடர்ந்த சுரண்டலைப் பற்றி விளக்கும் நூல்களிலும் மூழ்கினேன்.

இளம் பருவத்துக்குப் பின் வாசிக்கத் தவறியவை படைப்பிலக்கியங்கள். இன்றுவரை கவிதை வாசிப்பதே கிடையாது. ஏனோ கவிதை என்னைத் தொடுவதில்லை. மாறாக, பாரதியின் கவிதைகளை வாசித்திருக்கிறேன். என் மகள் இருபது ஆண்டுகளுக்கு முன் என்னைக் கடிந்துகொண்டாள். 'படைப்பிலக்கியங்களே வாசிக்காவிட்டால், நீ வறட்சி தட்டிப் போய்விடுவாய்' என்றாள். விழித்தெழுந்து, புகழ்பெற்ற நாவல்கள் சிலவற்றைக் கொஞ்ச நாட்கள் வாசித்தேன். அப்படி விரும்பி வாசித்த எழுத்தாளர்கள் அமிதவ் கோஷ், சல்மான் ருஷ்தி, விக்ரம் சேத், காப்ரியல் கார்சியா மார்க்கேஸ், அருந்ததி ராய் ஆகியோரின் நாவல்கள்.

தமிழில் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவல், ஜெயமோகனின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். சிறுபத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக அதிகம் வாசிப்பவை, உலகில் இடதுசாரி இயக்கங்களின் புதிய எழுச்சி குறித்தவை. குறிப்பாக, லத்தீன் அமெரிக்க இளஞ்சிவப்புப் புரட்சிகள், சோஷலிஸம் இன்று பெற வேண்டிய புதிய வடிவம் போன்றவை தொடர்பான புத்தகங்கள் அவை. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் பலரையும் வருத்திக்கொண்டிருக்கும் அடிப்படைக் கேள்விகள் குறித்தவை அந்த நூல்கள். 20-ம் நூற்றாண்டு சோஷலிஸத்தின் பலவீனங்களையும் ஸ்டாலினிஸத்தையும் தவிர்த்த, புதிய சோஷலிஸம் பிறக்கும் பாதைகள் எங்கேனும் தெரிகின்றனவா என்ற தேடலில் தென்பட்ட புத்தகங்கள் அவை.

எந்தப் புத்தகமாக இருந்தாலும், நாவல், சிறுகதைகளாயினும், மனதில் நிறுத்த வேண்டியவற்றை அடிக்கோடிட்டு வாசிக்கும் பழக்கம் வெகுகாலமாக இருக்கிறது. அதனால், வாசிப்பின் வேகம் குறைவதை உணர முடிகிறது. அவ்வப்போது என்னை ஆட்கொள்ளும் கருத்துக்கள், கவலைகள் குறித்துத்தான் என் வாசிப்பு இருக்கிறது. தற்போது வாசித்துக்கொண்டிருப்பது ரொமிலா தாப்பர் எழுதிய ‘தி பாஸ்ட் அஸ் பிரெசண்ட்’.

- வே. வசந்தி தேவி, கல்வியாளர் மற்றும் மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்